என் மலர்
இந்தியா

விவசாயி மீது ஜீப் ஏற்றி கொன்ற பாஜக தலைவர்.. தடுக்க வந்த மகள்களின் ஆடைகளை கிழித்து அட்டூழியம்
- என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
- மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.
குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.
மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.
எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.






