என் மலர்
நீங்கள் தேடியது "Money Scam"
- தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
- தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புதுகாமன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலக பகுதியில் வசிக்கும் சண்முகத்துரை (58), அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த குணசேகரன் ஆகியோர் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகினர்.
இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டிய நபருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.
அவர்களின் தகுதிக்கேற்ப, வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதற்காக 2020-ல் பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் செல்வராஜ் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துரை, அவருடைய மகள் அர்ச்சனா, குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துரையை கைது செய்தனர்.
- மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது.
- நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு ஐரேனிய புரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும், தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.
- மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி ஆனந்த பிரியா (வயது28). சாப்ட் வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அனந்த பிரியாவின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கி மூலம் ரூ.10 லட்சம் கடன் தங்களுக்கு வந்துள்ளது என்று இருந்தது. அதனை நம்பிய ஆனந்த பிரியா அந்த லிங்கை கிளிக் செய்தார்.
அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் வரை பணம் காணமால் போய்விட்டது. இது குறித்து ஆன்ந்தபிரியா சைபர் கிரைம் போலீசாருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீ சாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஆனந்த பிரியாவிடம் இருந்து ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் என்ஜினீயரிடம் தனியார் வங்கி மூலம் கடன் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரை திருமணதகவல் மைய இணையதளம் மூலம் ஆவடி, கலைஞர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் நெருங்கி பழகினார். அப்போது இளம் பெண்ணிடம் உடல்நலக் குறைவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ரூ.1½ லட்சம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து அம்பத்தூரில் உள்ள ஆவடிமாநகர போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சுந்தர மூர்த்தி திருமணம் செய்வ தாக ஏமாற்றி பல பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
- மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன்.
எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக் கேட்டுள்ளார்.
இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.
மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரி செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த பெண் பெற்றுக்கொண்டார்.
அதன் பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபோல் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் பிரியா. இவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பினார். பின்னர் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை பிரியா உணர்ந்தார்.
இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினர்.
மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக் குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைனில் பல்வேறு வகையான நூதன முறையில் ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.
இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வந்தது.
- சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பண மோசடி இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பல் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகள் மூலம் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்து சொத்துக்கள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வந்தது.
இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். சிங்கப்பூர் முழுவதும் ஆர்ச்சார்ட் ரோடு முதல் சென்டோ தீவு வரை 9 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 400 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டான பணம், மற்றும் தங்ககட்டிகள், தங்க நகைகள்,விலை உயர்ந்த சொகுசுகார்கள் கைப்பைகளில் இருந்த பல்வேறு மாடல்களில் கைக்கடிகாரங்கள் சிக்கியது.
94 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 734.32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6,100 கோடி) மதிப்பிலான பங்களாக்கள், 50 சொகுசு கார்கள், கட்டுக்கட்டாக பணம், நகைகள், கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சீனா, கம்போடியா, சைப்ரஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 31 வயது முதல் 40 வயதுக்குட்டவர்கள் ஆவார்கள். இந்த சோதனையின் போது பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த ஒருவர் 2-வது மாடி பால்கனியில் இருந்து குதித்து சாக்கடையில் பதுங்கி இருந்தார், அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சைபீரியா நாட்டை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் தப்பி ஓட முயன்ற போது காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பங்களாவில் இருந்து 118 மில்லியன் டாலர் மதிப்பிலான 13 சொத்து ஆவணங்கள், 5 வாகனங்கள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். இது தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் ஒரு நெட்வொர்க் அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பண மோசடி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
- புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோவை மாவட்டம் பீளமேடு எல்லை தோட்டம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா. சித்ரா ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பாதி பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (48) என்பவர் சித்ராவை சந்தித்து தான் திங்களூரில் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தான் தேசியக்கொடி ஆர்டர் எடுத்து வருவதாகவும் கூறி அவரிடம் தேசிய கொடியை காண்பித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சித்ரா அவரிடம் தேசிய கொடி ஆர்டர் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அய்யப்பன் தனது மனைவி கவிதா வங்கி கணக்கிற்கு முன் பணம் போடுமாறு சித்ராவிடம் கூறியுள்ளார். இதை நம்பி சித்ரா, கவிதாவின் வங்கி கணக்கிற்கு கடந்த 4-ந் தேதி ரூ.3 லட்சத்தை முன்பணமாக அனுப்பியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கிற்கு மேலும் ரூ.1 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். 2 நாட்களில் வேலையை முடித்து ஆர்டர் கொடுத்து விடுவதாக கூறி அய்யப்பன் சென்றுவிட்டார்.
ஆனால் அதன் பிறகு அவர் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டார். சித்ரா பலமுறை போன் செய்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் நேரடியாக திங்களூர் சென்று அய்யப்பனிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா இது குறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தார்.
அந்தப் புகார் நகல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர்.
சென்னை:
சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் கூறினார்.
ஆனால் தான், செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்.-ல் இருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இது தொடர்பாக டார்லா பிரவீன்குமார், சண்டீபன், ராஜூ, அசோக்குமார், வீரராகவன், பிரவீன்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ.30 ஆயிரம் வரை பெற்றதாக டார்லா பிரவீன்குமார் தெரிவித்ததன் பேரில் அதற்கு உதவிய அசோக் குமார் மற்றும் ராஜூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அசோக்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் பேரில் வீரராகவன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற செயலுக்காக பயன் படுத்தப்பட்ட 7 செல்போன் கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இவர்களின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள்.
மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர். இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டவர்களை மோசடிக் கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்து உள்ளது.
எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1930 என்ற ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
- லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
- பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.
இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.
வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.
ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.
இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.