என் மலர்
இந்தியா

வீடியோ: 2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரை பணயம் வைத்து கடமையாற்றிய நர்ஸ்
- கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது.
- தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார்.
சிம்லா:
இமாசலபிரதேசம் மண்டி அருகே உள்ள சவுகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. ஆஸ்பத்திரி எதுவும் இல்லாத அவலநிலை கொண்ட இந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்சு வரவேண்டும். இந்தநிலையில் அக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களாகின.
பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றநிலையில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்தை கடந்த செல்ல சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது. இதனால் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் நோய்வாய்ப்பட்டுவிடுமோ என்று அதன் தாய் அஞ்சினார்.
ஆனால் டிகாரில் அரசு நர்சாக பணிபுரிந்து வரும் கமலாவோ, குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார். அதற்காக தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார். இடையே முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரை துச்சமாக எண்ணி கடந்து கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பினார்.
ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தோடு பாய்ந்தோடிய ஆற்றை கடக்க, அதனிடையே இருந்த பாறாங்கற்கள் மீது கமலாவின் கால்கள் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் நெஞ்சை உறைய செய்து 'வைரல்' ஆகி வருகிறது.
நர்சு கமலாவின் மனதிடத்துடன் கூடிய சேவை மனப்பான்மையை பாராட்டி வாழ்த்துகள் குவிகின்றன.






