என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது.
- கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சவுத்தியா (8), சவுமிகா (6).
ராஜேஷ் குமார் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் குடும்பத்தோடு தங்கி சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக ராஜேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் காரில் பயணம் செய்தனர். அப்போது, மழை காரணமாக கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.
இதில் காரில் பயணித்த ராஜேஷ்குமார் அவருடைய மனைவி, மகள்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்ட த்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் சத்தீஸ்கர் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவருடைய சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.






