என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavyrain"

    • இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

    இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மக்கள் தொடர்பு கொள்ள, அவசர உதவிக்கு 7299004456, மருத்துவ தேவை 9384814050, கால்நடை பாதிப்பு 1962 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும்.
    • மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல்

    கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    டித்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டித்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025-லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழி பதிவாகியுள்ளது.

    பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.11.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    மேலும், 28.11.2025 அன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    மேலும், அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து.

    33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர்

    வேளாண்பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

    கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் மையம்.
    • வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    டிட்வா புயல் நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வடக்கு- வடமேற்கில் நகர்ந்து 30ம் தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடக்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல், வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கிழக்கே 110 கி.மீ, புதுவைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும் புயல் நகர்ந்து வருகிறது.

    • வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
    • வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

    தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நலையில், தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • மெக்சிகோவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் இறந்தனர்.
    • தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.

    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது.

    மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடக்கிறது.

    • மக்கள் வசிக்கும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
    • நிலச்சரிவில் வீடுகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதமடைந்தன.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின. நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதம் அடைந்தன.

    பல்வேறு மாநிலங்களில் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், மெக்சிகோவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
    • பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    கனமழை , நிலச்சரிவால் டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக்- குர்சியோங்கின் மாவட்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் துடியா இரும்புப் பாலமும் இடிந்து விழுந்தது.

    நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

    பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் அண்டை மாவட்டமான ஜல்பைகுரியன் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேற்கு வங்காளம்- சிக்கிமை இணைக்கும் சாலை மற்றும் சிலிகுரியை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.

    துர்கா பூஜைக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சென்றுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் அவர்கள் பரிதவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேலாக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    டார்ஜிலிங் எம்.பி. ராஜூ பிஸ்தா தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. உயிரிழப்புகள், சொத்து இழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.

    • புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
    • அப்போது மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    டப்ளின்:

    அயர்லாந்தில் உருவான ஆமி புயலால் கடந்த சில நாளாக பெய்த கனமழையால் டோனகல், லீட்ரிம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.

    இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

    ஆமி புயல் காரணமாக டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 115 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல், ரெயில் சேவையும் கடுமையாக பாதிப்பு அடைந்தது.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 22-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
    • சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    குறிப்பாக, வடபழனி, வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்யில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது.
    • 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    மேலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தருமபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வெயிலுக்காக சாலையில் போக்குவரத்து காவல்துறையால் அமைக்கப்பட்ட பந்தல் மலைக்காற்றில் சரிந்தது. இதனால், ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ×