என் மலர்
நீங்கள் தேடியது "corruption case"
- ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.
மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது.
- ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
- ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
குறிப்பாக அவரும் அவரது மனைவி சாராவும் கோடீஸ்வரர்களிடமிருந்து நகைகள் உள்ளிட்ட 260,000 டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை வாங்கியது, தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
இந்நிலையில் நேதன்யாகு மீதான வழக்கை கைவிடும்படி டிரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, நேதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், நேதன்யாகுவுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாதது என்றும் டிரம்ப் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
டொனால்டு டிரம்பின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நேதன்யாகு கூறினார். இருப்பினும் இந்த கடிதத்திற்கு பதிலளித்த இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தன் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நேதன்யாகு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
- இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
- ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
- ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.
இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.
அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை OMC நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கியது.
- குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஓபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கர்நாடகா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வ் வனப்பகுதியில் 2007 முதல் 2009 வரை OMC நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலால் மாநில கருவூலத்திற்கு ரூ.884 கோடி இழப்பு ஏற்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சிபிஐ, 2011 அன்று முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது.
நிறுவனத்தின் இயக்குநரான ஜனார்த்தன் ரெட்டி, அவரது மைத்துனரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அப்போதைய சுரங்கங்கள் மற்றும் புவியியல் உதவி இயக்குநரான VD ராஜகோபால் மற்றும் ஜனார்த்தன் ரெட்டியின் தனி உதவியாளர் மஹ்ஃபுஸ் அலி கான் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து இன்று தண்டனையை அறிவித்துள்ளது.
அதன்படி நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்தது. ஜனார்தன் ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான உடனேயே, சிபிஐ ஜனார்தன் ரெட்டி மற்றும் பிறரைக் காவலில் எடுத்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் முன்னாள் அதிகாரி பி. கிருபானந்தம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
- முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை தெரிவித்தது.
- 2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.
இந்தியாவில் 2010 இல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் களத்திலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 13 ஆண்டுகள் விசாரணை நடத்திய வந்தது
இந்நிலையில் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அமலாக்கத் துறை வழக்கை முடித்து வைக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை ஏற்று நீதிபதி சஞ்சீவ் அகா்வால் நேற்று இந்த வழக்கை முடித்து வைத்தார். மேலும் சுரேஷ் கல்மாடி விடுதலை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காங்கிரசை இழிவுபடுத்த 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற ஊழல்களைப் பிரதமர் மோடியும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஜோடித்தனா்.
2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.
தற்போது காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு வழக்கை முடித்து வைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும், கேஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை.
- நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், "அமலாக்கத்துறை வெளிப்படையாக இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் மறைந்துகொள்கிறது. எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கொடுமை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, 'மாநில போலீசார் பதிவு செய்த லஞ்ச வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது'' என்று வாதிட்டார்.
இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதிகள், அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை கோர்ட்டு கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கோர்ட்டு பரிசீலிக்க முடியும்.
இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
- கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.
- ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார்.
- அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
அதேபோல, 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரு வழக்குகளும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
இதே நீதிபதி, ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது.
- தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.
சென்னை:
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:-
லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்க வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் ஐகோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு அவரை விடுவித்து இருக்கிறது.
கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது உண்மையில் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். விடுதலையான, விடுவிக்கப்பட்ட இதுபோன்ற அரசியல்வாதிகளின் வழக்குகளை எல்லாம் மறு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் என்னை சிலர் வில்லனாக பார்க்கின்றனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த கருத்து நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
- பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
இதனால் ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
கீழ் திருப்பதியில் ஓட்டல்கள், கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த முதியவர்கள் குழந்தைகள் உள்படபக்தர்கள் உணவு, டீ, காபி, குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர்.
பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் தவித்தனர். ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.
இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருப்பதி ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
- சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
- தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அமராவதி தலைநகரில் உள் வட்ட சாலை அமைத்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பெயரை முதல் குற்றவாளியாக சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.
ஏ.சி.பி. நீதிமன்றத்தில் லோகேஷ் பெயரை குறிப்பிட்டு சி.ஐ.டி. மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் சிலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த வழக்கு காரணமாக அடுத்ததாக நாரா லோகேஷை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் நாரா லோகேஷ் நேற்று சந்தித்தார். தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.






