என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காணும் பொங்கலையொட்டி கோவை, நீலகிரி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.
பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.
மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.
இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






