search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி"

    • ஜாதிக்காய் சாகுபடி செய்வது குறித்து ஜாதிக்காய் விவசாயி ரசூல் மொய்தீன் பகிர்ந்துள்ளார்.
    • அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.

    விவசாயத்தில் தெளிவான திட்டமிடலும், புரிதலும் இருந்தால் ஜாதிக்காயிலும் சாதிக்கலாம் என நிருபித்திருக்கிறார் திண்டுக்கல் விவசாயி ரசூல் மொய்தீன்.

    சமவெளியில் மரவாசனை பயிர்கள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்பவர்களின் கருத்தை பொய்யாக்கியுள்ளது இவருடைய குறுங்காடு.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இவரின் 100 ஏக்கர் நிலம். அங்கு ஆயிரக்கணக்கில் தென்னை மரங்கள் வளர்ந்து நிறைந்துள்ளன. அங்கு, நான்கு தென்னைக்கு நடுவே ஒரு ஜாதிக்காய் மரம் வைத்துள்ளார்.

    சமவெளியில் ஜாதிக்காயை வைத்து பார்ப்போமே என்ற நம்பிக்கையில் ஆரம்பத்தில் தொடங்கியுள்ளார். ஆனால் வளர்த்த பின் பிரதான பயிரான தென்னையை விடவும் ஊடுபயிரான ஜாதிக்காயில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    பல அடுக்கு சாகுபடி முறையில் ஒரு குறுங்காட்டையே உருவாக்கியிருக்கும் ரசூல் அவர்களிடம் இந்த ஜாதிக்காய் மரங்களை எப்படி பராமரிக்கிறீர்கள் என கேட்ட போது,

    "பொதுவாகவே ஜாதிக்காய் மரங்கள் 6ம் வருடத்திலிருந்து காய்ப்புக்கு வரும். ஆண்டு கூடக் கூட அதனுடைய காய் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகபட்சம் ஒரு மரத்திலிருந்து 1,000 காய்கள் வரை கூட கிடைக்கும்.

    என்னுடைய பிரதான பயிரான தென்னையில் ஒரு மரத்திலிருந்து ரூ.300/- கிடைப்பதே அதிகம் என்ற நிலையில், ஒரு ஜாதிக்காய் மரத்திலிருந்து ரூ.3,000/- முதல் ரூ.5,000/- வரை கிடைக்கிறது.

    அதிலும் குறிப்பாக எந்த செலவுமின்றி கிடைக்கிறது. இந்த மரத்திற்கென்று எந்த பிரத்தியேக பராமரிப்பும் தேவையில்லை. எந்தவிதமான பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை.

    மாறாக மகசூலை அதிகரிக்க மட்டும் அவ்வப்போது எள்ளு புண்ணாக்கு , இதர புண்ணாக்குகள் மற்றும் மாட்டு சாணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். ஜாதிக்காயால் செலவில்லை, வருவாய் அதிகம் மற்றும் நிலமும் சுத்தமாக இருக்கிறது" என்றார்.

    ஜாதிக்காயை சாகுப்படி செய்து அவர் அதை எப்படி சந்தைப்படுத்துகிறார் எனக் கேட்ட போது,"பொதுவாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்து விடுவார்கள். ஆனால் அதை விற்பனை செய்யும் போது ஒரு கட்டத்தில் வெறுத்து போய் கமிஷன் அடிப்படையில் உற்பத்தியை கொடுத்து விடுவார்கள்.

    கமிஷன் அடிப்படையில் கொடுக்கிறபோது, அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்கும் சூழல் வரும். பொதுவாக தக்காளி, உருளை மற்றும் மாங்காய் போன்ற காய்கறிகளுக்கு இந்த சூழல் அடிக்கடி வரும்.

    ஆனால் ஜாதிக்காயை பொருத்தவரை அதன் தோல், கொட்டை மற்றும் பத்திரி இவற்றை பிரித்து காயவைத்து பராமரித்தால் விலை வரும் போது விற்றுக் கொள்ளலாம். இன்றே விற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. காரணம் அது கெடும் பொருள் அல்ல, எனவே லாபம் வரும் போது விற்கலாம்" என்றார்.

    அதுமட்டுமின்றி இதன் நன்மைகள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், "திண்டுக்கல் மழை தடுக்கப்பட்ட மாவட்டம். சில சமயங்களில் 41 டிகிரி வெயில் கூட இருக்கும். ஆனாலும் என் மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சமவெளியிலும் மிக அழகாக காய்க்கின்றன. மேலும், இப்படி பல அடுக்கு முறையில் சாகுபடி செய்வதால் மற்ற நிலங்களை காட்டிலும் நம் நிலம் கூடுதல் குளுமையாக ஈரப்பதத்துடன் இருக்கிறது. எனவே அனைத்து விவசாயிகளும் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வது அவர்களின் வருவாயை அதிகரிக்கும். குறிப்பாக ஜாதிக்காய் பயிரிடுவதால் ஏராளமான லாபமும் நன்மையும் இருக்கிறது" எனக் கூறினார்.

    ஈஷா சார்பில் நடைபெறும் "சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் நடக்க உள்ளது.

    அதில் ரசூல் மொய்தீன் அவர்கள் ஜாதிக்காய் சாகுபடி குறித்த இன்னும் பல பயனுள்ள தகவல்களை நேரில் பகிர இருக்கிறார். இவரை போலவே இன்னும் பல வெற்றி விவசாயிகள் சமவெளியில் மரவாசனைப் பயிர்களை வளர்க்கும் உத்திகளை, முறைகளை விளக்கி சொல்ல உள்ளனர்.

    மேலும், வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.

    இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி போராடி வருகிறார்
    • புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் தீர்வு காணப்படாததால் ஏமாற்றமடைந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி ஷியாம்லால், போராடி வருகிறார். 2 ஆண்டுகளாக தனது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர், பொது விசாரணைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உருண்டு சென்றார்.

    விவசாயி உருண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சியான மக்களை அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    விவசாயியின் விண்ணப்பத்தைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.

    • இந்தியாவில் உயர்தர அவகேடோ செடிகளை கண்டுபிடிப்பதும் சவாலாக இருந்தது.
    • அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்தவர் ஹர்ஷித் கோதா. அவர் 2013-20-ல் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் வணிகப் படிப்பை படித்தார்.

    வணிக மாணவராக இருந்து விவசாயியாக மாறியது தொடர்பாக அவர் கூறுகையில், நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது, அவகேடோ பழங்கள் எளிதாகக் கிடைத்தன. ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றில் நான் நாட்டம் கொண்டதால், சத்துக்கள் நிறைந்த பழத்தை விரும்ப ஆரம்பித்தேன்.

    விரைவில், அவகேடோ பழத்தை தினமும் சாப்பிட ஆரம்பித்தேன். இருப்பினும், கோடை காலத்தில் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம், அவகேடோ பழங்களை என்னால் வாங்க முடியவில்லை. மேலும் இங்கு கிடைக்கும் அவகேடோ பழங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதனால் அவகேடோ விவசாயத்தை இங்கு தொடங்க எண்ணினேன்.

    பழங்களின் இருப்பு மற்றும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை பற்றி ஆர்வமாக இருந்த ஹர்ஷித், சில ஆராய்ச்சிகளின் மூலமாக இங்கிலாந்தில் கிடைக்கும் அவகேடோ பழங்கள் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.

    வறண்ட மற்றும் வெப்பமான நாடான இஸ்ரேல் அவகேடோ பழங்களை பயிரிட்டு ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வது அவரை சிந்திக்க செய்தது. இந்த உண்மையைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போபாலில் அவகேடோ பழத்தை பயிரிடுவதில் உறுதியாக இருந்தார்.

    அவகேடோ சாகுபடியை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், ஹர்ஷித் இஸ்ரேலில் உள்ள அவகேடோ விவசாயிகளை தொடர்பு கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் பலரிடம் பேசினார். சிலர் அவருக்கு கற்பிக்க மறுப்பு தெரிவித்தனர். மற்றவர்கள் நிறைய பணம் கேட்டார்கள். இருப்பினும், ஒரு நபர் அவரை வழிநடத்த ஒப்புக்கொண்டார்.

    மேலும் ஒரு இஸ்ரேலிய கிராமத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்தார். ஹர்ஷித் அங்கு சென்று ஒன்றரை மாதங்கள் இருந்தார். மதியம் வேலை செய்வது கூலித்தொழிலாளிகளால் வெயில் தாங்க முடியாது என்பதால் காலை 5 மணி முதல் 10 மணி வரை வயலில் வேலை செய்தோம் என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர் உழைத்து, அவகேடோ சாகுபடிக்கு இஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் பற்றி தெரிந்துகொண்டார்.

    பயிற்சியை முடித்த ஹர்ஷித் இந்தியா திரும்பினார். இருப்பினும், மண்ணின் நிலை, நீர் இருப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றை ஆய்வு செய்வதே மிகப்பெரிய தடையாக இருந்தது. இதற்காக இஸ்ரேலில் இருந்து தனது வழிகாட்டியை தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் போபாலில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளை மதிப்பீடு செய்து, அங்கு சில அவகேடோ வகைகளை வெற்றிகரமாக வளர்க்கலாம் என்று கூறினார்.

    இந்தியாவில் உயர்தர அவகேடோ செடிகளை கண்டுபிடிப்பதும் சவாலாக இருந்தது. இதை எதிர்த்து, 2019-ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற அவகேடோ வகைகளை இறக்குமதி செய்ய ஹர்ஷித் முடிவு செய்தார்.

    இறக்குமதி செயல்பாடு தாமதம், கொரோனா வைரஸ் போன்ற பல தடைகளுக்குப் பிறகு, இறுதியாக இஸ்ரேலில் இருந்து 2021-ல் அவகேடோ செடிகள் முதன்முதலில் அனுப்பப்பட்டது. அதை நான் 2023-ல் எனது தோட்டங்களில் நட்டேன். அதற்கு முன், இந்த செடிகள் நர்சரியில் வைக்கப்பட்டன. நடவு செய்த 14 மாதங்களில் செடிகள் காய்க்க ஆரம்பித்தன.

    யுனிரேம் (UniRam) என்பது ஒரு நுட்பமாகும், இது ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உரத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்தியாவில் தினசரி உரமிட வேண்டிய ஒரே பயிர் அவகேடோ மட்டுமே என்றார்.

    தற்போது 10 ஏக்கர் நிலத்தில் அவகேடோ சாகுபடி செய்து ஹர்ஷித் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். ஹர்ஷித் கூறும்போது, அந்தச் செடியின் விலை அதன் வயதைப் பொறுத்து, ஒன்றரை வருட செடிகள் ரூ.2 ஆயிரத்து 500-க்கும், இரண்டு வருட செடிகள் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

    அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250-300 ஆகவும், சில்லறை விற்பனையில் ஒரு அவகேடோ பழம் ரூ.200-250 ஆகவும் உள்ளது.

    ஒரு அவகேடோ பழம் 250-300 கிராம் எடை கொண்டது. ஒவ்வொரு செடியும் 40-50 ஆண்டுகள் பழம் தரும். வருமானம் பல்வேறு வகையைச் சார்ந்தது, ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு ஏக்கருக்கு 6-12 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

    கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் அவகேடோ இறக்குமதி சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, சந்தையில் அவகேடோ பழங்களை விற்பனை செய்வது ஒரு பிரச்சனை அல்ல.

    எனவே, விவசாயிகள் தங்கள் விவசாயத்தை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். அதிக லாபம் தரக்கூடிய பயிர்களை பயிரிடுங்கள். புளூபெர்ரி (அவுரிநெல்லிகள்) மற்றும் அவகேடோ பழங்கள் வேகமாக வளர்ந்து வரும் சந்தையை கொண்ட பழங்கள், என்று கூறுகிறார்.

    • வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது.
    • 4 பக்கமும் மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயி.

    இயற்கை மீதும் இயற்கை சார்ந்த பொருட்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது நிலத்தில் இயற்கை சார்ந்த புதிய வீடு கட்ட திட்டமிட்டார்.

    அதன்படி சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரப்பலகைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க சிவசுப்பிரமணியன் திட்டமிட்டுள்ளார்.

    எனவே மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்திடம் சிவசுப்பிரமணியன் தனது ஆசையை கூறியுள்ளார். அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால் எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டினார்.

    இருப்பினும் சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோம சுந்தரத்தை ஊக்கப்படுத்தி உள்ளார்.

    இதனால் கடந்த 2021-ம் ஆண்டு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்கள், சிமெண்ட், மணல் கலவையை கொண்டு கட்டிய நிலையில், தொடர்ந்து அடித்தளத்திற்கு மேல் பகுதியில் 4 புறத்திலும் மற்றும் மேற்கூரை சேர்த்து முழுக்க முழுக்க மரப்பலகைகளை கொண்டு வீடு கட்டி உள்ளனர்.

    மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு சமையல் அறை ஆகிய அறைகளை இந்த வீடு கொண்டுள்ளது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரப் பலகைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தி உள்ளனர்.

    அதேபோல் கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலாம்பாக்ஸ் எனப்படும் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்படும். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும்.

    எனவே சோமசுந்தரம் வீட்டின் உறுதித்தன்மைக்காக 4 பக்கமும் மிக கனமான மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.

    மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு கபோர்டு அமைத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை சூழலோடு அமைந்துள்ள பரம்பு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் சிவசுப்பிரமணியன் அமைத்துள்ள வீடு பார்ப்போரை கவர்ந்து உள்ளது.

    இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், வெளிநாடு களில் இது போன்று மரக்கட்டை வீடுகள் அமைப் பது வழக்கம். தமிழ்நாட்டில் தென் தமிழக பகுதியில் இது போன்ற மரக்கட்டை வீட்டை எனக்கு தெரிந்தவரை யாரும் கட்டவில்லை.

    இங்கு நான் தான் முதலில் கட்டியுள்ளேன். செலவை பொறுத்தவரை 2-க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆகி உள்ளது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம். அனைவரும் இது போன்ற இயற்கை சார்ந்த மர வீடுகளுக்கு மாற வேண்டும் என்று கூறினார். 

    • வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
    • 'தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது'

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

    வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.

    இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் GT ஷாப்பிங் மாலுக்கு 7 நாட்களுக்கு மூடி  சீல்  வைக்க கர்நாடக அரசு நேற்று [ஜூலை 18] உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    • இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர்.
    • ஆட்சியர் அலுவலக அறையில் அழுதபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தனது நிலம் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கைகளை குவித்தபடி புரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் உள்ள சங்கர்லால் என்ற விவசாயி வைத்திருந்த  நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அந்த பாதி நிலத்தை அதன் அப்போதய சொந்தக்காரர்கள் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் உள்ளவருக்கு 2010 ஆம் ஆண்டில் விற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி தற்போது நிலத்தை வாங்கியவரின் மகன் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தன்னுடையதே என்றும் தனது குடும்பமே அதில் இத்தனை காலமாக விவசாயம் பார்த்து வந்ததாகவும், எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் பல முறை சங்கர்லால் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.

    ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி சங்கர்கர்லால், தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடம் இருந்து  பறித்துவிட்டனர், தாசில்தாரின் தவறினால்  விவசாயியான நான் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசாங்கத்தால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலக அறையில்  கைகளை குவித்தபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்.
    • பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டங்களால் பயன் அடைந்தார்.

    இதனால் பிரதமர் மோடி மீதான அதிக ஈடுபாட்டின் காரணமாக அவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினார். ரூ.1.25 லட்சம் செலவு செய்து 6 மாதமாக கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

    இவர் கட்டியுள்ள கோவிலில் பிரதமர் மோடிக்கு அழகிய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் சாமி படங்களுடன், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் சிறப்பு வழிபாடு செய்வது என்றும்,பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல் வைத்தார்.

    அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து மோடிக்கு தான் கட்டிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன். இப்போது தேங்காய், மாங்காய், மரவள்ளி போன் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, 5 ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். அவர் 3-வது முறை பிரதமாக வேண்டும், என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

    அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், பழனியில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன்.

    பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகும், நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030-ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்.
    • நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கால்நடைத் துறை சார்பில் மாடு வளர்ப்போருக்கு கறவை எந்திரம் வழங்கும் விழா காரைக்கால் மதகடி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கி பேசியதாவது:-

    வறட்சி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது விவசாய பூமியான காரைக்கால்தான். விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்

    காரைக்காலில் ஒரு மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறோம். காரைக்காலில் நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது. காரணம் இயற்கையாக கிடைக்க கூடிய புற்கள் கிடைப்பதில்லை.

    மாடு வளர்க்காதவர்களுக்கு திட்டங்களை கொடுக்காதீர்கள். தகுதியானவர்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துங்கள்.


    நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாத இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வளர்த்து தரமான பால் கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பேசிய விவசாயி ஒருவர் தாய்ப் பாலுக்கு இணையானது மாட்டுப்பால். ஆனால் இதை பலரும் உணரவில்லை. மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. மாட்டை பிடித்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் ஓரமா போயா...? என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.

    ஆனால் நாய் பிடித்து நடைபயிற்சி செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். நாய்க்கு கொடுக்கும் மரியாதை பால் தரும் மாட்டிற்கு இல்லை என கூறினார்.

    விவசாயி பேச்சை விழாவில் கூடியிருந்தோர் கைத்தட்டி வரவேற்றனர்.

    • திடீரென்று காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்தது.
    • முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு புளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். திடீரென்று காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்தது.

    இதனால் அவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

     


    'புளூடூத் ஹெட்போன்' மூலம் பாட்டு கேட்டபோது வெடித்து விவசாயியின் காதில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
    • வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், கால்நடை மருத்துவரை அணுகி, சினை ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக எருமை மாடு சினையானது. உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. எருமை ஈன்ற கன்றை பார்த்த முருகேசன் ஆச்சரியம் அடைந்துள்ளார். காரணம் அந்த கன்று வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த கன்றை மிகவும் கவனமாக அவர் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் வெள்ளை எருமை மாட்டை பார்ப்பதற்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள் விவசாயினுடைய வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் முருகேசன் வீட்டில் எப்போதும் பொருட்காட்சி நடப்பதை போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இது குறித்து கால்நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது:-

    சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம். எனவே எருமை வெள்ளையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மருத்துவரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது. உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 10 ஆயிரத்து ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    ×