என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர்"

    • பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நகரப்பகுதியான உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7-ந் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.

    அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை உடனடியாக சீரமைத்தனர்.

    இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதோடு அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் டேங்க் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.
    • ரசாயன கழிவு நீர் அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது

    கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன கழிவு நீர் புகுந்தது

    இதனால் கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திடீரென ரசாயன நீர் புகுந்ததைக் கண்டித்து கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
    • அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.

    பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4½ வயது பெண் குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இறந்ததாக கூறப்படும் 4½ வயது குழந்தை வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்களை கொண்டு, குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வயிற்றுப்போக்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது என்றார்.

    • நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.

    அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.

    தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர்கள் பேராசிரியர் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்புளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது, நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்ய வேண்டும், குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை, ஏற்கனவே பிரேத பரிசோதனை கூடம் இருந்த நிலையில் தற்போது அது செயல்படவில்லை. டாக்டர்கள் இருப்பதில்லை. நோயாளிகள் சிகிச்சை அளிக்க சென்றால் உடனே ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று அனுப்பும் நிலை உள்ளது என்றனர்.

    அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகிவிட்டது. நாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து பிடித்து கொண்டு வந்தால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் ஊதியம் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் மக்களை பாதிப்படையை செய்யும் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் விவ சாயத்திற்கு பயன் படுத்தப்படும் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, இரணியல், ரெயில் நிலையங்களில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் விற்பனை செய்யும் அனைத்து மின்சாதன பொருட்களிலும் தமிழ் மொழி இடம் பெற வேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமிழ் மொழியில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி
    • மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையின் மேற்கூரை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், புகார் வந்ததால் கடையில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்தக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோட்டார் பகுதி மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை சரி செய்யும் வகையில் கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    தற்பொழுது சாலையில் மழை நீர் தேங்காமல் கழிவு நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தற்பொழுது கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் கழிவு நீரோடையின் மேல் மூடிகள் அமைக்கப்படும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    அகற்றப்பட்ட பிறகும் பொதுமக்கள், வியாபாரிகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில்லா மாநகராட்சியாக நாகர்கோவில் மாநகராட்சி மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கழிவுநீர் ஆறாக ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெறும் காலில் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் சித்திரை வீதிகள் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்கள் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. இதனால் பக்தர்கள் காலணி அணிந்தபடி கிரிவலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு சித்திரை வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி ஆறாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் முகச்சுளிப்புடன் அந்தப் பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அங்குள்ள கடை வியாபாரிகள் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் ஓராண்டாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தோம். எந்த வித நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரையில் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வில்லாபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.

     மதுரை

    மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரில் மழை நீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் சரி வர அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகள் தொடர் கதையாக உள்ளன.

    மதுரை மாநகராட்சி 86-ம் வார்டான வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில், கடந்த ஒரு வார காலமாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் தவிர கொசுத்தொல்லை உள்பட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது தொடர்பாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, வில்லாபுரம் ஆர்ச் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது.
    • கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

     பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தின் அடியில் மழைக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுசுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொடிய நோய்கள் பரவும் நிலை உள்ளது. இது குறித்து ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது. அப்படி கரைபுரண்டு வரும் சாக்கடை கழிவு நீரை தடுப்பு கற்கள் மூலம் தடுத்து நிறுத்தியும் சிறிது சிறிதாக கரைந்து மீண்டும் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் .மூக்கை பிடித்துக் கொண்டுதான் நடந்து செல்ல முடிகிறது.அது மட்டுமில்லாமல் நடந்து செல்லும் போது அந்த கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பலமுறை ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் குறை சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது ரெயில்வே சம்பந்தப்பட்டது என்று கைவிரித்து விடுகிறார்கள்.இதனால் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆகவே இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். 

    • கீழக்கரையில் கழிவுநீர் கலப்பதால் கடல் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
    • உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இருந்து தினந்தோறும் 15 லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட கழிவுநீர் நேரடியாக கடலில் கலந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. அதோடு தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது.

    ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல்நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-

    கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.

    கீழக்கரை நகரில் ஆண்டு கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், கட்டிடக் கழிவுகள் கொட்டும் பகுதியாக கடற்கரை மாறி வருகிறது.

    இதற்கு நிரந்த தீர்வு காண கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து விவசாயத்திற்கோ அல்லது மின்சாரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்த வேண்டும்.இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேருந்து நிலையத்தில் கழிவுநீர் ஓடுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்
    • நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

    கரூர்:

    கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து, கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். தென் மாநிலங்களின், நுழைவு வாயிலாக உள்ள கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடத்தில், இரவு நேரத்தில் விளக்குகள் எரிவது இல்லை. நாள் தோறும் சுத்தம் செய்வது இல்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. சில நேரங்களில் கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர் வெளியில் ஓடுகிறது. இதனால், பயணிகள் துர்நாற்றத்தால், முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். கழிவுநீர் செல்லும் பகுதியில், தள்ளுவண்டியில் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பயணிகளுக்கு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை நாள்தோறும் சுத்தம் செய்து, கழிவுநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தில் வி.கள்ளப்பட்டி சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்

    கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையிலும், தொடர்மழை காரணமாகவும் அங்கன்வாடி மையத்தின் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது அந்த தண்ணீர் கழிவுநீராகி நோய் பரவும் மையமாக உருவெடுத்து உள்ளது.

    தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அருகில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

    அங்கன்வாடி மையத்தின் அருகிலே உள்ள நியாய விலைக் கடையும் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மூன்று மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. நியாய விலை கடை திறக்க முடியாத சூழல் இருப்பதால் தற்காலிகமாக நியாய விலை கடை தும்மக்குண்டு அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக உடை யாம்பட்டி, கரிசல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இப்பகுதியினர் தெரி வித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மாத காலமாக மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×