search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவ்வாது மலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கிய கலெக்டர்
    X

    நடைப்பயிற்சியில் ஈடுபட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

    ஜவ்வாது மலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கிய கலெக்டர்

    • காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார்
    • மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார்

    வாணியம்பாடி:

    வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது முதல் தற்போது 4 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிந்த பின்பும் சரி இதுவரையில் இருந்த மாவட்ட கலெக்டர்கள் யாரும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரவு தங்கியது இல்லை.

    ஆய்வு

    இந்த நிலையில் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் பகுதியில் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும், ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் மத்திய அரசு மையத்திலும் ஓய்வு விடுதிகள் பிரமாண்டமான அளவில் உள்ளது.

    இந்த ஓய்வு விடுதிகளில் தான் கலெக்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அரசு துறை உயர் அதிகாரிகளும் இங்கு வந்தால் இரவு தங்குவார்கள்.

    இருப்பினும் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அடுத்த பீமகுளம் ஊராட்சியில் உள்ள மந்தாரக்குட்டை அங்கன்வாடி மையத்தில் திடீரென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இரவு தங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய கலெக்டர் நேற்று மாலை மிட்டூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். பீமக்குளம் ஊராட்சி மந்தாரகுட்டை கிராமத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை கற்பித்தார்.

    தொடர்ந்து மழை பகுதி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார். அவர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    பின்னர் அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கினார். ஒரு கலெக்டர் மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கியது இதுவே முதல் முறையாகும்.

    கலெக்டர் ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மேகலா திருப்பதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பீமகுளம், நாயக்கனூர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பொதுக் குழாய்களில் குடிநீர் வருகிறதா என குழாய்களைத் திறந்து பார்த்தார்.

    மலைப்பகுதிக்கு வரும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரம் கொட்டுவதை தடை செய்தும் அங்கு கொட்டப்பட்டிருப்பதை உடனடியாக அகற்றவும் கூறினார்.

    Next Story
    ×