என் மலர்
நீங்கள் தேடியது "கோடை மழை"
- அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பைவிட 276 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
- சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 129 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரியில் மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி மே மாதம் 31-ந் தேதி வரையில் பெய்யக்கூடிய மழையை கோடை மழையாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கோடை மழை ஆரம்பத்தில் இருந்தே பல இடங்களில் பெய்ய தொடங்கியது. நேற்றுடன் கோடை மழை கணக்கு நிறைவு பெற்றது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த காலகட்டங்களில் 12.4 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு இயல்பைவிட 97 சதவீதம் அதிகமாக அதாவது 24.5 செ.மீ. மழை பொழிந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பைவிட 276 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக நெல்லை 260 சதவீதம் அதிகமாகவும், கடலூர் 226 சதவீதம் அதிகமாகவும் மழை பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 129 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு வெப்ப அலைகளின் தாக்கமும், அதீத வெப்பத்தின் தாக்கமும் இல்லாத கோடை காலமாகவும், இயல்புக்கு அதிகமாக பதிவான கோடை மழையும் இந்த ஆண்டு இருந்து இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வரும் சூழலில், இனிவரும் நாட்களில் அதாவது வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) வரை பருவமழையின் தீவிரம் சற்று குறைந்தே காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து 12-ந் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் பருவமழை 15-ந் தேதியில் இருந்து தீவிரம் அடைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பருவமழை தொய்வடைவது, வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக இம்மாதம் முதல் வாரத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப்படும்.
அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழையும் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, திருப்பூர், கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
- வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது.
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த மழைக்கு நேற்று இரவு வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேபோல் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் சாலை, கருமலை எஸ்டேட் பகுதியில் குரூப் ஆபிஸ் அருகேயும் மரம் விழுந்தது.

வால்பாறை தலைநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது. அதேபோன்று பெரியகல்லாறு, சின்னகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று காலை வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 6-வது கொண்ைட ஊசி வளைவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
தொடர் கனமழையுடன் வீசிய சூறாவளி காற்றுக்கு சோலையார் அணை பகுதி சத்யா நகரில் உள்ள சுதர்சனன் என்பவரின் வீட்டின் மேல் கூரை காற்றில் பறந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்தவர்கள் மீட்கப்பட்டு சோலையார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கோவை மாநகரில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை வெளுத்து வாங்கியது. இரவிலும் இந்த மழை நீடித்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 11 செ. மீ மழை பதிவாகி உள்ளது.
மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-116, சின்கோனா-70, சிறுவாணி அடிவாரம்-86, வால்பாறை பி.ஏ.பி-58, வால்பாறை தாலுகா-55, சோலையார்-61.
- களக்காடு தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவில் கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் களக்காடு தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வன சரகர் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தலையணையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளப்பெருக்கு குறையாததால் இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.
- மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
- நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
குன்னூர்:
சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை தந்தாலும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக நீலகிரியில் குவியும் சுற்றுலாபயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கடந்த 11 நாட்களாக நடந்து வந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு நடத்தப்பட்டு மலர்கண்காட்சி நிறைவடைந்தது.
பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இன்று மாலை வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் இன்று கடைசி நாள் நடைபெற இருந்த பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை நடைபெற இருந்த பரிசளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மற்றொரு நாளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
- மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாட மலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அப்பொழுது மக்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாயாற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டம் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருகரையும் தொட்டபடி நீர் பாய்ந்து செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை ஆபத்தை உணராமல் தெங்குமரகஹாட கிராம மக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
திடீர் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டு சில சமயம் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
கோரிக்கை விடுத்தும் வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது.
- மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
தென்காசி:
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையத்தால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதன் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 6 மணி முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரவு முதல் இன்று காலை வரை வனப்பகுதிக்குள் மழை தொடர்வதால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து செம்மண் நிறத்தில் விழ தொடங்கியுள்ளது.
ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், பழைய குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் வானம் கருமேகக் கூட்டங்கள் நிறைந்து, சாரல் மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தடையால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் தூரத்தில் நின்று அருவிகளை பார்த்து குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
- வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
- வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. அன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காய்ந்து போன மரங்கள் துளிர்விட தொடங்கின. பூமியில் வெப்பம் தணிந்தது.
குறிப்பாக கடந்த 4 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பி, உபரிநீராக ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிக பட்சமாக 102.7 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது.
இதனால் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தருமபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது.
இது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது என்றனர்.
- சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும்.
இதன் காரணமாக, இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் அவதி அடைந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
- தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 395 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை தொடங்கியது.
தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அதிகாலை 3 மணி வரை சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோன்று புறநகர் பகுதிகளான லால்குடி சமயபுரம் மணப்பாறை மருங்காபுரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக இரவு வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1060.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக மழை அளவு விபரம் வருமாறு;-
கல்லக்குடி 107.4, லால்குடி 30.4, நந்தியாறு அணைக்கட்டு 67.4, புள்ளம்பாடி 116, தேவி மங்கலம் 20.2 சமயபுரம் 36.4, சிறுகுடி 40, வாத்தலை அணைக்கட்டு 11.8, மணப்பாறை 24.4, பொன்னணியாறு அணை 4, கோவில்பட்டி 52.4, மருங்காபுரி 43.4 முசிறி 15, புலிவலம் 8, தாப்பேட்டை 20, நவலூர் கொட்டப்பட்டு 31, துவாக்குடி 14, கொப்பம்பட்டி 27, தென்பர நாடு 40, துறையூர் 52, பொன்மலை 77.2, திருச்சி ஏர்போர்ட் 96.6, திருச்சி ஜங்ஷன் 66, திருச்சி டவுன் 60.
- கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மதுரையில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 14-ந்தேதி அகோர முகத்துடன் தொடங்கியது. வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கோடையின் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தகித்தது. வழக்கமாக வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மதுரையில் பதிவானது.
குறிப்பாக மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 106 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் சாலைகளில் தோன்று கானல் நீரானது மக்களை அச்சப்பட வைத்தது. முதியோர்கள், குழந்தைகளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கூறுமளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தை கடந்து செல்ல வசதி படைத்த பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்தனர். நடுத்தர வர்க்கத்தினர் அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று ஆறுதல் படுத்திக்கொண்டனர். இளநீர், தர்பூசணி, பதநீர் உள்ளிட்டவைகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
இந்தநிலையில் எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலை விரட்டியடித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதலே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதல் மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், தத்தனேரி, அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த கனமழையால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே மாநகரின் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் அங்கு மழை நீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் சாலைகளை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. புதிதாக அந்த சாலைகளை கடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கி காயங்களுடன் எழுந்து செல்கிறார்கள்.
மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் வைகையாற்றின் கரையோர பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. சாலையில் நடுவில் செல்வதை தவிர்த்த வாகன ஓட்டிகள் சாலையோரமாக தடுமாற்றத்துடன் சென்றனர்.
- சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
- வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று காலை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை அப்படியே மாறியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், ரெயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகர், ஆர்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோவில் வீதி, எல்லைத் தோட்டம் 4-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் ஆர்.எஸ்.புரம் 73-வது வார்டு பி.எம்.சாமி காலனி 2-வது வீதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
இதேபோல் குட்ஷெட் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஐதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 2 விமானங்கள் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானிலேயே வட்டமடித்தது. மழை ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறங்கின. இதேபோல் கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-74, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-47, சின்னக்கல்லார்-42, கோவை தெற்கு தாலுகா-36, வால்பாறை பி.ஏ.பி.-31, வால்பாறை தாலுகா-29, சோலையார் மற்றும் தொண்டாமுத்தூர் பி டபிள்யூ அலுவலகம்-16 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.






