என் மலர்
திருப்பத்தூர்
- குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகவதி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 1½ வயது மகன் துர்சாந்த்.
2 பெண் பிள்ளைகளும் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் காலை அவர்களை ஏற்றி செல்வதற்காக பள்ளி பஸ் வீட்டின் அருகே வந்து நிற்கும். அதேபோல் இன்று காலை மாணவிகளை ஏற்றிச் செல்ல பஸ் வந்தது.
அப்போது, திலகவதி துர்சாந்த்தை அழைத்துக் கொண்டு 2 மகள்களையும் பஸ்சில் ஏற்ற சென்றார். துர்சாந்த் பஸ்சின் முன்பக்கமாக விளையாடி கொண்டிருந்தான்.
இதை கவனிக்காத பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டியபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
- கனமழையின் காரணமாக திருப்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி திருப்பத்தூரில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார்.
- பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது.
- கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சவுத்தியா (8), சவுமிகா (6).
ராஜேஷ் குமார் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் குடும்பத்தோடு தங்கி சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக ராஜேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் காரில் பயணம் செய்தனர். அப்போது, மழை காரணமாக கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.
இதில் காரில் பயணித்த ராஜேஷ்குமார் அவருடைய மனைவி, மகள்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்ட த்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் சத்தீஸ்கர் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவருடைய சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கொரட்டி மற்றும் குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
- பஞ்சணம்பட்டி, புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கொரட்டி மற்றும் குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், நாளை (19-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்படி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சம்பத்து தெரிவித்துள்ளார்.
- பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.
- ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பூசிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் பரசுராமன் (வயது33).
இவர் அதே பகுதியில் உள்ள ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார்.
அப்போது பரசுராமன் வீட்டின் அருகே வசிக்கும் குமரன் (27) என்பவர் ஏதோ வெளிச்சம் தெரிகிறது என கருதி அருகில் சென்று பார்த்தார்.
அப்போது பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் ஏன் இங்கு இப்படி பூஜை செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது வீட்டில் குமரனும் இவரது தாயார் ஜெயலட்சுமி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பரசுராமன் அவரது சகோதரர் சாந்தகுமார் (29) இருவரும் குமரன் வீட்டிற்கு வந்தனர். குமரனின் தலை மீது கல்லை போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜெயலட்சுமி மற்றும் குமரன் கத்தி கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குமரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன், சாந்தகுமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்
- இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு விடுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வெங்கடேசன் (67) என்ற முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (65). 2018 ஆம் ஆண்டு அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் அவர் சமையல் வேலை செய்து வந்தார். இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோட்டீஸ்வரியின் கணவர் வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கோட்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.
2018ம் ஆண்டில் பதிவான இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போதே கோட்டீஸ்வரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
- திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கபட்டுள்ளது.
திருப்பத்தூர் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர்:
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவ.சௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
- 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
- கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்.
வருகிற 2026 சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பேரில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மாநிலங்களவை இடம் ஒதுக்குவதில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே பிணக்கு ஏற்பட்டதால், தற்சமயத்திற்கு யாருடனும் கூட்டணி இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.சி.வீரமணி கூறியதாவது:
* தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் தொடர்வதற்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது.
* கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகிலனின் சகோதரி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
- அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 2-வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
முகிலன் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன அவர்கள் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதே பள்ளியில் மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். பள்ளியில் உள்ள கிணற்றின் மேல் பகுதி இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு முகிலன் அதில் விழுந்தான் என பெற்றோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், முகிலனின் சகோதரி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பள்ளியை மூட வேண்டும். பாதிரியாரை கைது செய்ய வேண்டும். தனது மாணவன் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல், போலீஸ் நிலையம் முற்றுகை, ரெயில் மறியல் என பல போராட்டங்களை நடத்தினர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கூறியதன்பேரில் முகிலனுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.
இதன் காரணமாக நேற்று பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.
இந்த நிலையில் 3-வது நாளான இன்று பாதிரியாரை கைது செய்து பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என கூறி முகிலனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களிடம் டி.ஐ.ஜி மற்றும் எஸ்பி பாதிரியார், வார்டன் மற்றும் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக இன்று உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 2-வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
- த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.
முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முகிலன் தேடப்பட்டு வந்தார். பள்ளியில் உள்ள கிணற்றில் முகிலன் இறந்து மிதந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அப்போது மாணவனின் தந்தை சின்னத்தம்பி கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து திருப்பத்தூர் தாசில்தான் நவநீதம் முன்னிலையில் போலீசார் முகிலனின் பிணத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போலீசார் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
மேலும், முகிலனின் சொந்த ஊரான கொத்தூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்கள் மூலமாக திருப்பத்தூர் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் அங்கேயே தடுத்து நிறுத்தினர் தொடர்ந்து, மர்மமான முறையில் இறந்த மாணவன் முகிலனின் இறப்புக்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி டவுன் போலீஸ் நிலையம் அருகே திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மாணவனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து. த.வெ.க, பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
அப்போது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலில் ஈடுபட்டவர்கள் பிடி கொடுக்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு போலீசார் மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். அதன் பிறகு ஓரளவு கூட்டம் அங்கிருந்து கலந்து சென்றது.
இதற்கிடையே மாணவனின் அக்கா வக்கீல் சத்யா கூறுகையில்,
வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு பள்ளி நிர்வாகம் முகிலனை காணவில்லை என தகவல் கொடுத்தது. இதனால் நாங்கள் பள்ளிக்கு சென்றோம். முறையான பதில் கூறவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவை காண்பிக்க சொல்லி கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர். அதன் பிறகு போலீஸ் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது முகிலன் பள்ளியில் இருந்து வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது.
பள்ளிக்குள் இருக்கும் கிணற்றை பார்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் போடப்பட்டுள்ளது. கிணற்றில் யாரும் இறங்க முடியாது என்றனர்.
பள்ளி கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு வளையம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் கிணற்றுக்கு எப்படி விழுந்து இறந்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாணவனின் தலையில் வட்ட வடிவில் முடி பிடுங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி நெற்றி, முதுகுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் உள்ளது. இதனால் முகிலனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதை சி.பி.சி.ஐ.டி விசாரணை மாற்ற வேண்டும் என்றார்.
மாணவன் இறந்த விவகாரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
மேலும் பள்ளியை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி மாணவன் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் வரை முகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை.
- மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். மகன் வீட்டிற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் எங்கள் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி தான் படித்து வருகிறான். அப்படி இருக்கும் போது எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவனை தேடி வந்தனர். நேற்று இரவு பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மாணவர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றுப் பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இன்று காலை போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் மாணவனை தேடி வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாணவனின் பிணத்தை போலீசார் மீட்டனர்.
மகனின் பிணத்தை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






