என் மலர்
நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.
- திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.
அப்போது, எஸ்ஐஆர் குறித்து பேசிய சீமான்," மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் கொண்டு வரும் போது மம்தா பானர்ஜி அதை எதிர்த்து மக்களை திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு எஸ்ஐஆர் செயல்படுத்த போகிறோம் என்று தெரிவித்த உடன் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது" என்றார்.
இதற்கு பத்திரிகையாளர் ஒருவர் எஸ்ஐஆரை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளதே என்று கூறினார்.
இதற்கு உனடியாக ஆதங்கப்பட்ட சீமான் உனக்கு என்ன பிரச்சனை? உன்னை ரொம்ப நாளா பார்த்துக் கொண்டிருக்கிறேன், உனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துள்ளது. என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினார்.
இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
- சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.
- த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன்.
பெரம்பலூர்:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 20-ந் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர்.
இந்த மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் 'ரேம்ப் வாக்' சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாப்பு கருதி, 'ரேம்ப் வாக்' மேடை அருகில் இருந்த தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டு இருந்தது.
அதையும் மீறி தொண்டர்கள் சிலர் 'ரேம்ப் வாக்' மேடையின் மீது ஏறியதால் விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அந்த வகையில் தொண்டர்களை விஜயின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மாநாட்டில் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற அக்கட்சியின் தொண்டர் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர்.
இந்த நிலையில் த.வெ.க. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி. பாலமுருகனிடம் புகார் அளித்தனர்.
குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். அதில், தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.
அப்போது என்னை நோக்கி தாக்கும் நோக்கத்தில் சுமார் 10 பவுன்சர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி ஓடி வந்தார்கள். அதில் ஒருவர் என்னை கீழே இறங்குமாரு அசிங்கமான வார்த்தையால் திட்டியும் மற்றொரு பவுன்சர் இடித்து தள்ளியும் தாக்கி கீழே வீசினார்.
தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சு பகுதி மற்றும் உடலில் உள்காயம் ஏற்பட்டது. உடலில் எனக்கு இன்னும் வலி அதிகமாக உள்ளது. த.வெ.க பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்கு கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெற கூடாது என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன்.
த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன். எனவே தலைவர் விஜய் மீதும் அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ். 189(2),296(b),115(2) பி.என்.எஸ். பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதி.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்புலன்ஸை தடுத்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்பட 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தேஜஸ்வி பிரதமர் மோடியின் பீகார் பயணத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
- பிரதமர்மீது அவதூறு பரப்பியதாக தேஜஸ்வி மீது மகாராஷ்டிராவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பை:
பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் பீகார் சென்ற பிரதமர் மோடி சுகாதாரம், மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, பிரதமரின் பீகார் பயணம் குறித்து மாநில முன்னாள் துணை முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். போலி வாக்குறுதிகளைத் தந்து, ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மீது அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, மகாராஷ்டிராவின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மிலிந்த் ராம்ஜி நரோடே கட்ச்ரோலி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மீது அவதூறு கருத்து தெரிவித்த தேஜஸ்வி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசிய தேஜஸ்வி, வழக்குக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். உண்மையை தொடர்ந்து உரக்கச் சொல்வோம் என தெரிவித்தார்.
- ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
- இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.
அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
மதுரை:
இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22-ந்தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அனுமதி தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ''மதவெறியைத் தூண்டும் அரசியல் உரைகள் கூடாது. இதனை முன்கூட்டியே காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநாட்டில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசார், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மதம், இனம் குறித்து பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.
சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறியதாக 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் அபராதம் விதித்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 12 மணிக்கு மேல் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.
- ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்வன், அவரது மனைவி ஆன்சி, குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் செல்வன் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் செல்வன் வருவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக நிறுத்தப்பட்டது. அங்கு, பஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியால் செல்வன், ஆன்சி தம்பதியினர் மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர் ரிஷாந்த் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வன், ஆன்சி தம்பதியினர் கொடுத்த புகார் பேரில் போலீசார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் டிரைவர்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் தென்காசி மாவ ட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாற்று பஸ் டிரைவர் மூலம் பஸ் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் வெட்டியுள்ளார்
- செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து நிவேதா, குழந்தையுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்ற முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் அருணா தேவி வெட்டியுள்ளார்.
இதனையடுத்து குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக வெட்டிய செவிலியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் பாட்டி புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில் விரலை வெட்டிய செவிலியர் அருணா தேவி மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடந்து வரும் நிலையில் கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல்லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.
இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் கடந்த 26-ந்தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு நம்பரில் இருந்து மறுநாள்(27-ந்தேதி) நடக்க இருந்த தொழில்சட்டம் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், இதனால் அந்த தேர்வினை ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை பேட்டை போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316 (நம்பிக்கைக்கு மோசடி செய்தல்), 318(ஏமாற்றுதல்), 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3,4 மற்றும் 5(தேர்வில் முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தேர்வாணையரின் செல்போன் வாட்ஸ்அப்புக்கு வினாத்தாள் அனுப்பிய எண்ணை சோதனை செய்தபோது அது அறிவுச்செல்வன் மதுரை என்ற பெயர் வருவதாகவும், அந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கொரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது.
- மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அரசு டாக்டர் நோயாளியை கொன்றுவிடுங்கள் எனக்கூறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. முதற்கட்ட அலை தாக்குதலை தாக்குப்பிடித்த நிலையில், 2021-ல் மீண்டும் 2ஆவது அலை உருவானது. அப்போது மக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். இதனால் உயிர் பிழைப்பதற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிகிச்சைக்காக படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு டாக்டர் ஒருவர் சக டாக்டரிடம், யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காதீர்கள். சிகிச்சை வந்துள்ள பெண்மணியை கொன்றுவிடுங்கள்" எனக் கூறுகிறார். ஆனால் சக டாக்டர், சமாளித்துக் கொண்டு, நோயாளிக்கு அளிக்கும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது" என பதில் அளிக்கிறார்.
இது தொடர்பான ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெற்ற பெண்ணின் கணவன், அரசு டாக்டர் மீது புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துக் கொண்டார்.
போலீசார் ஆடியோ கிளப்பின் உண்மைத்தன்மையை கண்டறிந்து வருகின்றனர். அரசு டாக்டரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சக டாக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






