என் மலர்
நீங்கள் தேடியது "nurse"
- மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
- விண்ணப்பங்களை 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் டி.எஸ்.கே., நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். நேர்முக தேர்வு 25 ம் தேதி நடக்குமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள, தற்காலிக நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பதிவு தபால் மூலமாக கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு, 20ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும்.
- கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாங்குநேரி:
வள்ளியூர் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்பிகாபதி. இவரது மகள் மனோகரி. இவர் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர் இன்று வள்ளியூர் போலீசில் அளித்த புகார் மனுவில், நான் வேலைக்கு செல்லும்போது எனது வீட்டுக்கு காவலாக இருந்த எனது நாயை நேற்று மதியம் சிலர் லோடு ஆட்டோவில் கடத்தி கொண்டு சென்று விட்டனர்.
அந்த நபர்களை கண்டறிந்து நான் தட்டிக்கேட்டபோது எனக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே நான் ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும். கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே அந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மனோகரி வளர்த்து வந்த நாய் கடந்த சில நாட்களாக அந்த தெருவில் உள்ளவர்களை கடித்துள்ளது. இதனால் அந்த நாயை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
அதன்அடிப்படையில் கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாரும் கடத்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி (வயது 57), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சவுராமா. இவர்களுக்கு சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகிய மகள்களும், மன்சூர் அலிகான் என்ற மகனும் உள்ளனர். இதில் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
அன்வர் அலிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 19-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டயாலிஸ் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ஒருவர் அன்வர் அலியிடம் டயாலசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று தெரிவித்து உள்ளார். இதைக்கேட்ட 5 நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் வெளிப்படையாக தெரிவித்ததால் அவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வர் அலியின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அன்வர் அலியின் மகள்கள் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோர் கூறியதாவது:-
எங்களது தந்தை அன்வர் அலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக அவதியடைந்து வந்தார். இதற்காக அவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 9-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை மறுநாள் 10-ந் தேதி காலையில் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் இயங்கும் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் எங்களது தந்தையிடம் உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இதனால் பயந்துபோன அவர் டயாலிசிஸ் செய்ய வேண்டாம் என்று கூறியவாறு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அங்குள்ள டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு மறுநாள் 20-ந் தேதி ஏற்கனவே நாங்கள் சென்ற சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கு டயாலிசிஸ் செய்ய மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு எங்களிடம் கையெழுத்து வாங்கினார். அதேபோல் எங்களுடைய தந்தையிடம் டயாலிஸ் செய்தால் உங்கள் உடலில் வயிற்றுப்பகுதியில் ஓட்டை போட்டு 2 லிட்டர் தண்ணீர் செலுத்தி ரத்தத்தை சுத்தம் செய்வோம். அதில் நீங்கள் உயிர் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்தநிலையில் நர்சு கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த எங்கள் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வார்டில் உள்ள படுக்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் எங்களுடைய தந்தை டயாலிசிஸ் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே எங்கள் தந்தை போன்று வேறு யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது. இதில் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் கேட்டபோது, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் நோய் குறித்து தெரிவிக்கக்கூடாது என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் அவரின் நிலை குறித்து நர்சு தெரிவிக்க வாய்ப்பு இல்லை.
மேலும் இங்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி சில புரோக்கர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்று நோயாளியிடம் தெரிவித்து இருக்கலாம். இதில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொடைக்கானல் பில்லீஸ்வில்லா தெருவை சேர்ந்த வடிவேல் (27) என்பவர் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் சோப்பாயிலை குடித்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
அப்போது அவர் மதுபோதையிலும் இருந்துள்ளார். இதற்கு செவிலியர்கள் சிகிச்சையளிக்க முற்படும்போது வடிவேல் அவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சற்று நேரத்தில் போதை தலைக்கேறிய அவர் மருத்துவமனையில் இருந்த சிகிச்சையளிக்கும் கருவிகளை அங்கிருந்த சுத்தியலை எடுத்து உடைத்து நொறுக்கியுள்ளார். அதோடு பணியில் இருந்து செவிலியர்களையும் தாக்கினார். இதனால் பதற்றமடைந்த செவிலியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை மருத்துவர் பாலாஜி கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதற்குள் வடிவேல் அங்கிருந்து தப்பி உள்ளார்.
இதுகுறித்து விசாரணை செய்த கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். #tamilnews
வடமதுரை அருகே மந்தைகுரும்ப பட்டியை சேர்ந்தவர் சத்யாதேவி (வயது20). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரிசல்பட்டியை சேர்ந்த பிரபாகரன்(வயது24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிரபாகரன் சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார்.
நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்த காதல்ஜோடி வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்.
அதன்படி எரியோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும் அவர்களிடம் சமரசபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நர்சாக வேலை பார்த்து வருபவர் தங்கரத்தினம். இவர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் 20 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம் மகப்பேறு அரசு உதவி தொகை பெறுவதற்கான அட்டவணை வழங்க ரூ.2000 லஞ்சமாக கேட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்கள், கிராம மக்கள் ஆராம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தங்கரத்தினத்தை அறையில் பூட்டி சிறை வைத்தனர்.
மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி நர்சு தங்கரத்தினத்தை விடுவித்தனர்.
இதற்கிடையே லஞ்சம் கேட்ட அவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.
நர்சு தங்கரத்தினம் ஏற்கனவே மூன்று மாத குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
உலகிலேயே உன்னதமான சேவை என்பது மருத்துவ சேவை தான். மருத்துவத்துக்கு மூளை டாக்டர் என்றால், செவிலியர்கள் இதயம் போன்றவர்கள். மருந்து கூட காப்பாற்ற தவறிய நோயாளிகள் செவிலியரின் கனிவான வார்த்தைகளாலும், கரிசனையான கவனிப்பாலும் சாவின் விளிம்பில் இருந்து கூட மீண்டிருக்கின்றனர். அந்தவகையில் செவிலியரின் மகத்துவம் என்றைக்குமே போற்றத்தக்கது.
குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியரின் சேவைகள் அளப்பரியது. அந்தவகையில் கள்ளம் கபடமில்லாமல் கடமை உணர்வோடு பணியாற்றும் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்களின் தரத்தை இன்னும் சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக அரசு ஆஸ்பத்திரி செவிலியர்களின் சீருடை ‘டிப்-டாப்’ ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பல்வேறு கோரிக்கைகள் குறித்து செவிலியர் சங்கத்தினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், ‘செவிலியர் சீருடையில் மாற்றம் தேவை என்றும், பணிக்கால அடிப்படையில் செவிலியரின் சீருடைகள் வடிவமைக்கப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றம் குறித்து ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனர் தலைமையில் 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. செவிலியர் சீருடை மாற்றம் குறித்து தீவிர பரிசீலனை நடந்தது. இந்தநிலையில் செவிலியர்களின் பணிக்காலத்தை பிரதானமாக வைத்து புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* பச்சிளம் குழந்தைகள் வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். ‘தமிழ்நாடு அரசு செவிலியர்கள்’ எனும் இலச்சினை பதித்த இளஞ்சிவப்பு நிறத்திலான 2 பாக்கெட்டுகள் கொண்ட அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.
* 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் பெண் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். செவிலியர்களின் இலச்சினை பதித்த வெள்ளை நிறத்திலான 2 பாக்கெட்டுகள் கொண்ட அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

* 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பெண் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். செவிலியர்களின் இலச்சினை பதித்த வெள்ளை நிற அரைக்கை சுடிதார்-பேண்ட் மற்றும் ஓவர் கோட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூவும், காலுறையும் அணிவார்கள்.
* இரண்டாம் நிலை கண்காணிப்பு பெண் செவிலியர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான புடவை, செவிலியர்களின் இலச்சினை மற்றும் அடிப்பாகத்தில் 2 பாக்கெட்டுகள் அடங்கிய ஓவர் கோட், வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.
* முதல்நிலை கண்காணிப்பு பெண் செவிலியர்கள் பிஸ்தா பச்சை நிறத்திலான சேலையும், செவிலியர்கள் இலச்சினை மற்றும் 2 பாக்கெட்டுகள் கொண்ட ஓவர் கோட், வெள்ளை நிற ஷூ, காலுறை அணிவார்கள்.
* 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் ஆண் செவிலியர்கள் வெள்ளை நிற அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். செவிலியர்கள் இலச்சினை மற்றும் கன்சீல்ட் ரக பட்டன்கள் உள்ள சட்டை அணிவார்கள். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.
* 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆண் செவிலியர்கள் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெடுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.
* இரண்டாம் நிலை கண்காணிப்பு ஆண் செவிலியர்கள் இளஞ்சிவப்பு நிற முழுக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெட்டுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.
* முதல்நிலை கண்காணிப்பு ஆண் செவிலியர்கள் பிஸ்தா பச்சை நிற முழுக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெட்டுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.
முதல்நிலை கண்காணிப்பு செவிலியர்கள் தங்க நிறத்திலான காந்தம் பொருந்திய பேட்ஜ் அணிந்திருப்பார்கள். அதில் செவிலியரின் பெயர் சிவப்பு நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் நிலை கண்காணிப்பு செவிலியர்களின் பெயர் நேவி புளூ நிறத்தில் தங்க நிறத்திலான காந்தம் பொருந்திய பேட்ஜில் பொறிக்கப்பட்டிருக்கும்.
இதர செவிலியர்களின் பேட்ஜில் கருப்பு நிறத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த புதிய மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய மாற்றம் மீது ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனர் நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment #GovernmentNurses
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்துக்காக விஜயமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த நவம்பர் 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காஞ்சனாவை விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.
அங்கு டாக்டர் விஜயசித்ரா பரிசோதனை செய்தபோது காஞ்சனாவுக்கு லேசான வலி மட்டுமே இருந்தது. எனவே முழுமையான வலி வரும்வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறினார். அதன்படி காஞ்சனா அங்கு இருந்தார். மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது பணி நேரம் முடிந்து டாக்டர் வெளியே சென்றுவிட்டார். செவிலியர் சுகன்யா என்பவர் மட்டுமே பணியில் இருந்தார். அவர் காஞ்சனாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.
குழந்தையின் தலை பாதி வெளியேவந்த நிலையில் பின்னர் எந்த அசைவும் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால் பிரசவம் சிக்கலானதாக மாறியது. செவிலியர் சுகன்யாவுக்கு உதவிக்கு வேறு யாரும் இல்லை. எனவே அருகில் உள்ள வேறு சுகாதார நிலையங்களுக்கு காஞ்சனாவை கொண்டுசெல்ல முயற்சித்தார்.
அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காஞ்சனாவை மிக ஆபத்தான நிலையில் செவிலியர் அனுப்பிவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கும் டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே ஆம்புலன்சு மூலம் காஞ்சனா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே காஞ்சனா பரிதாபமாக இறந்தார். பல மணி நேரமாக துடித்துக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியானது. தாயும், குழந்தையும் மரணம் அடைந்த தகவல் காஞ்சனாவின் உறவினர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது.
விஜயமங்கலம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயசித்ரா, செவிலியர் சுகன்யா ஆகியோர் மீது காஞ்சனாவின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். முதலிலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று இருந்தால்கூட தாயையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்க முடியும். பணியில் அலட்சியமாக இருந்து தாய் மற்றும் குழந்தை பலிக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “இதுதொடர்பாக ஆரம்பசுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது துறைரீதியாக விசாரணை நடந்துவருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அதன்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டுகளிலும் செவிலியர்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கேபின்களை அகற்ற மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவிட்டாராம். இதற்கு செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கழிவறை கூட ஒதுக்கி தராமல் தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களும் திடீரென தங்களது காலை பணியை புறக்கணித்து விட்டு மருத்துவமனையின் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் அவசர சிகிச்சை பிரிவு, டெங்கு காய்ச்சல் பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா சமதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்பினர். செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரம் நோயாளிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகினர்.