search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Parliamentary elections"

  • அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம்.
  • மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்பு.

  பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

  அந்த வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் தி.மு.க. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21) சென்னையில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  தொடக்க விழாவை ஒட்டி இன்று கட்சி அலுவலகத்துக்கு செல்லும் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்று தெரிகிறது.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்து இருந்தார்.

  • அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.
  • மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.

  சென்னை:

  தமிழகத்தில் கொங்கு மண்டலம் எனப்படும் கோவை பகுதி அ.தி.மு.க. வுக்கு செல்வாக்குள்ள பகுதி. ஒவ்வொரு தேர்தலிலும் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

  கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கோவையில் பா.ஜனதா வென்றது. அதன் பிறகு அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை.

  அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கோவை தெற்கு தொகுதியை கைப்பற்றியது.

  வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி யாருக்கு சாதகமாக இருக் கும் என்று 'நியூஸ் கிளவுட்' என்ற தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது.

  இந்த கருத்துக்கணிப்பில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி முழுக்க ஏழை, நடுத்தரம், பணக்காரர்கள் எனவும், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனவும், பல்வேறு சாதியினரிடேயும் மொத்தமாக சேர்த்து 1596 பேரிடம் கருத்து கேட்டு உள்ளார்கள்.

  இதில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 663 வாக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 593, அ.தி.மு.க. கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது.மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.

  இந்த கருத்துகணிப்பின் முடிவு பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. பா.ஜ.க.வின் இந்த அபார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை, பண்பு, அவரின் தலைமையில் பா.ஜ.க. என்ற காரணங்கள் ஒரு பக்கம் உள்ளது.

  அதே நேரத்தில் தி.மு.க. சார்பாக கோயம்புத்தூர் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் தி.மு.க.வினரின் ஊழல், கறைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை ஆகியவையும் உள்ளது.

  1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என தி.மு.க., விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் ஆவேசமடைகின்றனர்.

  அதே நேரத்தில் அ.தி.மு.க.வினரும் தி.மு.க.விற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பேசி வருவதும் கோவை பகுதியில் அ.தி.மு.க. செல்வாக்கு சரிவிற்கு மிகமுக்கிய காரணம் ஆகும்.

  மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது ஆகியவையும் தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.

  தொடர்ந்து அண்ணாமலையும் தி.மு.க.வின் ஊழல் பட்டியல்களை தி.மு.க. பைல்ஸ் என தொடர்ந்து வெளியிட்டு வருவது பொதுமக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் அனுமர் வால் போல் நீள்கிறது. இது கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.

  அதே சமயத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களோடு மக்களாக, என் மண்-என் மக்கள் நடைபயணத்தை மேற் கொண்டதும் கோயம்புத்தூர் மக்கள் மனதில் பா.ஜ.க.வின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.

  மேலும் கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தர வேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்க மறுத்து, வாய் மூடி மவுனம் காப்பதும், தி.மு.க. கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதையும் கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டி உள்ளது.

  கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை-சென்னை, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இ.எஸ்.ஐ. மருத்து வமனையை மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது என கோயம்புத்தூரை மையப்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு திட்டங்களை அறிவித்ததும் கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் பா.ஜ.க. வின் செல்வாக்கு உயர காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

  • இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.
  • புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

  புதுச்சேரி:

  புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

  பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் உள்ள பா.ஜனதா தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவரும், புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

  அதே நேரத்தில் உள்ளூர் அரசியலில் தொடர விரும்புவதால் அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். அதோடு கட்சி மேலிடத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற செய்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் கட்சி மேலிடம் அவரை வேட்பாளராக நிறுத்தத்தான் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

  இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பெயர்களும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

  ஆனால் புதுச்சேரியை சாராத இவர்கள் போட்டியிட்டால் எதிர்கட்சிகள் அதனை சாதகமாக வைத்து பிரசாரம் செய்வார்கள் என்பதால் பா.ஜனதா தலைமைக்கே தயக்கம் உள்ளது.

  இதுதவிர பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமையின் முடிவுக்காக பா.ஜனதாவினர் காத்திருக்கின்றனர்.

  இதே போல எதிர்கூட்டணியான இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.

  ஆனால் ஏற்கனவே காங்கிரசின் சிட்டிங் சீட் என்பதால் தமிழகத்தில் தொகுதிகளை குறைத்தாலும், புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

  காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் போட்டியிடுவதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது.

  மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள வைத்தி லிங்கத்திற்கும், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் உள்ளது. ஏனெனில் 2026-ல் சட்ட மன்ற தேர்தல் வரும்போது, மீண்டும் தனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என விரும்புகிறார்.

  இதனால் வெளிப்படையாக இதுவரை தான் எம்.பி. பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறவில்லை.

  அதேநேரத்தில் காங்கிரசில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கூட்டணியில் தமிழகத்தில் பேச்சுவார்த்தை முடிந்து, புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் போதுதான் இதற்கு முடிவு கிடைக்கும்.

  உள்ளூர் அரசியலில் ஈடுபட புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து விருப்பம் காட்டி வருவதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.

  அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க. போட்டியிட்டால் 4 பிராந்தியத்துக்கும் அறிமுகமான புதுவை மாநில செயலாளர் அன்பழகன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

  ஒரு வேளை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் புதுவை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் களமிறக்கப் படலாம். ஏனெனில் பா.ம.க.வும் புதுவை தொகுதிக்கு குறி வைக்கிறது.

  • என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?
  • ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் திலகர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பாராளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-

  கடந்த 2019-ம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜனதா வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகி சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது.

  விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வக்கீலின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்பு சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்தார்.

  தமிழ்நாட்டுக்கு மெட்ரோ 2-வது திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ளச்சேதத்துக்கு இழப்பீடு கொடுக்க மறுப்பு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது.

  வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை மந்திரி எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் என கூறினேன். ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது.

  தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, நான் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக்கருத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
  • தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

  சென்னை:

  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

  தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.

  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.

  இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.

  பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

  இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.

  தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.

  ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

  ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.

  பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.

  எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

  பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.

  • திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
  • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  புதுச்சேரி:

  புதுவையில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறிய தாவது-

  பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட வண்ண கலவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து புதுவை அரசு தடை விதித்தது. அந்த செய்தியை பார்த்த பிறகு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

  அப்போது, அதில் புற்று நோய் பாதிப்பை உண்டாக்கும் வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலோடு வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை.

  திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதே அமைச்சர்தான் பாராளு மன்றத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர காலதாமதம் ஏன் என்ற கேள்விக்கு தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தர வில்லை என தெரிவித்தார்.

  2019-ல் பிரதர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார்?. அல்லது வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட பிரதமர் ஒரு மாநில முதல்வர் எப்படி அழைத்து வருவார் என அன்றே நான் கேள்வி எழுப்பினேன்.

  நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிச்சாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்ற உண்மையான காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்பட வில்லை என்றார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.

  2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  இந்த தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நில ஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இதைத்தொடர்ந்து அவரிடம் புதுவை எம்.பி. தொகுதியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.

  • 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
  • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

  தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

  தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

  கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

  வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

  அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!

  வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்

  இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
  • சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மல்காஜ்கிரி எம்.எல்.ஏ மைனம்பள்ளி அனுமந்த ராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெமுல வீரேஷம், குப்பம் அணில் குமார் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

  இதேபோல் ஜி.எச். எம்.சி முன்னாள் மேயர் போந்து ராம் மோகன், விஹாராபாத் மாவட்ட தலைவர் சுனிதா ரெட்டி, ஸ்ரீதேவி, பி.ஆர்.எஸ் தலைவர் சந்திர சேகர் ரெட்டி, பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் மாமனார் ஆகியோர் தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

  பின்னர் ஐதராபாத்தில் உள்ள சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  • கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது.
  • மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன்.

  ஓசூர்:

  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவர் கேசவரெட்டியின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை ஓசூர் வந்தார்.

  பின்னர், அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:

  "பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பு மிகவும் அவசியம் மற்றும் இந்த பகுதி மக்களுக்கு அவசர தேவையாகும். இதனை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். எனவே, இரு மாநில மக்களின் அவசிய, அவசர தேவையை புரிந்து கொண்டு, தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து விரைவில், மெட்ரோ நீட்டிப்புக்கான உறுதியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

  கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது சம்பந்தமாக கர்நாடக அரசுடன் கண்டிப்புடன் பேசி, தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிப லிக்கும் அரசாக செயல்பட வேண்டும்.

  நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.

  மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன். அதனை நம்புகிறேன். "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை த.மா.கா. வரவேற்கிறது. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.

  நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், த.மா.காவை பலப்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்படும்.

  இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

  அப்போது கேசவரெட்டி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.