என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.1.40 கோடி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் புகார்
- சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
- கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமாலினி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் வருகை தந்தனர். பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் புதுப்பாளையத்தை சேர்ந்த துணி சலவை கடையில் கூலி வேலை செய்து வருகின்றோம். கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் புதுப்பாளையம் மற்றும் வன்னியர் பாளையம் சேர்ந்த 2 நபர்கள் எங்களை அணுகி வங்கி மற்றும் தபால் துறையில் முதலீடு செய்யலாம். எங்களுக்கு தெரிந்த நபர்கள் சீட்டு நடத்தி வருகின்றனர். மாதந்தோறும் தீபாவளி பண்டும் நடத்தி வருகிறார். ஆகையால் சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
மேலும் சீட்டு எடுத்தவுடன் உடனடியாக பணம் வழங்கி விடுவோம். தீபாவளி சீட்டு கட்டினால் 20 நாட்களுக்கு முன்பு பொருட்கள், தங்க நாணயம் ஆகியவை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.
அவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், பணம் தராமல் ஏமாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட நபர்கள் குறித்து விசாரித்த போது சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த கும்பல் பல்வேறு இடங்களில் பணத்தை ஏமாற்றி வீடு மற்றும் நிலம் வாங்கியுள்ளதும், கண்டெய்னர்கள் வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் ரூ.1 கோடி 40 லட்சம் ஏமாற்றிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத் தந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






