என் மலர்
வங்காளதேசம்
- செல்வாக்கை அபகரித்தார் என குற்றம்சாட்டப்பட்டது.
- 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருப்பவர் துலிப் ரிஸ்வானா சித்திக். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இவரது அத்தை ஆவார்.
தனது அத்தையான ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, டாக்காவின் குல்ஷன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை எந்தப் பணமும் செலுத்தாமல் சட்டவிரோதமாக அபகரித்துக் கொண்டதாக துலிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகளும், துலிப் சித்திக்கிற்கு 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் லண்டனில் வசிப்பதால், அவரை கைது செய்து வங்கதேசத்திற்கு அழைத்து வர 'ரெட் நோட்டீஸ்' வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் கோரியது.
எனவே துலிப் சித்திக்கை கைது செய்ய சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் (Interpol) உதவியை நாடுமாறு அதிகாரிகளுக்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்டர்போல் மூலம் 'ரெட் நோட்டீஸ்' பிறப்பிக்க ஆவன செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வங்கதேசத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மான் பிஎன்பி அரசு, அவாமி லீக் தலைவர்கள் மீது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மீது வங்கதேச நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 இல் மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை நாடு கடத்த வங்கதேசம் தொடர்ந்து இந்தியாவிடம் கோரிவருவது குறிப்பிடத்தக்கது.
- வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்தி சென்றது.
- ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஆட்சி மாறினாலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது.
சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்திச் சென்றது.
ஆள் நடமாட்டமற்ற பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண், மூன்று பேரால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரை கடுமையாக தாக்கியும் அவர்கள் துன்புறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சுயநினைவின்றி அப்பகுதியில் கிடந்த அவரை மீட்ட உள்ளூர் மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரிகிறது.
காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து உள்ளூர் மக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் கடந்த வாரம் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
- வெளிநாடுகளில் உள்ள வங்கதேசத் தூதரகங்களில் இருந்து அதிபரின் உருவப்படங்கள் ஒரே இரவில் அகற்றப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம்
- எனது வெளிநாட்டுப் பயணங்களை இரண்டு முறை தடுத்தார்.
வங்கதேசத்தில் நோபல் பரிசுவென்ற முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகவும், தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரண்டு முறை ரத்து செய்ததாகவும் அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர்,
"முகமது யூனுஸ் 14 முதல் 15 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை கூட அது குறித்து முறைப்படி என்னிடம் (அதிபருக்கு) தெரிவிக்கவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயக் கடமையாகும்." என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வங்கதேசம்-அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக பேசியவர்,
'அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற ஒரு மாநில ஒப்பந்தம் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, முந்தைய அரசாங்கத் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தனர். இது ஒரு அரசியலமைப்பு கடமை. ஆனால் அவர் [யூனுஸ்] அதைச் செய்யவில்லை," என்றுக் கூறினார்.
"அவர் [யூனுஸ்] எனது வெளிநாட்டுப் பயணங்களை இரண்டு முறை தடுத்தார். ஒன்று கொசோவோவிற்கு. இந்த சம்பவம் கடந்த டிசம்பரில் நடந்தது. மற்றொரு சந்தர்ப்பத்தில், கத்தார் எமிரின் அழைப்பிற்கு, அவர் வேலையாக இருப்பதாகக் கூறி, அதில் பங்கேற்க முடியாது என வெளிவிவகார அமைச்சகம் ஒரு கடிதத்தை அனுப்பியது.
அடிப்படையில், அந்த அரசாங்கம் என் பெயர் எங்கும் வருவதை விரும்பவில்லை. அவர்கள் என்னை முழுமையாக இருட்டில் வைத்திருக்க முயன்றனர். மக்கள் என்னை அடையாளம் காண அவர்கள் விரும்பவில்லை. அவர் அரசியலமைப்பின் எந்த விதியையும் பின்பற்றவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேசத் தூதரகங்களில் இருந்து அதிபரின் உருவப்படங்கள் ஒரே இரவில் அகற்றப்பட்டது தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் தற்போதைய வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை பாராட்டிய அவர், அவர் மிகவும் நேர்மையான நபர் என தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
- 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.
இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்தது.
இதனால், டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.
பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறினார்.
இந்நிலையில், இந்தியா வங்கதேசம் இடையே 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றபின் இந்தியாவுடன் சுமூக உறவை கடைபிடிக்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 79 பேரில், 4 சிறுபான்மையினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
- 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாணவர்கள் போராட்டத்தால் 2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை வங்கதேசத்தின் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் உள்ள 297 இடங்களில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியான பிஎன்பி, 212 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
எதிர்த்து போட்டியிட்ட ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. 79 சிறுபான்மையின வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் 43 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் 185 எம்பிக்கள் கடந்த காலங்களில் வழக்கு சந்தித்தவர்கள் எனவும், 95 எம்பிக்கள் மீது கடந்த காலத்திலும் தற்போதும் வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிஎன்பி கட்சியின் எம்பிக்களில் 50.24% பேர் மீது வழக்குகள் உள்ளன. இரண்டாவது பெரிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்பிக்கள் 47.07% மீது வழக்குகள் உள்ளன.
எம்பிக்களில் 182 பேர் தொழிலதிபர்கள். இதற்கு அடுத்தபடியாக 36 பேர் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் 22 பேர், விவசாயிகள் 13 பேர் உள்ளனர். வெறும் 8 பேர் மட்டுமே அரசியலைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். 297 எம்பிக்களில் 271 பேர் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்.
- இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.
- யூனுஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
வங்கதேசத்தில் 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த 18 மாதங்கள் கழித்து கடந்த பிப்ரவரி 12 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 300 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றி தாரிக் ரஹ்மான் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி வெற்றி அமோக வெற்றி பெற்றது.
BNP சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கோயேஷ்வர் சந்திர ராய் மற்றும் நிதாய் ராய் சவுத்ரி ஆகிய இரண்டு இந்துத் தலைவர்களும் அடங்குவர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் நிலவி வந்த இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் தனது பதவியை நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்கிறார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.
கடந்த டிசம்பரில் தாய் கலீதாவின் மரணத்தின் பின் அவர் நாடு திரும்பினார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 3 மாதத்தில் மாபெரும் வெற்றி பெற்று வங்கதேச பிரதமர் ஆகிறார். சுமார் 32 முதல் 42 பேரை கொண்ட அமைச்சரவையை தாரிக் ரஹ்மான் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அவரின் பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய யூனுஸ், "இன்று இடைக்கால அரசு விலகுகிறது. ஆனால், நாம் தொடங்கியுள்ள ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
- 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது.
- ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும்.
2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தம் இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.
வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
- தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும்.
- தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது என தெரிவித்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி 209 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பி.என்.பி. சார்பில் டாக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கட்சியின் முன்னணி தலைவர்களுடன் இணைந்து தாரிக் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்தல் வெற்றி வங்கதேசத்துக்கு உரியது. இந்த தேர்தல் மூலம் சுதந்திரம் மற்றும் உரிமை ஆகியவற்றின் உண்மையான சாராம்சம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இதைச் செய்வோம். பொறுப்பாக இருந்து நமது கடமைகளைச் செய்வோம்.
நாட்டின் ஒற்றுமைதான் நமது பலம், பிரிவினை பலவீனம். எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நியாயமான தேர்தல்களை நடத்தியதற்காக இடைக்கால அரசாங்கத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு.
- ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ந்த பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வந்தது.
இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை நடந்த பாராளுமன்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 200க்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு பிரதான கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையலான கூட்டணி 71 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.
இந்த தேர்தலில், ஒரு காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.
இவர்களில் இருவர் தாரிக் ரஹ்மானின் பிஎன்பிகட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்தவர்.
பிஎன்பியை சேர்ந்த தலைவர் லுட்போஸ்மேன் பாபர். 2004-இல் ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில்ஈடுபட்டதற்காக அவருக்கு 2015 ஆம் ஆண்டு இரண்டாவது மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், டிசம்பர் 2024-இல் வங்கதேச உயர் நீதிமன்றம் இவரை விடுவித்தது. தற்போது நடந்த தேர்தலில் 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
பிஎன்பியை சேர்ந்த மற்றொரு தலைவர் அப்துஸ் சலாம் பின்டு. இவரும் கிரானைட் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டவர்.
இந்தியாவில் நடந்த சில குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. இவர் தற்போது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜமாத் இ இஸ்லாமி கட்சியை அசாருல் இஸ்லாம், ற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.
1971 வங்கதேச விடுதலைப் போரின் போது 1,200 பேரைக் கொன்றது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளுக்காக 2014-இல் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு இவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட தலைவர்களின் தற்போதைய வெற்றி இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தற்போது பிரதமர் ஆக உள்ள தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
- அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது.
இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.
இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
சுமார் 20 ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாரிக் ரஹ்மான்:
வங்கதேசத்தின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் வாரிசான தாரிக் ரஹ்மான் ஒரு காலத்தில் அந்நாட்டு அரசியலில் 'டார்க் பிரின்ஸ்' என்று அழைக்கப்பட்டார்.
தாரிக் ரஹ்மான் தந்தை ஜியாவுர் ரஹ்மான் ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் பிடிபி கட்சியை தொடங்கி 1977 இல் வங்கதேச அதிபராக பொறுப்பேற்றார். 1981 இல் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த பதவியில் இருந்தார்.
1981 இல் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச பிரதமராகவும் பிடிபி கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
1991 முதல் 1996 வரையும் மற்றும் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஜியா பிரதமராக இருந்த காலகட்டத்தில் மகன் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பதால்தான் நிழல் பிரதமர் என்று பொருள்படும் வகையில் அவரை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் டார்க் பிரின்ஸ் என்று அழைத்தன.
2007 இல் ராணுவ புரட்சி ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

17 மாதங்கள் சிறையில் இருந்த தாரிக் ரஹ்மான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார்.
பிரிட்டனிலேயே தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோது வங்கதேசம் திரும்பினார்.
தாயின் மறைவின்பின் பிஎன்பி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ரஹ்மான் மூன்று மாதங்களில் அக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு பின் அமைந்த முகமது யூனுஸ் ஆட்சியின் நிச்சயமின்மைக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் வங்கதேச மக்களுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன.

ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் ஆக்குவேன், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான வங்கதேசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வழங்கியிருந்தார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தாரிக் வன்மையாகக் கண்டித்தார்.
இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்தில் 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.
- இந்தத் தேர்தலில் 32.88 சதவீதம் வாக்குகள் பதிவானது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சுமார் 18 மாதத்துக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.
வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மான் ஆகியோர் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்தனர். வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், டாக்காவின் உயர்மட்ட குல்ஷன் பகுதியில் உள்ள குல்ஷன் மாதிரி பள்ளி மற்றும் கல்லூரி மையத்தில் வாக்களித்தார்.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் பி.என்.பி. கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
நேரம் செல்ல செல்ல பி.என்.பி. கட்சி பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அமோக வெற்றி பெற்றது என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
150 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தாரிக் ரஹ்மான் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேச பாராளுமன்றத்தின் 299 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு.
- வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வரும் பொதுமக்கள்.
வங்காளதேசத்தில் இன்று காலை 7.30 மணிக்கு பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில் இந்த தேர்தல் கவனத்தை ஈர்த்துள்ளது. 350 தொகுதிகளை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதா சார முறையில் தேர்வு செய்யப்படும்.
தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. மேலும் சில கட்சிகளும் களத்தில் உள்ளன.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 9.58 லட்சம் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 42,779 வாக்குச்சாவடி மையங்களில் 90 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக தலைநகர் டாக்கா வில் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் நாடு முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். டாக்கா-17 தொகுதியில் போட்டியிடும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரகுமான் தனது வாக்கை பதிவு செய்தார்.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரகுமான் வாக்களித்தார். தேர்தல் நேரத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டன. போகுரா பகுதி வாக்குச்சாவடி அருகே பி.என்.பி கட்சியின் மாணவர் தலைவர் மிலோன் மியா கத்தியால் குத்தப்பட்டார்.
பரிசாலின் பாபுகஞ்ச் உபாசிலா பகுதியில் பணம் மற்றும் தேர்தல் சீட்டுகளுடன் திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சில மாவட்டங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
வாக்குப்பதிவு மாலை 4.30 மணிக்கு முடிவடையும். அதன்பின் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தலின் முழுமையான வெற்றி விவரம் நாளை தெரியவரும். மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் கலிதா ஜியா மறைவுக்கு அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுகிறார். அக்கட்சிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கடும் சவாலாக உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கூட்டணியில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த மாணவர் இயக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலுடன் 84 அம்ச ஜனநாயக சீா்திருத்தங்களை உள்ளடக்கிய 'ஜூலை தேசிய சாசனம் 2025' மீதான மக்கள் வாக் கெடுப்பும் நடைபெற்றது.






