என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flower show"
- 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளன.
கர்நாடக அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர்ப்பூங்கா, ஊட்டி அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு சுமார் 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி பூங்காக்களில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதேபோல கர்நாடக அரசு பூங்காவிலும் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்துவதென திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆர்கிட், சைக்ளோமன், ரெனன்குலஸ், டியூபெரஸ், பிகோனியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு உள்ளிட்ட 200 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக வார நாட்களில் 6 ஆயிரம் மற்றும் வார இறுதி நாட்களில் சுமார் 12 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரை இந்த பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் கர்நாடக அரசு பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள தொங்குபாலம், மையப் பகுதியில் இருக்கும் மலர் நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளிடம் தலா ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் ஊட்டியின் பல இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு 'பார்க்கிங்' கட்டணம் கிடையாது.
இதற்கிடையே ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காக கர்நாடக அரசு பூங்காவில் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டுமென கர்நாடகா, தமிழக முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
- அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடை பெறுகிறது.
தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமவுஸ், டாம் அண்டு ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும், ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும் காப்பி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பிரங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியும், சமூக நலத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பிலா சமையல் போட்டியும், விளையாட்டுத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் 26-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர்நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடுஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புறபாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
- ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்
- மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
ஊட்டி:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.
இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மே 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.
சென்னை:
தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.
12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல வண்ணங்களில், பல வகைகளில் மலர்கள் குறிப்பாக ரோஜா, துலிப், சாமந்தி என பல வகை பூக்கள் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த மலர் கண்காட்சியானது சென்னையில் புதிய முயற்சியாக, பூக்கும் பருவத்தில் இருந்த செடிகளை கொண்டு வந்து, அவை பூத்தபின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.
அதோடு பூக்களை கொண்டு பல அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. யானை, அன்னப்பறவை, பொம்மை, ஆமை என்று உருவ அலங்காரங்களும். அதேபோல் சதுர தூண், இதய வடிவ தூண், மலர் பாதை என பல வகைகளில் அலங்காரத்துடன் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதலே மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விதவிதமான மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களுடன் 'செல்பி'களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று ஆடிப்பாடி அசத்தினர்.
அனைவரையும் கவர்ந்த இந்த கண்காட்சி நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டுமே இக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
- மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.
சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்று உள்ளது. அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி இன்று (சனிக்கிழமை) செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு மலர் கண்காட்சிக்காக விதவிதமான பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 வகையான உருவங்களை வைத்து உள்ளனர்.
இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இந்த மலர் கண்காட்சியை நிரந்தரமாக வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது போன்று நிரந்தரமாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் நடத்தினால் பொதுமக்கள் செம்மொழி பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள்" என்றனர்.
- காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனை
மைசூரு தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை 5 லட்சம் பேர் வரை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த ஆண்டு 15-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை தசரா மலர் கண்காட்சி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று தசரா மலர் கண்காட்சி மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்படுத்தி உள்ளது. இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் 6 லட்சம் வெள்ளை, சிகப்பு ரோஜா பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை
துர்கா தேவி சிலை, விநாயகர் சிலை, இந்தியா மற்றும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், அரசு பஸ் ஜீப், அரசியலமைப்பு சாசன புத்தகம் பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண மலர்களால் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி வடிவமைப்புக்காக 30 தனியார் தொழிற்சாலைகள், 41 தனியார் விடுதிகள், 13 அரசு அலுவலகங்கள், 22 கல்வி மையங்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு ஒரு முறை பூக்கள் மாற்றப்படுகிறது. மழை பெய்தால் மாற்ற வேண்டிய தேவை இல்லை. வெயில் அடித்தால் மட்டுமே மாற்ற 5 நாட்களுக்கு ஒரு முறை பூக்களை மாற்ற வேண்டும். தசரா மலர் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மல்யுத்த போட்டி
இதேபோல், தசரா கண்காட்சி அருகே உள்ள மைதானத்தில் நேற்று மல்யுத்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்கவுட் அண்ட் கைட் மைதானத்தில் உணவு மேளா தொடங்கியது. இதனை மந்திரி கே.எச்.முனியப்பா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
புத்தக கண்காட்சி
மைசூரு பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மைசூரு தசரா கண்காட்சியை மந்திரி சிவராஜ் தங்கடகி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 90 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
தசரா மின்விளக்கு அலங்காரம், ஜம்பு சவாரி ஊர்வலம் செல்லும் ராஜபாதை சயாஜி ராவ்ரோடு பச்சை (கிரீன்) மண்டபத்தில் மந்திரி கே.ஜே. ஜார்ஜ் தொடங்கி வைத்தார். மின்விளக்கு அலங்காரத்ைத பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
மின்விளக்கு அலங்காரம்
மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனைக்கு மத்தியில் தசரா கலாசார நிகழ்ச்சியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அவர் சிறந்த சங்கீத வித்வான்களுக்கு கர்நாடக அரசின் சங்கீத வித்வான் விருது வழங்கி பாராட்டினார். பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நடைபெற்றது. தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருவதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.
*** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.
- கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.
- 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.
குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், பொழுதை போக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்கா வில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 10 மலர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் அலங்கார வளைவுகள் வழியாக சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், கிரைசாந்திமம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதேபோல் நடைபாதை ஒரங்கள், மலர் பாத்திகளிலும் 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலத்தில் தேசிய பறவையான மயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் இந்த மயில் உருவம் கவர்ந்திழுத்தது. சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
இதுதவிர தமிழ்நாட்டின் மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்களும் பல ஆயிரம் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல வண்ண மலர் கோபுரங்களும் உருவாக்கப்பட்டு இருந்தது.
தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா, 125வது மலர் கண்காட்சி என மலர்களால் உருவான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.
சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர். ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம், மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம் என பலவகையான அலங்காரங்கள் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனை வரும் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்களால் உருவான சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஊட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
- சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
- மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஏற்காடு:
சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. ஆகும்.
மலைகளின் இளவரசி
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வளைந்து நெளிந்த மலைப்பாதைகள், விண்ணை முட்டும் மரங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை கடந்து சென்றால், பரந்து விரிந்த ஏரியும், படகு சவாரியும் கவனம் ஈர்க்கிறது.
இது மட்டுமின்றி அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், தலைச்சோலை என்று ஒவ்வொரு இடமும் இயற்கை அழகால் இதயம் வருடுகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை என 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு ஊராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் தமிழரசி, தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ், ஏற்காடு ஊராட்சி ஒன்றி ஆணையாளர் அன்புராஜ், தாசில்தார் தாமோதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சுற்றுலா துறை, ேதாட்டக்கலை துறை, தீயணைப்புதுறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒரு வழிபாதையாக மாற்றம்
கூட்டத்தில், கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பது, சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்த இடம் ஒதுக்குவது, போக்குவரத்தை சீர்படுத்த கூடுதலான போலீசாரை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சுறறுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வது, மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை பாதையை ஒருவழி பாதையாக மாற்றுவது பற்றி யும், ஆலோசிக்கப்பட்டது.
ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளையும் செய்து தருவது பற்றி விவா திக்கப்பட்டது. கேடைவிழா நடைபெறும் 8 நாட்களுக்கும் சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வும் முடிவு செய்யப்பட்டது.
- ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
- தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.
இங்கு கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகை–யில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் கோடைவிழா மலர்க் கண்காட்சி, லட்சக்கணக்கோனார் பார்வையிட்டு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தற்போது, கோடை காலம் தொடங்குவதால், மலர்க்கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் தோட்டக் கலைத்துறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
7 லட்சம் விதைகள்
இதுகுறித்து ஏற்காடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
ஏற்காடு அண்ணா பூங்காவில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானது. இதற்காக, லட்சக்கணக்கில் மலர்ச்செடிகள் தேவை என்பதால், அதற்கான நடவுப் பணிகள் தொடங்கியுள்ளோம்.
கொய்மலர்கள் எனப்படும் அலங்கார மலர்ச்செடிகளான ஆஸ்டர், பால்சம், பெகோனியா, கேலண்டுலா, கார்நேசன் மேரிகோல்டு உள்ளிட்டவை சுமார் 6 லடசம் செடிகள் வளர்க்கப்பட உள்ளன.
இவற்றுக்காக 6 லட்சம் விதைகள் கொல்கத்தாவில இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும், டேலியா வகை மலர்களை உருவாக்கும் வகையில், 1 லட்சம் டேலியா மலர் நாற்றுகள், விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
மலர்ச் சிற்பங்கள்
கொய்மலர் விதைகள், டேலியா நாற்றுகள் ஆகியவற்றை, 10 ஆயிரம் மலர்ந்தொட்டிகளில் நடவு செய்யும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மலர்ச்செடிகளில சில வகைகள், 2 மாதத்திலும், சில வகைகள் 3 மாதத்திலும் பூக்கக் கூடியவை, எனவே, இப்போதே மலர்ச்செடிகளையும் விதைகளையும் நடவு செய்துள்ளோம்.
இதுதவிர, ரோஜா தோட்டத்திலும் பலவகை ரோஜாக்களைக் கொண்ட தோட்டத்தை உருவாக்க, 4 ஆயிரம் ரோஜாச் செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள புல்வெளிகளை சீரமைக்கும் பணி, புற்களால் ஆன பொம்மைகளை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் தொடங்கப் பட்டுள்ளன. கோடை விழா மலர்க் கண்காட்சியின்போது, மலர்ச் சிற்பங்கள் குறித்து திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரத்தில் மலர் கண்காட்சி நடந்தது.
- மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பில் தோட்டக்கலை துறையின் மூலம் 2-வது மலர் கண்காட்சி நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி மலர் கண்காட்சியை திறந்து வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நினைவு சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தோட்டக்கலைத்துறையின் மூலம் ராமநாதபுரம் நகர், அருகாமையில் அச்சடிபிரம்பு பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாலை ஐந்திணை மரபணு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் பூக்கள் வரவழைக்கப்பட்டு ராமநாதபுரம், ராமேசுவரத்தின் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் கங்காரு, டைனோசர், திமிங்கலம், முதலை ஆகியவற்றின் உருவங்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. அதே போல் அப்துல்கலாமின் கண்டுபிடிப்பான பி.எஸ்.எல்.வி ராக்கெட் காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் போன்று காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி நறுமணம் கொண்ட திரவியங்களால் தயாரிக்கப்பட்ட யானை மற்றும் அகத்தியர் முழு உருவ சிலை நன்றாக உள்ளன. இத்தகைய மலர் கண்காட்சி மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன அலுவலர் பகவான் ஜெகதீஷ் சுதாகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி நாளை (19-ந் தேதி) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
நாளை காலை 11 மணிக்கு பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்கா முழுவதும் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
மலர் கண்காட்சியை தொடர்ந்து நடைபெறும் கோடை விழாவில் வாத்து பிடிக்கும் போட்டி, படகு போட்டி, நாய்கள் கண்காட்சி, படகு அலங்கார அணிவகுப்பு ஆகியவை நடைபெறுகிறது.
கொடைக்கானலில் கடந்த 56 ஆண்டுகளாக கோடை விழா நடைபெற்று வருகிறது. இதுவரை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். இந்த ஆண்டில்தான் தமிழக முதல்வர் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொடைக்கானலில் ரூ.10 கோடி செலவில் 10 ஏக்கரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இந்த ரோஜா தோட்டத்தில் 2 ஆயிரம் வகையான 15 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண தற்போதே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கி உள்ளனர். #TNCM #EdappadiPalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்