என் மலர்
நீங்கள் தேடியது "CBI"
- பணத்தை லஞ்சமாக பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
- கே.சி.ஜோஷி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தென்கிழக்கு ரெயில்வே, முதன்மை தலைமை மெட்டீரியல் மேலாளராக பணியாற்றி வருபவர் கே.சி.ஜோஷி. இவர் ரெயில்வே துறைக்கு வருடாந்திர ஒப்பந்தத்தில் லாரிகள் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்திடம் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக அந்த நிறுவனத்தின் சார்பில் உரிமையாளர் பிரணவ் திரிபாதி சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தார்.
இந்த ஒப்பந்த நிறுவனம் ஒரு லாரிக்கு மாதத்துக்கு ரூ.80 ஆயிரம் வீதம் ரெயில்வே துறைக்கு லாரிகளை சப்ளை செய்கிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் மின்னணு சந்தை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி மாதத்தில் மின்னணு இணையதளம் மூலம் வடகிழக்கு ரெயில்வேயில் 3 டிரக்குகளை வழங்குவதற்கான டெண்டரை அவர் பெற்றிருந்தார். இதற்காக ஒரு லாரிக்கு மாதம் ரூ.80 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை செல்லுபடியாகும்.
மின்னணு இணையதளத்தில் இருந்து திரிபாதியின் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யுமாறு கே.சி.ஜோஷி கடிதம் எழுதியதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், நடந்து வரும் டெண்டரை ரத்து செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜோஷியை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியபடி, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் ரெயில்வே அதிகாரி ஜோஷியிடம் சென்று ரூ.3 லட்சம் அளித்தனர். அந்த பணத்தை லஞ்சமாக பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கே.சி.ஜோஷி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோரக்பூரில் உள்ள அவரது அலுவலகம், இல்லம் மற்றும் நொய்டாவில் உள்ள சொந்த வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ரூ.2.61 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
- ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- இந்த விபத்து தொடர்பாக 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.
புதுடெல்லி:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக மரணம் விளைவிக்கக்கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றிற்காக, இந்திய தண்டனை சட்டம் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒடிசா ரெயில் விபத்து நடந்த பகுதியில் பணியாற்றிய சீனியர் செக்ஷன் பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, செக்ஷன் பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீஷியன் பப்புகுமார் ஆகிய 3 பேரையும் கடந்த ஜூலை 7-ம் தேதி சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், இந்தப் பிரிவுகளின் கீழ் போகேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விபத்து நடந்த 2 மாதத்திற்குள் சிபிஐ புலன் விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
- மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
- மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, 20 வழக்குகளை சி.பி.ஐ.யிடம் மணிப்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.
அவற்றில், ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும். மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
டான்சிங் ஹங்சிங் என்ற 7 வயது சிறுவனின் தாயார் மீனா ஹங்சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர். அவனுடைய தந்தை ஜோசுவா ஹங்சிங், குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஒரு நிவாரண முகாமில் டான்சிங் ஹங்சிங் தங்கி இருந்தபோது, மெய்தி இன போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், துப்பாக்கி குண்டு ஒரு இரும்பு தூணில் பட்டு தெறித்து, டான்சிங்கை காயப்படுத்தியது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண் லிடியாவும் மெய்தி இன கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவனுடன் ஆம்புலன்சில் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது. டிரைவரையும், நர்சையும் விரட்டியடித்தது.
சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண்ணும் தங்களை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் போராட்ட கும்பல் ேகட்கவில்லை. ஆம்புலன்சுக்கு தீவைத்தனர். இதில் சிறுவனுடன் 3 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.
போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைக்க முயன்றபோதிலும், பலன் கிட்டவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக லம்பெல் போலீஸ் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கும், கங்போக்பி போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே 3-ந் தேதி, குகி பழங்குடியின தலைவர்களால், தான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு மெய்தி இன பெண் அளித்த புகாரும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் அடங்கும்.
- புதிய திருத்தத்தின்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.
- நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தாக்கல் செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு மைய பொறுப்பு இயக்கு னராக 2008-16-ம் ஆண்டு பேராசிரியர் ஹரிகரன் பணிபுரிந்தார்.
இவர் பேராசிரியர், பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தது தொடர்பாக போலி ரசீது மூலம் கணக்கு காட்டி ரூ.2.25 கோடி மோசடி செய்தார். இவரை காப்பாற்ற துணைவேந்தர் குர்மீத்சிங் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் 2 புகார்கள் அளிக்கப்பட்டது. புதுவை மாநில ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஆனந்த் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆஜரானார். அப்போது ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.
பல்கலைக்கழகம் சார்பிலும் பேராசிரியர் மீதான புகார் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, ஊழல் புகாரில் சிக்கியவ ர்களை காப்பாற்ற முயற்சி ப்பதை ஏற்க முடியாது. துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு ப்பதிந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்தது. பல்கலைக்கழக நிதி பொறுப்பு அதிகாரி லாசர் தணிக்கை அறிக்கை சமர்பித்துள்ளார். அதில் ஹரிகரன் ரூ.27 லட்சம் போலி ரசீது தாக்கல் செய்து ள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஹரிகரன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தாக்கல் செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் துணைவேந்தரை சேர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
- புல் பங்காஷ் பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார் எனவும் சிபிஐ கூறியிருக்கிறது.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் நடந்த வன்முறையில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த பாதல் சிங், தாக்கூர் சிங், குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். சீக்கிய குருத்வாரா தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த படுகொலையின் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அப்போதைய எம்.பி.யுமான ஜெகதீஷ் டைட்லர் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
''புல் பங்காஷ் குருத்வாரா பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியுள்ளார். அதன் விளைவாக குருத்வாரா தீயிட்டு எரிக்கப்பட்டது. அதில் 3 சீக்கியர்கள் உயிரிழந்தனர்'' என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும், அந்த குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது:
ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார். கலவரத்தின்போது அந்தப் பெண்ணின் கணவருக்குச் சொந்தமான கடையை, ஒரு கும்பல் சூறையாடியுள்ளது. அந்தப் பெண் பயந்துபோய் உடனே வீடு திரும்பியிருக்கிறார். அந்த வழியாக வந்த ஒரு அம்பாசிடர் காரிலிருந்து ஜகதீஷ் டைட்லர் இறங்குவதை பார்த்துள்ளார். பின்னர் ஒரு கும்பலிடம் சென்ற டைட்லர், சீக்கியர்களை முதலில் கொல்லுங்கள் என்றும் பின்னர் கடைகளைச் சூறையாடுங்கள் என்றும் தூண்டிவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
வீடு திரும்பியதும் அப்போது பக்கத்து வீட்டு மாடியில் இருந்து பாதல் சிங், குர்சரண் சிங் ஆகியோரின் உடல்கள் தூக்கி எறியப்படுவதை பார்த்திருக்கிறார். பின்னர் மர வண்டியில் டயர்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் டயர்களைப் பயன்படுத்தி இந்த உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. குருத்வாராவை, வன்முறை கும்பல் தீயிட்டு எரிப்பதையும் அந்தப் பெண் பார்த்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஒரு கும்பல் பெட்ரோல் கேன்கள், உருட்டுக்கட்டைகள், வாள்கள் மற்றும் கம்பிகளை எடுத்துச் செல்வதை மற்றொரு சாட்சி பார்த்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
குருதாவாரா புல் பங்காஷ் அருகே 1984 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சீக்கியர்களைக் கொல்லத் தூண்டியதுடன், தடையை மீறி அங்கு கூடிய சட்டவிரோத கும்பலின் ஒரு அங்கமாக ஜெகதீஷ் டைட்லர் இருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் பதிவாகியுள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புல் பங்காஷ் வன்முறை மற்றும் கொலை வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. ஜெகதீஷ் டைட்லருக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
- வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு
- விசாரணை நடத்த இருந்த நிலையில், உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது
கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கக்கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு கர்நாடாக மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, சிபிஐ தாக்கல் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் சி.டி. ரவிக்குமார், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்ல. ஆனால், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவாக முடித்து வைக்க வேண்டுகோள் விடுக்க சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கூறினர்.
கடந்த 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
2020-ம் ஆண்டு சிவகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. இரண்டு வருடங்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
2017-ம் ஆண்டு சிவக்குமாருக்கு சொந்தமான இடத்தில் வருமானவரித்துறை சோதனையிட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதனைத்தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அனுமதி கொடுக்க, அக்டோபர 3-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிவக்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
- ஆறு வழக்குகள் சிபிஐ, 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும்
- வீடியோ வழக்கில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டன.
நேற்றுமுன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் இதுகுறித்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஆறு வழக்குகளை சிபிஐ-யிடமும், மூன்று வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைத்துள்ளது.
- பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
- வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும், வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். அநேகமாக அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது.
- பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் உள்நோக்கம் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது ஓபன் சீக்ரெட் ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராகவும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
தமிழக கவர்னர் ரவி ஏராளமான கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். தி.மு.க., மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. தி.மு.க. எதனை கண்டும் அஞ்சப்போவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள்.
இந்த சோதனைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரும், மத்திய அரசும் தேர்தல் பிரசாரத்தை தி.மு.க.விற்கான தேர்தல் பிரசாரமாக செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின.
- 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.
சென்னை:
சென்னை செங்குன்றம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின. அதில், அப்போதைய அமைச்சர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இருந்தன.
இதுகுறித்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்று 6 பேரை முதலில் கைது செய்தது.
இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.
இதன்படி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பதாக கூறி திருப்பிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. அதிகாரி ஆஜராகி, "அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி முதல் நேற்று வரை 11 முறை வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.