என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"

    • நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் அருவியில் குளிக்க வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவிக்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இந்நிலையில் இன்று மழைப்பொழிவு குறைந்து பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். 

    • மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை குறைந்து விட்டதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 134½ அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 137½ அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1308 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 107½ அடியாக உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் மணிமுத்தாறு அணையில் 80 அடியும், பாபநாசத்தில் 88½ அடியும், சேர்வலாறு அணையில் 88 அடியும் நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே கனமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டிடும் நிலையில் இருக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார எஸ்டேட்டுகளில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துவிட்ட நிலையிலும் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருக்கிறது.

    இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

    இதேபோல் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது. இதனால் கேரளாவில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை. இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், சூரன்குடி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
    • ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் கன மழையின் காரணமாக சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது வரை தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.

    ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும்

    இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.

    வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. 

    • குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
    • வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    ஊட்டி:

    நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.

    சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.

    மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.

    வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.

    குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாட ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

    அவர்கள் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிற்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி ஆர்டர் செய்து இஷ்டம் போல சாப்பிட்டார்கள்.

    சாப்பிட்ட உணவிற்கான பில்லை பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ரூ.10 ஆயிரத்து 900-த்திற்கான பில்லை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பணம் செலுத்தாமல் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தனர்.

    கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக ஓட்டலிலிருந்து வெளியேறி காரில் தப்பி சென்றனர். அவர்கள் அங்கிருந்து செல்வதை கண்ட ஓட்டல் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது. அப்போது போலீசார் காரை சுற்றி வளைத்து அவர்கள் 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை வசூல் செய்தனர். அவர்களை கைது செய்து இதேபோல் வேறு எங்காவது மோசடி செய்தனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் 20-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிக்கரைகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், சேதமடைந்தன.

    பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவுற்றதால் இன்று காலை முதல் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் சாலைகளில் ஏற்பட்ட மண் அரிப்புகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முற்றிலுமாக சீரமைத்த பிறகே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல் இதமான சூழ்நிலை குற்றாலம் பகுதியில் நீடிக்கிறது.

    விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

    இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    • கடந்த சில நாட்களாகவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
    • மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்டமனூர்-வருசநாடு சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

    இதே போல சாலையில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல தேங்கியது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக கிராமங்களில் வெப்பம் தணிந்து குளுமையான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்றும் மழை பொழிவு இருக்கும் என பொதுமக்கள், விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.

    கனமழை காரணமாக மேகமலை அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்ததால் அவர்களை வனத்துறையினர் உடனடியாக வெளியேற்றினர்.

    இன்றும் அருவியில் அதிக அளவு நீர் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அதில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இடைப்பட்ட நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வறண்ட நிலையும் காணப்பட்டதால் சோர்வடைந்திருந்த சிறு குறு வியாபாரிகள் தற்பொழுது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முதற்கொண்டே வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இவர்கள் மேல்மலை கிராம பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை போன்ற பகுதிகளிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    இதே போல் பசுமை பள்ளத்தாக்கு, வனத்துறை சுற்றுலா தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு இல்லங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறைவான எண்ணிக்கையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்வதில் முழு கவனம் செலுத்தினர். தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்துவதை விட நிரந்தரமான எண்ணிக்கையில் காவல் துறையினர் போக்குவரத்துக் காவலர்களை அதிகமாக எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கும்பக்கரை அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது.
    • அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது. ஜூலை மாதம் 6% குறைந்தது

    இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 15% குறைந்துள்ளது.

    இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும்.
    • மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் என்பது கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

    சுற்றுச்சூழலில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியாகவும் கூடலூர் வனக்கோட்டம் விளங்கி வருகிறது. இந்த மலைத்தொடரில் கோடையிலும் வற்றாத ஆறுகள் மற்றும் நீரைகள் உள்ளன.

    இந்த நிலையில் கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் உள்ள மலைத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    லேசான வெளிர் ஊதா நிறத்தில் பூக்கும் இந்த பூக்களை சிறு குறிஞ்சி எனவும் அழைக்கின்றனர். வருடத்தில் செப்டம்பர் மாத தட்பவெப்பநிலை குறிஞ்சி பூக்கள் பூப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

    இதனால் பெரும்பாலும் செப்டம்பர் மாதங்களில் குறிஞ்சி பூக்கள் பார்ப்பதை காணமுடிகிறது. தற்போது பூத்துள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களை அடுத்த ஓரிரு வாரங்கள் வரை பார்த்து ரசிக்க முடியும்.

    அதன்பின்னர் குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும். ஓவேலி மற்றும் நாடுகாணி பகுதிகளில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை உள்ளூர் மக்களும், அந்த வழியாக செல்லக்கூடிய வெளியூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தபடியே செல்கின்றனர்.

    இந்த மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இருப்பதாலும், அடிக்கடி யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் வனத்துறை யாரையும் அனுமதிப்பது இல்லை. இருப்பினும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியான ஓவேலி மலைத்தொடரை குறிஞ்சி மலர்கள் பூத்து அலங்கரித்து இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்புக்காடுகளில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கி விட்டன என பூக்களின் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

    ×