என் மலர்
நீங்கள் தேடியது "summer heat"
- மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன.
- மண் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது.
கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா?
அப்படி குடிக்கிறபோது எந்தவித செயற்கை செயல்பாடும் இன்றி இயற்கையாக மண் பானையில் உள்ள நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறதா? வாருங்கள் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.
மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் இயற்கையான வடிவமைப்பு ஆகும். மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன. அதனால் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயல்முறையினால் பானையின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிறது. இது 'ஆவியாக்கக் குளிர்ச்சி' என அழைக்கப்படுகிறது.
மண்பானை ஒரு இயற்கை குளிரூட்டி. இது மின் சக்தி இல்லாமலே குளிர்ந்த தண்ணீரை வழங்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியமானது.
பிளாஸ்டிக் அல்லது உலோக பானைகளுடன் ஒப்பிடுகையில், மண் பானையில் தண்ணீர் எப்போதும் புதியதாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மண் பானையில் தண்ணீர் குடிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
- அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
- கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.
இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர்.
- திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
கன்னியாகுமரி:
கோடை விடுமுறையையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகுதுறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி, கொட்டாரம் ராமர், சுசீந்திரம் தாணுமாலயசாமி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா, ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.
மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர்காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட மனோஜெயனை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜெயன் பரிதாபமாக இறந்தார்.
திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் அச்சுதன் கலைமணி (47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சந்தோஷ் (46), காய்கறி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
- தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.
இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.
- 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக கத்திரி வெயிலின்போது வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இயற்கை மருத்துவர்கள் கூறும்போது, 'அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குறிப்பாக, பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கோடைகாலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்' என்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறும்போது, 'தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 6-ந்தேதி இதேபோன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 7, 8-ந்தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது' என்றார்.
- கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
- நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடிக்கிறது. குறிப்பாக நேற்று 102.2 டிகிரி வெயில் பதிவானது.
இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
காலையில் இருந்தே அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு, செயற்கை குளிர்பானங்களை நாடுகின்றனர்.
மேலும் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கின்றன. இதனால் உடல் முழுவதும் வியர்வை வியர்த்து கொட்டுகிறது. தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர்
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.
ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.
- கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது.
சென்னை:
தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.
கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆங்காங்கே வெப்ப சலனத்தால் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. அதுவும் வருகிற 30-ந்தேதிக்கு பிறகு ''குட்-பை'' சொல்ல இருக்கிறது.
இப்படி இருக்கும் சூழலில் வெயிலின் உக்கிரத்தை கக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்தே பல இடங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் மின் விசிறி நிறுத்தப்பட்டாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு அசவுகரியத்தை உணருகிறோம். அப்படி பார்க்கையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது அவர்கள், 'லா-நினோ மற்றும் ஐ.ஓ.டி. என்று கூறப்படும் கடல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதால், கடல் சார்ந்த அலைவுகள் முற்றிலுமாக வலுவிழந்து, மழைக்கான சாதகமான சூழல் எதுவும் ஏற்படாத நிலை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் வெப்பம் சற்று உயர்ந்தே காணப்படும். இருப்பினும் வெப்ப அலை வீசும் அளவுக்கு இருக்காது என்பது ஆறுதல் வார்த்தையாக இருந்தாலும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதத்தால் உணரும் வெப்பநிலையின் தாக்கம் இருக்கும். இதனால் அசவுகரியத்தை நாம் உணருவோம்' என்றனர்.
கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது. ஆனாலும் கடல் சார்ந்த அலைவுகள் தொடர்ந்து அதே நிலை நீடித்தால், நிலைமை எப்படி இருக்கும்? என்பது அப்போதுதான் தெரியும்.
- நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
- வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. சுமார் 300 குளங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது.
தற்போது கோடை மழை பரவலாக பெய்தாலும் அந்த மழைநீரால் வெப்பத்தை தான் தணிக்க முடிகிறதே தவிர நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்த முடியவில்லை. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளில் மட்டும் தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருக்கிறது. நேற்று சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அதே நேரத்தில் மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர் இருப்பு கோடை வெயிலின் தாக்கத்தால் வேகமாக குறைந்து ஒற்றை இலக்கத்தை நெருங்கி வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 10.25 அடி நீர் இருப்பு உள்ளது. இதில் சுமார் 8 அடி வரை சகதி தான் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் 23 அடி கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், 52.50 அடி கொண்ட கொடுமுடியாறு அணை 14.75 அடியாகவும் உள்ளது. இதனால் களக்காடு, ராதாபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை மழை ஓரளவு பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடாவது ஏற்படாத நிலை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று சேரன்மகாதேவி, அம்பை, முக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் மாலையில் சுமார் 1/2 மணி நேரம் கனமழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவியில் தலா 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் 1/2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி, விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்திலும் இடியுடன் கூடிய கன மழை பரவலாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர்.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக வெப்ப நிலை 97 டிகிரி முதல் 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நேற்று ஈரோடு, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 102 டிகிரி, சேலம், வேலூரில் 101 டிகிரி, திருத்தணி, தர்மபுரியில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மொத்தம் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
- இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இருப்பினும் மழை நின்ற பின்னர் கொளுத்தும் வெயில் மழை பெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத அளவுக்கு செய்து விடுகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த கோடை மழை பெய்தது. காலை 8.45 மணியளவில் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டு தொடர்ச்சியாக மதியம் வரையில் பெய்து கொண்டே இருந்தது. இப்படி கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்தபோதிலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே கடுமையான வெயில் அடிக்க தொடங்கி விட்டது. இதுபோன்ற நிலைதான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. திருத்தணி, மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரியும், பரமத்தி வேலூர் மற்றும் மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி வெயிலும் திருச்சியில் 101 டிகிரியும் பதிவாகி இருக்கிறது. ஈரோடு, பாளையங்கோட்டையிலும் 100 டிகிரியும் தாண்டி வெயில் அடித்து உள்ளது. இதே போன்று இன்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இரவில் புளுக்கம், பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு அதிக வெப்பம் காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்சாதன வசதி கொண்ட அறைகளை தவிர்த்து மற்ற அறைகளில் இருக்கும்போது கடுமையான புழுக்கத்துடன் உடலில் வியர்வை வழிந்தோடும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள்.






