என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • 10 ரூபாய் வசூல் தொடர்பாக விமர்சனம் செய்தபோதே செருப்புகள் வீசப்பட்டது.
    • நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்.

    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் த.வெ.க. கட்சி கரூர் சம்பவத்திற்கு பிறகு காணாமல் போன நிலையில் உள்ளதைப்போல் கேட்கிறீர்கள். கரூர் சம்பவத்திற்கான காரணத்தைத்தான் பார்க்க வேண்டும். அந்த நிகழ்வில், அந்த கட்சி தலைவர் விஜய்யின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும். அவர் 10 ரூபாய் வசூல் தொடர்பாக விமர்சனம் செய்தபோதே செருப்புகள் வீசப்பட்டது. எனவே அவருடைய பாதுகாப்பு குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உள்ளோம். நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்' என்று தெரிவித்தார்.

    மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணைய வாய்ப்புள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து, விஜய் உங்களுடைய கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வீர்களா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிரித்துக் கொண்டே 'பார்ப்போம்' என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை.
    • நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.

    தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

    ஆங்கில வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும்.

    தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.

    பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன்.

    நான் தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறேன். நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை. இதயத்துல இருந்து பேசுறேன். தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தான் வீதிக்கு வர்றாங்களே தவிர, பொதுவான மக்களின் பிரச்சனைக்கு கற்ற பிள்ளைகள், கற்றறிந்தவர்கள் வந்து களத்துல நின்று அதை தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறது இல்லை.

    அதனால அது, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவ வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையும் இதே மாதிரி வீதியில் நின்று போராடி கொண்டு இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.

    விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும்.

    நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர். அதே நேரம் பக்கத்தில் வெறும் 40 விவசாயிகள் போராடி கொண்டிருந்தார்கள். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் வரும். அந்த படம் நல்லா இருந்தா அடுத்த காட்சியில் அதே கூட்டம் இருக்கும்.

    ரொம்ப நல்லா இருந்தா அதற்கு அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும். இல்லைன்னா அடுத்த கட்டத்தில் திரையரங்கு ஈ ஆட்டிடும். விஜய்யை பார்க்க கூடுவார்கள். அவர் பேசுறதை கேட்க கூட மாட்டார்கள். என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் என்ன பேசுறான்னு கேட்க கூடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர்.
    • இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை தொடங்கினார். விஜயின் வருகையில் நேற்று திருச்சி தொண்டர்களால் குலுங்கியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் பிரசார களத்திற்கு விஜயால் நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர். இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பெரம்பலூர் மக்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.

    திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட காமராஜர் வளைவுப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    காமராஜர் வளைவுப் பகுதிக்கும் பதில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை.
    • டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசியதாவது:-

    தமிழ்நாடு இன்று எவ்வளவு பெரிய இன்னல்களை, துன்பங்களை, நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் ஒரு எம்.எல்.ஏ என்பதால் அறிய முடிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் மத்திய அரசு ஏற்ற அரசாக இருந்து கொண்டு ஒரு மாநில முற்றதிகாரத்தையே தனதாக்கிக்கொண்டு ஒரு காட்டு தர்பார் ஆட்சியை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது .

    சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை. யாராவது இது குறித்து நீதிபதிகள் பேசினால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்று அவர்களை சங்கிகள் தன் கையில் எடுக்கின்ற நிலை உள்ளது.

    இதில் பெரும்பான்மையான விசயங்களை சட்டசபையில் நான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சருக்கும் எனக்கும் சண்டை அல்லது அவரது அமைச்சர்களுக்கு எனக்கும் சண்டை என்றுதான் சட்டசபை நடந்தேறிக் கொண்டிருக்கிறது

    டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள். இதனை கேட்பதற்கு நாதியில்லை, சட்டசபையில் இது குறித்து நான் கேட்டேன், அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மாற்றம் செய்யப்படும் என்று சொன்னார், ஆனால் மத்திய அரசு இதுவரை மாற்ற விடவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணங்களை உயர்த்தி பல மடங்கு பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு தேவையான பொருள்களின் விலையை உயர்த்தி மக்களை துயரத்தில் ஆளாக்கி வருகின்றனர்.

    சுங்கச்சாவடி என்பது அமைக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பிறகு ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை குறைப்பது தான் ஒரு நியாயமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் அதற்கு நேர் மாறாக பன்னாட்டு பணக்கார பெரும் நிறுவனங்கள் இந்திய மக்களுடைய பணங்களை குறைந்த வட்டி விகிதங்களில் தேசிய வங்கிகளில் கடனாக பெற்று அதை நாங்கள் சாலை விரிவாக்கத்திற்காக முதலீடு செய்கிறோம் என்கிற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இதை எதிர்த்து தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது . தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதான கோரிக்கை இந்த சுங்கச்சாவடிகளை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான் என்றார்.

    • உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது.
    • பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை.

    பெரம்பலூர்:

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடந்த த.வெ.க. மாநில மாநாட்டில் கட்சி தொண்டர் சரத்குமார் என்பவரை தலைவர் விஜய் முன்னாலே பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடந்த மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது சரத்குமார் இல்லை என த.வெ.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி போட்டது சரத்குமாரே இல்லை. புகார் கொடுத்துள்ள சரத்குமார் அந்த இடத்திற்கு வரவே இல்லை. சரத்குமாரின் அம்மா பேட்டியை பார்த்து விட்டு அவரிடம் அது பற்றி கேட்ட போது, அது நான் இல்லை, அங்கு நான் செல்லவில்லை என தெரிவித்தார்.

    மேலும் எனது சட்டையை பார்த்து விட்டு யாரோ சொன்னதைக் கேட்டு எனது அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனில் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.

    நாங்கள் 100 சதவீதம் சொல்கிறோம் பவுன்சர்கள் தூக்கி போட்டது இந்த பையன் இல்லை. இது ஒரு தவறான தகவல். யாருடைய தூண்டுதலின் பேரிலே இப்படி புகார் கொடுக்கப்பட்டு, எங்கள் கட்சித் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு என்பது முக்கியம். ரசிகர் என்ற முறையில் அதை தாண்டி அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை பவுன்சர்கள் தடுக்கிறார்கள். யாரையும் தூக்கி போடவில்லை.

    தள்ளி விடும்போது அவர் கம்பியை பிடித்து இறங்கி வருகிறார். உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது. கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் தான். அவரும் பேட்டி கொடுத்துள்ளார். நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன், நான் சென்றது தவறுதான், நான் போய் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    மாநாட்டுக்கு சரத்குமார் 2-வது நாள் தான் சென்றதாக கூறினார். முதல் நாள் சென்றவர்கள் மட்டுமே நடைமேடை அருகே செல்ல முடியும், காரணம் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்று செய்கிறார்கள்.

    இதன் பின்னணியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், தற்போது உள்ள ஆளுங்கட்சி தான், அவர்களாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. புகார் கொடுத்த சரத்குமார் போட்டிருந்த சட்டையை வைத்து முடிவுக்கு வர முடியாது. அதுமட்டுமின்றி கீழே விழுந்தவருக்கும், புகார் கொடுத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யான வழக்கு. அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கட்சி தலைமையின் ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.
    • த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன்.

    பெரம்பலூர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 20-ந் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர்.

    இந்த மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் 'ரேம்ப் வாக்' சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாப்பு கருதி, 'ரேம்ப் வாக்' மேடை அருகில் இருந்த தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டு இருந்தது.

    அதையும் மீறி தொண்டர்கள் சிலர் 'ரேம்ப் வாக்' மேடையின் மீது ஏறியதால் விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அந்த வகையில் தொண்டர்களை விஜயின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த மாநாட்டில் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற அக்கட்சியின் தொண்டர் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர்.

    இந்த நிலையில் த.வெ.க. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி. பாலமுருகனிடம் புகார் அளித்தனர்.

    குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். அதில், தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.

    அப்போது என்னை நோக்கி தாக்கும் நோக்கத்தில் சுமார் 10 பவுன்சர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி ஓடி வந்தார்கள். அதில் ஒருவர் என்னை கீழே இறங்குமாரு அசிங்கமான வார்த்தையால் திட்டியும் மற்றொரு பவுன்சர் இடித்து தள்ளியும் தாக்கி கீழே வீசினார்.

    தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சு பகுதி மற்றும் உடலில் உள்காயம் ஏற்பட்டது. உடலில் எனக்கு இன்னும் வலி அதிகமாக உள்ளது. த.வெ.க பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்கு கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெற கூடாது என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன்.

    த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன். எனவே தலைவர் விஜய் மீதும் அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ். 189(2),296(b),115(2) பி.என்.எஸ். பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள்.
    • உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்த நிலையில் பொதுமக்களிடையே பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கூட்டத்தை நான் எழுச்சி பயணத்தில் மேற்கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. நமது வேட்பாளர் வெற்றிபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியாக பார்க்கிறோம். அந்த அளவிற்கு மக்களிடையே எழுச்சி பார்க்கப்படுகிறது.

    திமுக ஆட்சி எப்போது அகற்றப்பட வேண்டும் என்ற நிலைலேயே மக்கள் இருக்கின்றனர். திமுக 200 தொகுதிகளின் வெற்றிபெறும் என்பதை கனவு காண்கலாம். ஆனால் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

    திமுக ஆட்சி அமைத்து 50 மாதங்கள் உருண்டோடிவிட்டது. இந்த 50 மாதங்களில் குன்னம் தொகுதிக்கு ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை கொண்ட வந்திருக்கிறார்களா? 50 மாதங்களில் மக்களை தந்திரமாக ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

    மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 1000 ரூபாய் கொடுப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அவர் கொடுக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கிறார்கள். சொந்த பணத்தில் கொடுக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கடுமையான அழுத்தம் கொடுத்ததால் 28 மாதங்கள் கழித்து மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுத்ததாக தவறான கருத்தை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

    மேலும் 30 லட்சம் பேருக்கு வழங்கப்படும் எனக் கூறுகிறார். மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கவில்லை. அவருக்கு 30 லட்சம் குடும்பத்தினருடைய வாக்கு வேண்டும். அதனால் கொடுப்பதாக சொல்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு 10 சதவீதம் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றியுள்ளனர்.

    100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார். சம்பளத்தை உயர்த்துவோம் என்று கூறினார். உயர்த்தினாரா? 100 நாள் வேலைத்திட்டம் 50 நாட்களாக தேய்ந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் எப்படி ஏழை மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

    கண்ணில் பார்க்க முடியாத காற்றை வைத்து ஊழல் செய்த கட்சி திமுக. திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்கள். நாட்டுக்கு நன்மை செய்வோம் என்று இவர்கள் பேசுகிறார்கள். இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்த காரணத்தினால் மக்கள் துன்பத்தில் வாடிக் கொண்டிக்கிறார்கள்.

    1.05 கோ பேரிடம் மனு வாங்கப்பட்டு 1.01 லட்சம் மனுவுக்கு தீர்வு காணப்பட்டதாக சொல்கிறார்கள். என்னென்ன மனுக்கள் கொடுக்கப்பட்டன? எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது? என விளக்கம் கொடுங்கள். விளக்கம் கொடுக்கப்பட வில்லை என்றால், அதிமுக ஆட்சி அமைத்த பிறகு இப்படி தவறாக புள்ளி விவரங்கள் கொடுத்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாகத்தான் அரசு செய்திகள் வெளியிடப்படும். இதுதான் நடைமுறையில் உள்ளது. திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. செல்வாக்கை இழந்ததால் எப்படியாவது மக்களை குழப்பி, ஆட்சி வர வேண்டும். திட்டமிட்டு நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார்.

    ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள். அரசு அதிகாரிகளாக இருந்து கொண்டு தவறான புள்ளி விவரங்களை கொடுக்காதீர்கள். மக்களை குழப்பாதீர்கள். அதற்கு முழு பொறுப்பு நீங்கள்தான் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • பக்தர்கள் தேரை இழுத்தபோது சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
    • அருகில் இருந்த தேர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு.

    பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ள கருப்பசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள் திரண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தேரோட்டத்தை தொடங்கி வைத்ததும், பக்தர்கள் தேரை இழுக்க முயன்றனர். அப்போது ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.

    இதனால் தேர் அருகில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மற்றும் பக்தர்கள் பீதி அடைந்தனர். சாய்ந்த தேர் அருகில் உள்ள தேர் மீது மோதி அப்படியோ நின்றதால் தரையில் விழவில்லை. தரையில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    அருகில் உள்ள தேரில் சாய்ந்து நின்றதும் தேர் அருகில் இருந்து போலீசார் மற்றும் பக்தர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

    • நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார்.
    • விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    குன்னம்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).

    பாலபிரபு தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கவுரி சென்னையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கோடை விடுமுறையை தொடர்ந்து பாலபிரபு குடும்பத்துடன் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் சென்றார். ஜூன் 2-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் சென்னை புறப்பட ஆயத்தம் ஆகினர்.

    நேற்று இரவு பாலபிரபு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். காரை பாலபிரபு ஓட்டினார். கார் இன்று காலை திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. பெருமாள் பாளையம் பூமாலை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சாலையோரத்தில் நின்ற புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பாலபிரபு, மாமனார் கந்தசாமி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது குழந்தை கவிகா, தாய் டாக்டர் கவுரி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சில நொடிகளில் குழந்தை கவிகா உயிர் பிரிந்து விட்டது. அதன் பின்னர் கவுரியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • 2 பேரும் தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
    • இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரும்பாவூர்:

    பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் தினேஷ் (வயது 28). தொண்டமாந்துறை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் ரஞ்சித் (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு அங்குள்ள பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் இருந்து இணைப்பு எடுத்து அங்குள்ள தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    நெற்றியில் விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் மீன்களைப் பார்த்து மின்சாரத்தை பாய்ச்சும்போது அந்த மீன்கள் கொத்தாக மயக்க நிலைக்கு வந்து பிடிபடும் என கூறப்படுகிறது.

    இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் வரைந்து வந்தனர் பின்னர் தடுப்பணை நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலி சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடம் விரைந்து சென்றார் மேலும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நூதன முறையில் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்த 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குன்னம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.

    லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.

    சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×