search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi Centre"

    • நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.

    இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன. பின்னர் அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்று சூறையாடி விட்டுச் சென்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு உத்தரவிட்டனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சோளிங்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட உளியநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கவுரி வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி சம்பத், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணி, ஜெயக்குமார், காங்கிரஸ் நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் கீழ்வீதி பாலாஜி, வேலு உட்பட கலந்து கொண்டனர்.

    • புதியதாக அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திக்குப்பம், காரைக்காடு, அன்னவல்லி, சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, குடிகாடு, புதுக்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, பெரியகாரைக்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நிதியின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

    புதுக்குப்பம் பகுதியில் கடலூர்- ராமாபுரம் ( வழி கண்ணாரப்பேட்டை, வழி சோதனைப்பாளையம்) வரை இயங்கி வந்த அரசு பஸ் சேவையை, புதுக்குப்பம் வரை நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலான பஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 176 நபர்களுக்கு ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை களை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், , கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் அருகே ஊராளிப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடம், ரூ.41,000 மதிப்பீட்டில் சமையல் அறை கட்டுமான பணி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது சமுதாயத்தில் அனைத்து குழந்தைகளின் நலனும் கவனிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி, சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ பரிந்துரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அங்கன்வாடி மையங்களில் சுகாதாரம், சத்தான உணவு வகைகள், சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு ரூ.41,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையல் கூடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதியில் இருந்து உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிதலைவர் பூசாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற உறுப் பினர் கீதாஜெகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச் சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந் தில்குமார், குழைந்தைகள் வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஆர். செல்வி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.8 ½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம்
    • கட்டிடம் பழுது பார்த்தல் பணிகளையும் பார்வையிட்டார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    மேலும் ரூ.8 ½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம், கோனேரிகுப்பம் வட்டத்தில் ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடிமைய கட்டிடம் பழுது பார்த்தல், வேட்டப்பட்டு ஊராட்சியில் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன் வாடி மையம் பழுது பார்த்தல் ஆகிய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஜோலார் பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ் குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
    • குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி 34 -வது வார்டு பாலன் காலனியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் தற்போது குடிநீர் போர் போடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் பைப்பை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக இந்த குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் நிர்வாகிகள் சொக்கு, சரண், கருணையாளன், ராம்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை.
    • சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுவர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும்போது அந்த பள்ளங்களில் தவறி விழும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அங்கன்வாடி மையத்திற்கு குளியல் அறையுடன் கழிப்பிட வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.
    • ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேருவிடம் கென்னடி எம்.எல்.ஏ. வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்தாய் நகரில் உள்ள கருமகாரிய கொட்டகை மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு குளியல் அறையுடன் கழிப்பிட வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    இதையடுத்து தனது சகோதரரான ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேருவிடம் கென்னடி எம்.எல்.ஏ. வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ரோட்டரி கிளப் மூலம் கரும காரிய கொட்டகையிலும், அங்கன்வாடி மையத்திலும் குளியல் அறையுடன் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது.

    இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இதனை கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேரு, சீனிவாசன், முருகேசன், பிரேம்ராஜா, தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. பிரமுகர்கள் நோயல், கண்ணன், கண்ணையன், பியர், செழியன், மனேஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
    • மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டிடம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களின் பணியை பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் 30 உறுப்பினர்கள் கட்டுமான தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சியை 2 மாத காலம் பெற்றனர். இந்த பயிற்சியில் புதிதாக கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்டு உரை தயாரித்தல், ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பணியை அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி பெற்றனர். அதனை தொடர்ந்து தற்பொழுது முதன்முறையாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்கள் பார்த்து வந்த கட்டுமான பணி தற்போது பெண்களாலும் முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    • ராமநாதபுரம் 4-வது வார்டில் அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21 நிதியின் கீழ் யானைகல் வீதியில் அங்கன்வாடி மையம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது.

    4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

    இதையடுத்து நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோரது முயற்சியால் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதன் திறப்பு விழா நடந்தது.

    நகராட்சி சேர்மன் ஆர்.கே. கார்மேகம் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டி யம்மாள், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன், உதவி பொறியாளர் செல்வகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஜே.ஆர்.பி.மணிகண்டன் நன்றி கூறினார்.

    • காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார்
    • மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார்

    வாணியம்பாடி:

    வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது முதல் தற்போது 4 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிந்த பின்பும் சரி இதுவரையில் இருந்த மாவட்ட கலெக்டர்கள் யாரும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரவு தங்கியது இல்லை.

    ஆய்வு

    இந்த நிலையில் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் பகுதியில் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும், ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் மத்திய அரசு மையத்திலும் ஓய்வு விடுதிகள் பிரமாண்டமான அளவில் உள்ளது.

    இந்த ஓய்வு விடுதிகளில் தான் கலெக்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அரசு துறை உயர் அதிகாரிகளும் இங்கு வந்தால் இரவு தங்குவார்கள்.

    இருப்பினும் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அடுத்த பீமகுளம் ஊராட்சியில் உள்ள மந்தாரக்குட்டை அங்கன்வாடி மையத்தில் திடீரென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இரவு தங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய கலெக்டர் நேற்று மாலை மிட்டூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். பீமக்குளம் ஊராட்சி மந்தாரகுட்டை கிராமத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை கற்பித்தார்.

    தொடர்ந்து மழை பகுதி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார். அவர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    பின்னர் அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கினார். ஒரு கலெக்டர் மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கியது இதுவே முதல் முறையாகும்.

    கலெக்டர் ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மேகலா திருப்பதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பீமகுளம், நாயக்கனூர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பொதுக் குழாய்களில் குடிநீர் வருகிறதா என குழாய்களைத் திறந்து பார்த்தார்.

    மலைப்பகுதிக்கு வரும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரம் கொட்டுவதை தடை செய்தும் அங்கு கொட்டப்பட்டிருப்பதை உடனடியாக அகற்றவும் கூறினார்.

    ×