என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆப்பக்கூடல், அத்தாணி சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த மரங்கள்
- அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
- தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.
இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.






