search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தலைநகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. இதில் சிலர் ஓட்டுனர் உரிமம் தகுதிச் சான்று அனுமதிச்சான்று பெறாமல் இயக்குவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசார் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்து போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
    • செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    படப்பை:

    குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் பூந்தண்டலம் மணிமங்கலம் ஒரத்தூர் நாட்டரசன்பட்டு வடக்குப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் பள்ளி வகுப்பறை, கட்டிடம் நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    • துர்நாற்றம் வீசும் தண்ணீரால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    • கழிவு தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் சி.எம்.எஸ் நகரில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மழைநீர் தேங்கி நின்றது.

    இதனால் இந்த நீர் வரத்து கால்வாயை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகலப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தினர்.

    இந்த நிலையில் தற்போது இந்த கால்வாயில் கழிவு நீர் கலந்து உள்ளதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. தண்ணீரின் மேல் பகுதி முழுவதும் பாசிப்படர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசு மற்றும் புழு பூச்சிகள் அதிக அளவில் உற்பத்தி ஆகி வருகின்றன.

    தண்ணீர் வெளியேற வழியில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதனை ஒட்டி உள்ள தாலுகா காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, தனியார் கடைகள், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் வழியாக வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அருகில் குடியிருக்கும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    துர்நாற்றம் வீசும் தண்ணீரால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பாக்கம் கிராமம். இங்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள், கோவில்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் சுமார் ஐந்து தலைமுறையாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டு வீட்டு வரியும் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் முதல் கட்டமாக 40 வீடுகளை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணக்குமாரி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், மின்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, தற்போது வசித்து வரும் நிலத்தினை குடியிருப்பவர்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும் அல்லது தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    • பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
    • பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    ஆவடி:

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதன் பயன்பாடு குறித்து பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களிடையே செயல்முறை விளக்கம் அளித்தார்.

    அப்போது ஏராளமான பெண்கள், மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    இதேபோல் கூடுதல் போலீஸ் கமிஷனர் பவர்னீஸ்வரி, போக்கு வரத்து துணை போலீஸ் கமிஷனர் அன்பு ஆகியோர் ஆவடி, திருவேற்காடு பஸ்நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்து பெண்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்குன்றம் பஸ்நிலையத்தில் துணை கமிஷனர்கள். மகேஷ்வரன், பால கிருஷ்ணன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஏழை முதியோர்களுக்கு அறுசுவையுடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது.
    • யோகா மற்றும் ஒன்றிய கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆவடி:

    ஆவடி அருகே நடுக்குத்தகையில் தி.மு.க. தலைமை செயற்குழ உறுப்பினர் கே.ஜே.ரமேஷ் ஏற்பாட்டில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு முதியோர்கள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 600 ஏழை முதியோர்களுக்கு அறுசுவையுடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது.

    இதற்கான நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு அறுசுவை காலை உணவை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை.ரவி, மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார், ஆவடி மாநகர பொருப்பாளர் சன் பிரகாஷ் மற்றும் மகா தேவன், யமுனா, ரமேஷ், லட்சுமி, செந்தாமரை, கந்தன், மோகன், கேட்டரிங் சுரேஷ், பிரவீன் குமார், சந்திரன், யோகா மற்றும் ஒன்றிய கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆவடியில் இருந்து திருநின்றவூர் நோக்கி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சீறிப்பாய்ந்தனர். அவர்கள் ரேசில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் முந்தி சென்றனர். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் திருநின்றவூர் முருகன் கோவில்தெருவை சேர்ந்த கதிரேசன் (24) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.

    கதிரேசனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
    • தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகராஜகண்டிகை கிராமம். இங்கு, மாதர்பாக்கம் செல்லும் சாலையையொட்டி உள்ள முக்கிய நீர் நிலையாக ஓடை கால்வாய் உள்ளது. இந்த நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கால்வாயில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் செத்து மிதக்கின்றன. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் இவ்வளவு வாத்துக்கள் எப்படி இறந்தன என்பது மர்மமாக உள்ளது. அவை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    வாகனங்களில் கிராமம் தோறும் சென்று வாத்து வியாபாரம் செய்திடும் வியாபாரிகள் யாரோ சிலர், தங்களின் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து போன வாத்துக்களை மொத்தமாக கொண்டு வந்து இந்த ஓடைகால்வாயில் வீசினார்களா? அல்லது நீரோடையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்ததால் மேய்ச்சலுக்கு வந்த வாத்துக்கள் இறந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    ஓடை கால்வாயில் செத்து மிதக்கும் அழுகிய வாத்துகளை அப்புறப்படுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியும், சுகாதார துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.

    மேலும் பூஜை அறையில் இருந்த பித்தளை பூஜை பொருட்களையும் சுருட்டி சென்று விட்டனர்.

    பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம கும்பல் அள்ளி சென்று இருந்தனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
    • மேயர் பிரியா, நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பத்தூர் வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், கமல், ராஜகோபால், நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
    • நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பஞ்செட்டி சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.49.28 கோடி செலவில் 4 மாடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்டப்படுகிறது.

    சுமார் 6.35 ஏக்கர் பரப்பளவில் 6 நீதிமன்ற வளாகங்கள் இதில் வருகின்றன. இதற்கான கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏ.டி.எம். மையம், தபால் நிலையம், கேண்டீன் ஓய்வறை, கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.

    கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை, சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ், தர்மதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×