என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Marina Beach"
- உதயநிதி ஸ்டாலின் மூலம் இன்று பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
- 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை உதயநிதி வழங்கினார்.
சென்னை:
மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களாலும், அங்குள்ள கடைகளாலும் மணற்பரப்பு அசுத்தம் ஆகிறது.
எனவே, மாநகராட்சி பணியாளர்கள் மெரினா பெசன்ட் நகர் கடற்கரையினை பொலிவுடன் கண்காணிக்க ஏதுவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய நான்கு சக்கர அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 ரோந்து வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பயன்பாட்டிற்கு வழங்கினார்.
மேலும், மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோடிக் மல்டி பர்பஸ் எக்ஸ்கவேட்டர் போன்ற அதிநவீன எந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனடிப்படையில் தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர் ரூ.22.80 கோடி மதிப்பில் லிச்டென்ஸ் டைன் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் இன்று பயன்பாட்டிற்கு வழங்கப் பட்டது.
மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 எந்திரங்கள் 2019 ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த எந்திரங்களின் தேய்மானத்தின் காரணமாக எந்திரங்களின் முழு திறனைபெறுவதற்கு ஏதுவாக, முதற்கட்டமாக 2 எந்திரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு தற்பொழுது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதனால் கடற்கரை மணற் பரப்பினை சுத்தம் செய்யும் பணிகள் திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி யில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அப்பணியாளர்களின் வாரிசுதாரர்களான 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணை அடிப்படையில் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
- பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு.
- சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.
இதற்காக சென்னை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெறுகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது மெரினா கடற்கரையையும் அதன் மேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிட ங்களையும் இணைக்கும் வகையில் காமராஜர் சாலை நடைபாதையை மேம்படுத்தும் திட்டத்தை ரூ.10 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகம், சாந்தோம் பேராலயம், பொது பணித்துறை அலுவலக கட்டிடம், விவேகானந்தர் இல்லம், மாநில கல்லூரி உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பராமரிக்கப்பட உள்ளன.
மேலும் மெரினா கடற்கரையில் புதுப்பொலிவான தோட்டங்கள், நீரூற்றுகள், சிற்ப தோட்டங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.
மேலும் அகலமான நடைபாதைகள், சுற்றுலாப் பயணிகள் அமரும் பகுதிகள், தகவல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மெரினா கடற்கரை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு புதுப்பொலிவுடன் மாற்றப்பட உள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடங்களையும் பராமரித்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.
- நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
மாலை வேலைகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ-மாணவிகளை பானிபூரி கடைகளில் அதிகமாக பார்க்க முடியும்.
பானி பூரி விரும்பி சாப்பிடும் பழக்கம் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியிலும் சிறுவர் சிறுமிகள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது.
இதுபோன்ற மாணவ-மாணவிகள், இளைஞர்களை குறிவைத்து பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதிகளிலும், கல்லூரிகள் செயல்படும் இடங்களை சுற்றியும் அதிக அளவில் பானிபூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையிலும் ஏராளமான பானிபூரி கடைகள் உள்ளன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பானிபூரி மசாலாவில் பச்சை நிறத்தை அதிகரித்து காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதன் படி அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 'ஆப்பிள் கிரீன்' என்று அழைக்கப்படும் ரசாயனம் பானிபூரி மசாலாக்களில் சேர்க்கப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த ஆப்பிள் கிரீன் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளுக்கு சென்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான டாக்டர் சதீஷ்குமார் தலை மையிலான குழுவினர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பானிபூரியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களையும் தண்ணீரையும் பரிசோதனைக்காக எடுத்துள்ளனர். இந்த பானி பூரி மசாலாக்களில் ஆப்பிள் கிரீன் என்று அழைக்கப்படும் புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த உடன் ரசாயனம் கலந்த பானிபூரி மசாலாக்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பானிபூரி கடைகளில் பூரியில் ஊற்றி கொடுக்கப்படும் மசாலா தண்ணீரை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் அதனை பயன்படுத்தினால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் சென்னையில் உள்ள பானிபூரி கடைகளில் மசாலா கலந்த தண்ணீரை பல நாட்கள் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்து உள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் அப்போது பானிபூரி கடை கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
- கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.
- அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் தமிழில் "நன்றி தங்கச்சி" என்று பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.
what do you say for like sister in... என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பெண் "தங்கச்சி" என்று கூறுகிறார்.
younger sister is தங்கச்சி என்று கேட்கிறார்.
அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார்.
இதையடுத்து "நன்றி தங்கச்சி" என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.
தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார்.
அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார்.
அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார்.
வெண்ணிலாவின் "பேல் பூரி" என்று சுவைக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடல்நீரில் குளிர்ச்சியான மற்றும் வெப்பமான நீர் கலக்கும் போது அதன் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
- அளவுக்கு அதிகமாக மழைநீர் கடலில் கலக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை மாற்றுதிறனாளிகள் அலுவலகம் எதிரே உள்ள கரையோரம் நேற்று முன்தினம் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது. துர்நாற்றத்தால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் மீன்களின் இறப்புக்கான காரணங்களை ஆராய்வதற்கு செத்து போன மீன்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரி கூறும்போது, சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழைநீர், வடிகால் வழியாக அடையாற்றில் கலந்து, பின்னர் கடலின் முகத்துவாரத்தில் கலக்கிறது. இதனால் கடல்நீரின் ஆக்சிஜன் அளவு குறையும்.
கடல்நீரில் குளிர்ச்சியான மற்றும் வெப்பமான நீர் கலக்கும் போது அதன் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் தான் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக மழைநீர் கடலில் கலக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் மீன்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய செத்துபோன மீன்களை சேகரித்துள்ளோம் என அவர் கூறினார்.
மேலும் இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, அடையாற்றின் கரை ஓரங்களில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக அடையாற்றில் கலக்கிறது. மழைநீர் கால்வாயில் உள்ள கழுவுநீரும் அடையாற்றில் கலப்பதால் மீன்கள் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
- போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
- நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
- நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது.
சென்னை:
சென்னையில் சிறுவர்-சிறுமிகளை தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்து குதறின.
கடந்த 1-ந்தேதி புழலில் 12 வயது சிறுவன் மற்றும் கே.கே.நகரில் 16 வயது சிறுவன் ஆகியோரை நாய்கள் கடித்தன. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இதையடுத்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதற்காக மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நாய் பிடிப்பவர்கள் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2 வண்டிகளில் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.
இதில் 26 செல்லப் பிராணிகள் உள்பட 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது. இதற்காக செல்லப் பிராணிகளை வளர்ப்ப வர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அங்கு கொண்டு வந்திருந்தனர்.
வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், அதை வளர்ப்பதற்கான அனுமதியை பெறுவதற்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால் நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
கடந்த மே மாதம் முதல் இதுவரை நாய் வளர்ப்பதற்காக 4,345 உரிமங்களை சென்னை மாநகராட்சி ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. மேலும் 2,196 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 9,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
- சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
- கலைஞரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் இல்லம், கருணாநிதியின் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அவருடன் மு.க. தமிழரசு, அமிர்தம், செல்வி, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர், நே.சிற்றரசு மற்றும் அமைச் சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
அதன்பிறகு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத் துக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார்.
- 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
- 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஆகியோரும் இணைந்து கேப்டன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் 2 கேப்டன்களும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் மெரினா கடற்கரையில் குதிரைப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவதி, ஷாலினி என 2 சிறுமிகள் கடலில் மூழ்கியுள்ளனர்.அவர்களை குதிரைப்படை வீரர்கள் மின்னல் வேகத்தில் குதிரையில் பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளனர்.
இது தவிர குற்றச் செயல் களை தடுப்பதற்கும் குதிரைப்படை வீரர்கள் உதவி செய்து வருகிறார்கள். சென்னை காவல் துறையில் செயல்பட்டு வரும் குதிரைப்படைக்காக குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1670-ம் ஆண்டு மாகாண கவர்னராக இருந்த வில்லியம் என்பவர் இந்த குதிரைப்படையை உருவாக்கினர்.
அப்போது புதுப் பேட்டை, வேப்பேரி கால்நடை மருத்துவமனை, வேப்பேரி போலீஸ் நிலையம், பூக்கடை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 7 இடங்களில் குதிரைப்படை பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது புதுப்பேட்டை பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதையொட்டி 25 குதிரை களில் 11 குதிரைகள் குதிரை யேற்றத்தின்போது பிரத்தியேக பயிற்சி பெற்றவையாகும். மீதமுள்ள 14 குதிரைகள் குடியரசு தின அணிவகுப்பு, வி.ஐ.பி. பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
மெரினாவில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர். செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கபாலி, காவேரி, சோழன், சாரதி, வைகை, தாமிரபரணி என குதிரைக்கு பெயர் வைத்துள்ளனர்.
- கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
- ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது.
சென்னை:
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 65 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் மீத முள்ளவை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.
திருமயிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணி தொடங்கியது.
பிளமிங்கோ என்ற சுரங்கம் தோண்டும் எந்திரமும் ஈகிள் என்ற 2-வது எந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த இரண்டு எந்திரங்க ளும் மெரினா கடற்கரை காந்திசிலை அருகே உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, திருமயிலை மெட்ரோ வரை கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கலங்கரை விளக்கத்தை வந்தடையும். வருகிற 20-ந் தேதி பிளமிங்கோ எந்திரமும், ஏப்ரல் 20-ந் தேதி ஈகிள் இரண்டாவது எந்திரமும் அதே இடத்தை அடையும்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளமிங்கோ எந்திரம் 134 மீட்டர் நீள சுரங்கப்பாதையை முடித்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவர் சிலைக்கு அருகில் உள்ளது.
அதே நேரத்தில் ஈகிள் எந்திரம் 71 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துள்ளது. 19-ந் தேதி முக்கியமான பணிகள் தொடங்கப்படும்.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
திருமயிலையில் சில கடைகளை அகற்றுவதில் சிரமமாக உள்ளது. அதனால் தண்டவாளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்றார்.
இது பற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், திருமயிலை மெட்ரோ 3 மற்றும் 4 வழித்தடங்களின் பரிமாற்றமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சில ரெயில் நிலையங்கள் 2028-ம் ஆண்டில் கடைசி இரண்டு நிலையங்களாக திறக்கப்படும்.
ஏனென்றால் இந்த ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது. ஆனாலும் நடைபாதை 4-ல் தொடரும் கலங்கரை விளக்க மெட்ரோ, திருமயிலை மெட்ரோ இயக்கப்படுவதற்கு முன்பு திறக்கப்படும்.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் தயாரானாலும் போரூர், பூந்தமல்லி வரை வசிக்கும் மக்கள் எளிதாக மெட்ரோ ரெயிலில் மெரினா கடற்கரையை அடையலாம் என்றார்.
- சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தியது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.
* உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
* முதல்வருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்