search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "struggle"

    • இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
    • கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர்புற எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது போராட்டம் நடத்தும்போது கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இதை கண்டித்தும், கப்பலூர் சுங்கச்சாவடியை உடனே அகற்ற வேண்டும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லாததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார், வாகன ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம், கப்பலூர் சிட்கோவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.

    இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

    இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக வியாபாரிகள், பொதுமக்கள் கூறுகையில், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமல்லாது வருகிற பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், கடம்பூர், பர்கூர் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை விட்டு சமீப காலமாக வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    மேலும் சில யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இரு க்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளது.

    அதேப்பகுதியில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே புறம்போக்கு இடத்திற்கு அந்த யானை வந்துள்ளது. அப்போது யானைக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் அந்தப் பெண் யானை தவறி கீழே விழுந்தது.

    ஏற்கனவே உணவு குடிநீரின்றி பலவீனமாக இருந்த அந்த பெண் யானை அகழியில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்றுவதற்காக அதன் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றி வருகின்றனர். யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவ குழுவினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் வரட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர்.
    • மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. பள்ளி, குடியிருப்பு அருகே மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

    தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் கிரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மதுக் கடைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது.
    • விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது. இது விமான நிலைய எதிர்ப்பு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர். இன்று முதல் இரவு நேர போராட்டத்தை நிறுத்திவிட்டு சட்ட போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும், வருகிற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    • சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. .
    • மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி- பழவேற்காடு சாலை மெதூரில் இருந்து அரசூர் சாலை வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, காட்டாவூர், ஐயநல்லூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மெதூர்-அரசூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மணல் ரோடாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் சாலையால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து மெதூர்-அரசூர் சாலையை சீரமைக்க கோரி விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மெதூரில் பொன்னேரி-பழவேற்காடு செல்லும் 8 அரசு பஸ்களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்ததை நடத்திய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சாலை சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மெதூர்-அரசூர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
    • கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

    அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

    ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • 2022-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அக்கினிக் கலச சின்னம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்து அகற்றப்பட்டது.
    • அண்மையில் கூட விதிகளுக்கு மாறாக சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டு சாலையில், 1989-ம் ஆண்டு அக்னி கலச சின்னம் வன்னியர் சங்கத்தால் அமைக்கப்பட்டு, அதை நான் திறந்து வைத்து கொடியேற்றினேன். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் புனித அடையாளமாக போற்றப்பட்டு வந்தது. அதனால் யாருக்கும், எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்ட போது, அக்கினிக் கலச சின்னத்தை தற்காலிகமாக அகற்றலாம் என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு அச்சின்னத்தை மீண்டும் அமைக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதற்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஒப்புக் கொண்ட நிலையில், அங்கிருந்து தற்காலிகமாக எடுக்கப்பட்ட சின்னம், பின்னர் மாவட்ட நிர்வாகத் தால் மீண்டும் வைக்கப்பட்டது.

    அதன்பின் 2022-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அக்கினிக் கலச சின்னம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய மாவட்ட நிர்வாகம், அகற்றப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க அனுமதிப்பதாக தெரிவித்தது.

    அதை செய்ய மாவட்ட நிர்வாகம் தவறிவிட்ட நிலையில், பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் புதிதாக அமைக்கப்பட்ட அக்கினிக்கலச சின்னத்தை நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் இன்று அதிகாலையில் அமைத்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அக்கினிக் கலச சின்னத்தை வலுக்கட்டாயமாக அகற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி பா.ம.க. வினரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

    திருவண்ணாமலை, நாயுடுமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல சிலைகளும், சின்னங்களும் உள்ளன. அண்மையில் கூட விதிகளுக்கு மாறாக சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்கினிக் கலச சின்னத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும், மீண்டும் அகற்றுகிறது என்றால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    அக்கினிக் கலசம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பா.ம.க. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதை பலவீனமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கருதினால் அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்களில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா்.
    • தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கடந்த 19-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் நடை பெற்று வரும் இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

    நேற்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது இடைநிலை ஆசிரியா்களை போலீசார் கைது செய்தனா். அவா்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக, போலீஸ் வாகனத்திலேயே வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி அலைக்கழித்ததாகவும், கைது செய்யப்பட்டவா்களை தங்க வைக்கக்கூடிய இடங்க ளில் எந்தவித வசதியும் இல்லையென்றும் ஆசிரி யா்கள் புகாா் தெரிவித்தனா்.

    மேலும், போலீசார் தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சோ்ந்த கலிய மூா்த்தி என்பவா் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று ஆசிரியர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடிக்கிறது.

    இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை நாளை முதல் தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:-

    ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இதுவரை சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். நாளை முதல் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.

    நாங்கள் நீண்டகாலமாக எங்களின் உரிமைகளை இழந்து வருகிறோம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக்க ணக்கான ஆசிரியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    • 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    • பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்திருக்கின்றனர். அவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்ப டாதது வருத்தமளிக்கிறது.

    பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காக்காப்பாளையம்:

    இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.

    இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×