என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில் தாக்கம்"

    • தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
    • சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    குறிப்பாக, வடபழனி, வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

    வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • டி.ஐ.ஜி. உத்தரவு
    • வெயில் தாக்கம் அதிகரிப்பால் நடவடிக்கை

    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை விசாரணைக்காக அலைக்கழிக்க வேண்டாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ''நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் தாக்கம் உள்ளது. எனவே, கோடை காலங்களில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    போலீஸ் நிலையத்துக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கனிவுடன் வரவேற்று அவர்களை நிழலில் இளைப்பாறச் செய்து அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

    வெகு தொலைவில் இருந்து விசாரணைக்காக வருபவர்களை திரும்பத்திரும்ப வரச்சொல்லி கட்டாயப்படுத்தாமல் விரைவான நீதி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதியவர்களுக்கு கோடை காலங்களில் தலைசுற்றல், திடீர் மயக்கம் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கும். எனவே, மனித நேயத்தோடு மனுதாரர்களையும் எதிர் மனுதாரர்களையும் விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காக்கை, குருவி போன்ற பறவைகள் நீரின்றி அலையும் அவலத்தை தவிர்க்க சிறு, சிறு மண் குவளைகளில் நீர் ஊற்றி போலீஸ் நிலையங்களை சுற்றியுள்ள இடங்களில் திறந்த வெளிகளில் வைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • பலர் நோய் தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள்.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பலர் நோய் தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சிகாகோ, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    • பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
    • தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.

    பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.

    தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் இருக்கும்.
    • கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், வரும் 8-ந் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102.2 டிகிரி வரையும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வரையும் இருக்கும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிக மாக வெயில் இருக்கும்.

    தமிழகத்தில் நேற்று பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): ஈரோடு-106.52 , சேலம்-105.08, பரமத்திவேலூா்-104.9, திருப்பத்தூா்-104.36, தருமபுரி-104 , திருச்சி-103.82, நாமக்கல்-103.1 , வேலூா்-103.1, மதுரை நகரம்-102.56, திருத்தணி-102.56, கோவை-101.84, மதுரை விமான நிலையம்-101.84 , தஞ்சாவூா்-101.3, சென்னை மீனம்பாக்கம்-100.58, பாளையங்கோட்டை-100.4.

    இதற்கிடையே வருகிற 8, 10 ஆகிய தேதிகள் வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 35.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பகல் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    டானா சூறாவளி காரணமாக காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புயல் காற்றின் திசையை வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றியது, புயலைச் சுற்றி காற்று குவிந்ததால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பகல் வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை காணப்படுகிறது.

    அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, சென்னையில் சில இடங்களில் லேசான காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, கன்னியா குமரியில் பெய்த மழையின் தீவிரம் குறையும் என்றனர்.

    ×