என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு வெடிகுண்டு"

    • நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன.
    • நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை.

    அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

    அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக தயாரித்த போது பரிதாபம்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெடி விபத்து குறித்து ஆய்வு

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்தகிளைவ் பஜார் பகுதியில் 8-க்கும் மேற் பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் முருகன் (வயது 41) தொழிலாளி. காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டில் சட்ட விரோதமாக நாட்டு வெடி குண்டுகள் தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்துள்ளது.

    இதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பகவதி (21) படுகாயம் அடைந்தார். அவரை ஆற்காடு அரசு மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச் சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முருகனின் வீடும் சேதமானது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆற்காடு தீயணைப்புத் துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி விபத்து குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ஒரு காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம பொருளை ஐயப்பன் மற்றும் கலை மீது வீசினர்.
    • போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துரிதப்படுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஐயப்பன்(வயது 35). இவரும், இவரது நண்பரான டவுன் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்த கலை என்ற வாலிபரும் நேற்றிரவு குற்றாலம் செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிளில் தனித்தனியே சென்றுள்ளனர்.

    அங்குள்ள தொண்டர் சன்னதி அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது அங்கு ஒரு காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம பொருளை ஐயப்பன் மற்றும் கலை மீது வீசினர்.

    பயங்கர சத்தத்துடன் அந்த பொருள் வெடித்ததால் அந்த பகுதியில் நின்றவர்கள் பயந்து ஓடினர். இதற்கிடையே காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய அந்த கும்பல் ஐயப்பன் உள்பட 2 பேரையும் வெட்டிக்கொல்ல முயற்சி செய்தது.

    உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓடினர். ஆனாலும் 4 பேர் கும்பல் அவர்களை விடாமல் துரத்தியது. அவர்கள் உயிர் பிழைப்பதற்காக தப்பித்து ஓடி டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றது.

    தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையிலான போலீசார் தொண்டர் சன்னதி பகுதிக்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் விரைந்து சென்று பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருளின் உதிரி பாகங்களை சேகரித்து சோதனை செய்தனர்.

    அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர்கள் விஜயகுமார், ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, இந்திரா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துரிதப்படுத்தினார். இதற்கிடையே வெடித்து சிதறிய மர்மபொருள் கல்வெடி மருந்து, சீனி கற்கள் மற்றும் பால்ரஸ் குண்டுகளால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஐயப்பன், கலை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூலித்துரை மற்றும் அவரது உறவினர்களான இசக்கி மணி, அஜித்குமார், ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    உடனடியாக தனிப்படை அமைத்து பூலித்துரை உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடும் பணி துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு வைத்து நடத்திய விசாரணையில் பா.ஜனதா பிரமுகரான பூலித்துரைக்கும், ஐயப்பனுக்கும் பெண் விவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பூலித்துரை நேற்று இரவு பரோட்டா கடைக்கு சாப்பிட சென்ற ஐயப்பன் மற்றும் அவரது நண்பர் கலை ஆகியோரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    • நாட்டுவெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
    • நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி கார்த்திக்கின் 2 ககைளும் துண்டானது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக்(38). இவர் மீது தாம்பரம், பள்ளிக்கரணை, செங்கல்பட்டு, பல்லாவரம், உள்பட சென்னையின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது கூட்டாளியான அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள விஜயகுமாரின் வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது நாட்டுவெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில் கார்த்திக்கின் இரண்டு கைகள் மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த விஜயகுமாருக்கு காயம் ஏற்பட்டது.

    நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி கார்த்திக்கின் 2 ககைளும் துண்டானது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சோதனைசெய்தபோது அங்கு நாட்டு வெடிகுண்ட தயாரிக்க பயன்படுத்த வைத்திருந்த ரசாயனங்கள், துணி, நூல், வெடிமருந்துகளை கைப்பற்றப்பட்டது.

    கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரவுடி ஒருவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயத்தில் கார்த்திக் கூட்டாளியுடன் சேர்ந்து நாட்டு வெடி குண்டை தயார் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது.
    • பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென பலத்த சத்தத்துடன் நாட்டு வெடி குண்டு ஒன்று வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் மேலும் வெடிகுண்டு உள்ளதா? என்று சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்த இடம் அருகே நரிக்குறவர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். அவர்கள் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு தவறுதலாக வெடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது.
    • சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 40). இவர்மீது பல கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான இவர் நேற்று இரவு அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவாரூரில் இருந்து முகில் என்ற மோப்ப நாயும் நாகப்பட்டினத்தில் இருந்து அகிலா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
    • நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது21). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அவர், வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை தெருவில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு விழவில்லை. அவரது அருகே சிறிது தூரத்தில் விழுந்து நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். எனினும் மர்ம கும்பல் அவரை பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.

    இதற்கிடையே நாட்டுவெடிகுண்டு வெடித்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீனதயாளனை மர்ம கும்பல் அரிவாளுடன் விரட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சிறிது நேரத்தில் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பிய தீனதயாளன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அவர்தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக் கொண்டு "அனைவரும் இங்கிருந்து கிளம்பி சென்று விடுங்கள் ஆபத்து உள்ளது" என்று அவரது தாயிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவில் தீனதயாளன் கலந்து கொண்டார். அப்போது அவர் மதுபோதையில் அங்கிருந்த ஒருவரையும் அவரது கூட்டாளிகளையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் அந்த கும்பல் தீனதயாளனை தீர்த்துக்கட்ட நாட்டு வெடி குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இரவு இடிந்தகரை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் சிலர் சென்றபோது அங்கு மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் நடத்திய ஆய்வில் அது நாட்டு வெடிகுண்டு என்பதும், வெடிக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேற செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை இடிந்தகரைக்கு விரைந்து சென்று வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக கைப்பற்றினர்.

    தொடர்ந்து அதனை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் நாட்டு வெடிகுண்டை வீசி பயிற்சி எடுத்திருக்கலாம், அப்போது அது வெடிக்காமல் இருந்திருக்கும்.

    இதனால் அதை மீண்டும் எடுத்துச்செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு இன்று காலை அந்த காட்டுப்பகுதி முழுவதும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர்.
    • சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாநகரருக்கு உட்பட்ட கரிமேடு விஸ்வசாபுரி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அஜித். தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் இவர் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று இரவில் அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் பதறியடித்து எழுந்தனர்.

    பின்னர் தங்களது வீட் டிற்கு வெளியே வந்து அச்சத்துடன் பார்த்தனர். முதலில் அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் வெடிச்சத்தம் கேட்ட அஜித்தின் வீட்டிற்குள் இருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்துள்ளது. மேலும் உடனடியாக இதுபற்றி அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதியில் விசாரித்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர். பின்னர் பூட்டை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு மர்ம பொருள் வெடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தது. சமையல் அறையில் இருந்த பொருட்களும் சேதமடைந்து கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

    வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் வெடிக்கும் மர்ம பொருளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்று விட்டனர். இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடித்து சிதறி கிடந்த பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாகாலத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு பட்டாசு என்பது தெரிந்தது.

    கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கானாபாட்டு பாடல் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக நேற்று காலை கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பூண்டு பட்டாசை கொளுத்தி போட்டு இருப்பது தெரிந்தது.

    இந்த மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 18 மாணவர்களை நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் ஆகும். இதற்கிடையே மோதலில் ஈடுபட்டதாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் யார்?யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    ×