search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    47-வது கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடக்கம்- சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாரான ஏற்காடு
    X

    அண்ணா பூங்காவில் மலர் உருவங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

    47-வது கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடக்கம்- சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாரான ஏற்காடு

    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.
    • அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடை பெறுகிறது.

    தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமவுஸ், டாம் அண்டு ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும், ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும் காப்பி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பிரங்களை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியும், சமூக நலத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பிலா சமையல் போட்டியும், விளையாட்டுத்துறையின் சார்பில் 23-ந் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் 26-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர்நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது.

    சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடுஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புறபாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    Next Story
    ×