என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பத்தூர் பள்ளியில் மர்ம சாவு- மாணவன் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
    X

    திருப்பத்தூர் பள்ளியில் மர்ம சாவு- மாணவன் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

    • முகிலனின் சகோதரி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
    • அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 2-வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.

    முகிலன் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன அவர்கள் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதே பள்ளியில் மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். பள்ளியில் உள்ள கிணற்றின் மேல் பகுதி இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு முகிலன் அதில் விழுந்தான் என பெற்றோர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கிடையில், முகிலனின் சகோதரி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், பள்ளியை மூட வேண்டும். பாதிரியாரை கைது செய்ய வேண்டும். தனது மாணவன் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல், போலீஸ் நிலையம் முற்றுகை, ரெயில் மறியல் என பல போராட்டங்களை நடத்தினர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கூறியதன்பேரில் முகிலனுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.

    இதன் காரணமாக நேற்று பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது நாளான இன்று பாதிரியாரை கைது செய்து பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என கூறி முகிலனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவர்களிடம் டி.ஐ.ஜி மற்றும் எஸ்பி பாதிரியார், வார்டன் மற்றும் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக இன்று உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 2-வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×