என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்- சுற்றுலா பயணிகள் செல்ல தடை
- நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.
இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.






