என் மலர்
இந்தியா

ஆந்திரா, தெலுங்கானாவில் பவன் கல்யாண் கட்சியால் 40 தொகுதிகளில் பா.ஜ.க.விற்கு செல்வாக்கு அதிகரிப்பு
- ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.
திருப்பதி:
மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து வருகிறது.
ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்து சென்ற பிறகு அங்கு ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் பாஜக உள்ளது. ஆனால் ஆந்திராவில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து கடந்த தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.
இந்நிலையில் பாஜகவுடன் பிரபல திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் மிகுந்த நெருக்கமாக உள்ளார். இதனால் பாஜக, ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
கட்சி தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளில் ஜனசேனா கட்சிக்கு நகர்ப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.
பவன் கல்யாண் செல்லும் இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதே நேரம் கிராமப்புறங்களில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அந்தப் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.
ராயலசீமா பகுதியில் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பவன் கல்யாண் கடும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.
பவன் கல்யாண் கட்சியால் தெலுங்கானா, ஆந்திராவில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பா.ஜ.க. பவன் கல்யாண் கட்சி தொண்டர்களிடம் உற்சாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.






