என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death penalty"

    • ராம் பவன், துர்காவதி தம்பதி 10 வருடங்களாக இயங்கி வந்தனர்
    • சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள்,உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச நீர்ப்பாசன துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய வந்தவர் ராம் பவன். இவரது மனைவி துர்காவதி.

    சித்ரகூட் நகரை சேர்ந்த இவர்கள் கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 வருட காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல சிறுவர்களை கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி அதை படம் பிடித்து டார்க் வெப் உள்ளிட்ட சட்டவிரோத இணயதளங்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    3 வயது முதல் 16 வயது வரையிலான 33 சிறுவர்கள் இவர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    ராம் பவன், குழந்தைகளுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், பணம், பரிசுகள் கொடுத்து ஆசை காட்டி அவர்களை தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.

    சில சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள், உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் பாலியல் வீடியோக்களை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்தபோதுதான் ராம் பவன், துர்காவதி தம்பதி சிக்கியுள்ளது.

    இந்தப் பாலியல் வீடியோக்கள் மற்றும் படங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட தளங்கள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது உறுதியானது.

    2020 அக்டோபரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அடுத்த சில மாதங்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

    அவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த கடந்த 6 ஆண்டுகளாக பாண்டா போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    33 சிறுவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதரங்கள் சிபிஐ தரப்பில் சமர்பிக்கப்பட்டன.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அரிதினும் அரிதான வழக்கு என்று கூறிய நீதிமன்றம், ராம் பவன் மற்றும் துர்காதேவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தம்பதியின் வீட்டில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த ரொக்கப் பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு.
    • ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ந்த பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை நடந்த பாராளுமன்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 200க்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு பிரதான கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையலான கூட்டணி 71 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

    இந்த தேர்தலில், ஒரு காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.

    இவர்களில் இருவர் தாரிக் ரஹ்மானின் பிஎன்பிகட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்தவர்.

    பிஎன்பியை சேர்ந்த தலைவர் லுட்போஸ்மேன் பாபர். 2004-இல் ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும், 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில்ஈடுபட்டதற்காக அவருக்கு 2015 ஆம் ஆண்டு இரண்டாவது மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால், டிசம்பர் 2024-இல் வங்கதேச உயர் நீதிமன்றம் இவரை விடுவித்தது. தற்போது நடந்த தேர்தலில் 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

    பிஎன்பியை சேர்ந்த மற்றொரு தலைவர் அப்துஸ் சலாம் பின்டு. இவரும் கிரானைட் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

    இந்தியாவில் நடந்த சில குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. இவர் தற்போது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜமாத் இ இஸ்லாமி கட்சியை அசாருல் இஸ்லாம், ற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

    1971 வங்கதேச விடுதலைப் போரின் போது 1,200 பேரைக் கொன்றது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளுக்காக 2014-இல் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு இவர் விடுவிக்கப்பட்டார்.

    இந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட தலைவர்களின் தற்போதைய வெற்றி இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தற்போது பிரதமர் ஆக உள்ள தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மியான்மரில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.
    • இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.

    மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல சைபர் மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன.

    இவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இளைஞர்களை வேலைவாய்ப்பு ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.

    இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு போலி அழைப்புகளை செய்தும் ஆன்லைன் மூலமாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    அந்த வகையில் மியான்மரை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் சைபர் மோசடிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் 'மிங்' குடும்பத்தினர்.

    மியான்மரின் கோகாங் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் குடும்பங்களில் 'மிங்' குடும்பமும் ஒன்று.

    இவர்கள் ரகசிய இடங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சிறைபிடித்து, அவர்களைக் கொண்டு ஆன்லைன் மோசடிகளைச் செய்து வந்தனர்.

    இந்தக் கும்பல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி செய்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    Romance Scam மூலம் முதலீடு செய்ய வைத்துப் பணத்தைப் பறிப்பது இவர்களது முக்கிய உத்தியாகும்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஐடி வேலை என்று ஆசை காட்டி கடத்திச் சென்று இவர்கள் சித்திரவதை செய்து வந்தனர்.

    இவர்களிடம் சிறைப்பட்டிருந்தவர்கள் தப்பிக்க முயன்றபோது, 14 சீனக் குடிமக்களை இந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. இது சீன அரசாங்கத்தைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

    இந்தக் கும்பலின் தலைவர் மிங் ஜுய்சாங் -ஐ கைது செய்ய 2023 நவம்பர் மாதம் சீனா பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    மியான்மர் அதிகாரிகள் இவரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக மியான்மர் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேநேரம் இவருடைய மகன் மிங் குவோபிங் மற்றும் பேத்தி மிங் சென்சென் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சீனா அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் விசாரணைக்கு பின் சீனாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேற்று இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

    எல்லையோரங்களில் நடக்கும் சூதாட்டம், போதைப்பொருள் மாபியா மற்றும் ஆன்லைன் மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை தங்களது வேட்டை தொடரும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். 

    • அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

    குவைத் நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

    நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க குவைத் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைஃபான் மற்றும் ஷுவாய்க் பகுதிகளில் கண்காணிப்பு நடத்தி இரண்டு இந்தியர்களை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

    • இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
    • பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு

    இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

    குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

    யூனுஸ் ஆட்சியில்..

    வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

    யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. இந்துக்களின் வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன.

    இந்த சூழலில் வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

    7 சகோதரிகள் 

    முகமது யூனுஸ் வங்கதேசத்தின் பாரம்பரியமான இந்திய சார்பில் இருந்து விலகி சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை வளர்த்து வருகிறார். மேலும் இந்தியாவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். கடந்த ஏப்ரலில் சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ் இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.

    சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).

    இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

    தொடர்ந்து இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைத்து அவ்வப்போது அந்நாட்டு தலைவர்கள் சர்ச்சைக்குரிய படத்தை யூனுஸ்க்கு பரிசளித்து வருவதும் தொடர்கிறது.

    ஷேக் ஹசீனாவின் தலைவிதி

    இதற்கிடையே இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவையும் மீண்டும் வங்கதேசம் அனுப்ப யூனுஸ் அரசு இந்தியாவிற்கு கடிதங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

    கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

    மேலும் அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும், ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

    அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.

    வங்கதேச அரசின் தொடர் அழுத்தத்தின் படி அவரை நாடுகடத்துவது குறித்த கோரிக்கைக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷேக் ஹசீனா விரும்பும்பரை அவர் இந்தியாவில் இருக்கலாம் என்றும் அதுகுறித்து அவர்தான் முடிவெடிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

    புதிய போராட்டம் 

    இந்த சூழலில் ஆண்டின் இறுதியான தற்போது வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

    ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.

    கடந்த 20 ஆம் தேதி அதிகாலை, பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    அங்கு தொடர்ந்து பாதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என யூனிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போராட்டத்தில் இந்திய எதிர்ப்பு மேலோங்கி காணப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.  

    • மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
    • குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.

    அரசுக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மேலாளர், லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று தூக்கிலிடப்பட்டதாக நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.

    சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018 க்கு இடையில் பல திட்டங்களை வாங்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவாக அவர் பெரும் அளவில் லஞ்சம் பெற்றதாகக் கண்டறியப்பட்டது.

    அவர் 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.

    இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.  

    • ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
    • ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.

    மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது. 

    • ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
    • 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கொலைக் குற்றத்திற்காக நாளை (ஜூலை 16) ஏமனில் மலையாள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் நிமிஷாவை காப்பாற்ற மதத் தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கேரள இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் ஏமன் மத குருக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் குறித்து அபூபக்கர், ஏமன் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமருடன் கலந்துரையாடினார்.

    மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று காந்தபுரம் அபூபக்கர் வலியறுத்தி உள்ளதாக தெரிகிறது. மரண தண்டனைக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    • பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும்.

    ஈரானில் புக்கானைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியிருந்தது.

    இந்நிலையில் கொலைக் குற்றவாளிக்கு ஈரானிய அதிகாரிகள் பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

    உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொதுவில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    வழக்கின் மிகவும் தீவிரத் தன்மை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை பொதுவாக விதிக்கப்படுகிறது.

    மனித உரிமை குழுக்களின் தரவுகளின்படி, உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும். 

    • பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.
    • விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

    தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

    தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்வார்.

    இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.

    2017ல் போலீசார் ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

    ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்களில் ஜப்பான் ஒன்று. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.

    • ஈரான் - இஸ்ரேல் நாடுகள் 10 நாட்களுக்கும் மேலாக சண்டையிட்டு வந்தன.
    • டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

    ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு வேலை பார்த்த 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

    இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியாக ஈரான் அரசு குற்றம் சாட்டி இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

    இதே குற்றச்சாட்டுகளுடன் ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×