search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaanum pongal"

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.

    மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.

    ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.

    இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
    • பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

    சென்னை:

    காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் மாயமானால் எளிதில் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் கையில் பெற்றோரின் செல்போன் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை கட்டி விடப்பட்டது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 10 ஆயிரம் குழந்தைகள் கையில் இந்த அட்டை கட்டப்பட்டது.

    இந்த நிலையில் மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் தகவல் கொடுத்து குழந்தைகளை குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைத்தனர். சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக 9 தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை விரட்டி அடித்தனர்.

    குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்கள் வருகிறார்களா என்பதை முக அடையாள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். இந்த கேமராவில் சிக்கியவர்களை போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

    திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • கிண்டி சிறுவர் பூங்காவில் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கல் கொண்டாட்டம் இன்று களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.

    மெரினா கடற்கரையில் இன்று காலை 9 மணியளவில் இருந்தே மக்கள் கூட தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பிற்பகலில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மெரினாவில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களிலும் தலா 3 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலில் இறங்கி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் நன்கு நீச்சல் தெரிந்த 140 வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க வசதியாக அவர்களின் கைகளில் காவலர் பாதுகாப்பு வளையம் கட்டி விடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த உதவி எண்கள் மூலமாக மாயமான குழந்தைகள் உடனுக்குடன் மீட்கப்பட்டன. தற்காலிக உதவி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கிண்டியில் சிறுவர் பூங்காவிலும் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்குள்ள பாம்பு பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விதவிதமான பாம்புகள் மற்றும் முதலை பண்ணையில் உள்ள முதலைகள் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர்.

    சிறுவர் பூங்காவில் புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகளையும் பல்வேறு வகையான பறவைகளையும் சிறுவர்-சிறுமிகள் குதூகலத்துடன் கண்டு களித்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்களில் உற்சாகத்தோடு சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்ப வழிந்ததை தொடர்ந்து தேவையான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்திய காட்டுமாடு, காண்டா மிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்பு நில மான், நீலமான் உள்ளிட்டவைகளுக்கு காலை 11 மணி அளவில் தாவர வகைகள் உணவாக அளிக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த விலங்குகள் சிறிய சிறிய சேட்டைகளுடன் தாவரங்களை உட்கொண்டதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.

    பிற்பகலில் யானை குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 2 மணியளவில் இரு ந்து 4 மணி வரையில் யானைகள் குளிப்பதையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 2 பெரிய திரைகளில் பூங்காவின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டது.

    பார்வையாளர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க தனியான புகைப்படக்கூடம் என்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மக்கள் கூட்டம் கூட்டமாக போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.

    பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தாமதமின்றி உள்ளே செல்வதற்கு வசதியாக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடுதலாக 2 இடங்களில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.

    எப்போதும் இயங்கும் 20 நுழைவு சீட்டு வழங்கும் இடத்திலும் தேவையான அளவுக்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவசர சிகிச்கைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 9 இடங்களில் மருத்துவ உதவி மையங்களில் அமைக்கப்பட்டிருந்தன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எலியட்ஸ் கடற்கரையில் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. மாலை நேரங்களில் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மேடையில் கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    பொங்கலையொட்டி மக்களை கவரும் வகையிலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எலியட்ஸ் கடற்கரையில் மரத்தினாலான யானை சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    யானை சிற்பங்களுக்காக பெரிய அளவிலான தரை மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் 7 பெரிய யானை சிற்பங்கள், 4 சிறிய யானை சிற்பங்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த யானை சிற்பங்கள் இலை, தழைகளை உண்பது போலவும் காட்சி உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனை பார்க்கும்போது காட்டுப் பகுதியில் நின்று யானைகள் சாப்பிடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பொதுமக்களை பெரிதும் கவர்ந்து உள்ள இந்த யானை சிற்பங்கள் அருகில் நின்று போட்டோக்களை எடுப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

    அதன் அருகில் நின்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி மற்றும் போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.

    • கோட்டை, ஏலகிரி, அமிர்தியில் கடும் கூட்டம்
    • காணும் பொங்கல் கோலாகலமாக நடந்தது

    வேலூர்:

    பொங்கல் பண்டிகை 3 நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று முன்தினம் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டு பொங்கல் தினமான ேநற்று மாடுகளை அலங்கரித்தும் மக்கள் வழிபட்டனர்.

    3-ம் நாளான இன்று காணும் பொங்கல் கொண் டாட்டம் களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.

    வேலூர் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

    இதையொட்டி, வேலூர் கோட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் வந்திருந்தனர்.

    அவர்கள் கோட்டையைச் சுற்றிப்பார்த்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள புல்தரையில் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். பொங்கலையொட்டி, கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், மக்கள் வருகையையொட்டி கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, தர்பூசணி, குளிர்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    மேலும், அமிர்தியில் உள்ள வனப்பூங்காவுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதேபோல், கோட்டை பூங்கா,தங்கக்கோவில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள், கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    ஏலகிரி மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்தனர்.

    இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி மகிழ்ந்தனர்.

    ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிக அளவில் உள்ளதால் தங்களது குடும்பத்தினருடன் சென்று சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்தனர்.

    • மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.

    மாமல்லபுரம்:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத்துடன் அவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத்தொடங்கினர்.

    இதையடுத்து மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதியில் இருந்து கடற்கரை கோயில், புலிக்குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர். மாமல்லபுரம் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருட்டு, பெண்களை கேலி செய்தல், போதை ஆசாமிகளை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மர நிழலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்கனவே சமைத்து கொண்டு வந்து இருந்த உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது.

    சுற்றுலா பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.எஸ்.பி. கிரியா சக்தி திருப்பாலைவனம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பொன்னேரி தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
    • ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி, பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வருடம் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி. பூங்காவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

    ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ.உ.சி. பூங்காவில் கூடியதால் வ.உ.சி. பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ.உ.சி. பூங்கா 2 கேட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    • இன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை :

    காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர். எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந் தேதி (இன்று) பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்பட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவார்கள்.

    எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரைகள், இணை கமிஷனர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    போலீசாருக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும், மோட்டார் படகுகள் மற்றும் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளித்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பார்கள். மேலும் குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், முதியோர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆண்டு மெரினா கடற்கரை மணற்பரப்பில் திறக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்காற்றும்.

    கடற்கரையையொட்டிய பகுதிகளில் தமிழ்நாடு போலீஸ்துறை கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள 11 உதவி மையங்களிலும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் குழந்தை, பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதி குழந்தைகள் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம், குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும் அதிக திறன் கொண்ட 2 பெரிய டிரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை போலீசாரின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர்.
    • காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.

    தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை, மறுநாள் தைப்பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், 4-ம் நாள் காணும்பொங்கல் கொண்டாடப்படும்.

    சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் முக்கிய பண்டிகை பொங்கல் ஆகும்.அதன் பின்காணும் பொங்கல் தினத்தில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதலாகும்.வீட்டில் மூத்தவர்களின் ஆசி பெற்று அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு விளையாட்டுப் போட்டி, உறிஅடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீர சாகசபோட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் இளைஞர் கள் பங்கேற்பார்கள்.

    சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.பல ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதே காணும் பொங்கலின் சிறப்பு ஆகும்.

    காணும் பொங்கலில் உறவுகள், நட்புகள், அறிமுகம் இல்லாத அக்கம் பக்கத்தினர், விரும்பாதவர்களையும் தேடி சென்று சிரித்து,ஆனந்தம் கொள்ள வேண்டும்.

    17-ந்தேதி தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட மக்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பல ஆயிரம் மக்கள் ஒரேநேரத்தில் கூட்டமாக கூடுவார்கள். கார், வேன்களில் மெரினா கடற்கரைக்கு படையெடுத்து வர உள்ளனர்.மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பு முழுவதும் மீண்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தோட உள்ளது.

    கடற்கரையில் சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாடுவார்கள். கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர். கண்ணாமூச்சி விளையாட்டும் களைகட்டும். வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து மக்கள் சாப்பிடுவார்கள்.

    • காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.
    • இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம்.

    17.1.2023, தை-3, (செவ்வாய்கிழமை)

    பொழுது புலர்ந்தது முதல் இருள் சூழும் வரை தங்கள் ஜீவனத்திற்காக உழைத்து வாழ வேண்டும் என்பது உலக நியதி. ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே பண்டிகைகள் கொண்டாடுவதை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது.

    அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.

    இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட ஊர் மக்களை எளிதில் எந்த கொடிய நோய் , இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாது. கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.

    காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம்.

    காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. காணும் பொங்கலான இன்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணமாக உள்ளனர். அவர்கள் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக சென்றதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று 2 மணிநேரம் முன்னதாக காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் திரண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள்.

    மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். சென்னையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உற்சாகமாக பொழுதை போக்குவார்கள். இதேபோன்று மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    மெரினாவில் நாளை பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் கடலில் இறங்கி கால் நனைக்கும் பகுதியில் சவுக்கு கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் இன்று நடைபெற்றன. மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மெரினாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சிறுவர்-சிறுமிகளின் கைகளில் பெற்றோர்கள் மற்றும் காவல் உதவி மைய செல்போன் எண்கள் அடங்கிய சிறிய வடிவிலான 'டேப்'பை ஒட்டுதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிரோன்களை இயக்குவதில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 ஆயிரம் போலீசாருடன் 1000 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.

    மெரினாவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சூரிய ஒளி உதவி மையங்கள் ஏற்படுத்த உள்ளன. 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

    இந்த வருடம் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் காவல் உதவி மையங்களை இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு காவல் உதவி பெற முடியும்.

    காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் பெரிதும் உதவும்.

    மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×