என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை விழா"

    • கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
    • பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, பழ கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.

    மலைபயிர்கள் கண்காட்சியை முன்னிட்டு இளநீர், நுங்கு, பாக்கு உள்ளிட்டவற்றை கொண்டு பூங்காவின் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நுங்கு, இளநீர், பனைமர ஓலைகளை கொண்டு மலைகிராம குடிசை, பனை ஓலைகளில் சேவல், கோழி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர முந்திரி பருப்பை பயன்படுத்தி ஆடு, மாடு மற்றும் மாட்டு வண்டி, விவசாயி தென்னை மரம் ஏறுவது போன்ற உருவம், ஏர் கலப்பை, ஆட்டு உரல் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கு, தேயிலை போன்றவற்றை கொண்டும் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது. இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விட்டது. தற்போது மழை ஓரளவு குறைந்து விட்டதால் இன்று தொடங்கும் மலைபயிர்கள் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
    • கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

    அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்திருந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இங்கு இடம்பெற்று உள்ள உருளைக்கிழங்கால் ஆன சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்டால் ஆன தமிழ் மறவன், பட்காய் மூலம் உருவான மரகத ப்புறா, பச்சை-சிவப்பு மிளகாய்களால் ஆன பச்சைக்கிளி, சுகினி, கோவைக்காய், பச்சை-சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட்டால் ஆன தஞ்சாவூர் பொம்மை, சேனைக்கிழங்கால் ஆன நீலகிரி வரையாடு போன்ற அலங்காரங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தது.

    மேலும் கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

    அதுவும்தவிர திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன பாண்டா கரடி, இருவாச்சி பறவை, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெ ற்று உள்ளன. அவற்றின் முன்பாக சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

    காய்கறி கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
    • நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கோத்திகிரி:

    நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் கோடைவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

     

    கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.

    காய்கறி கண்காட்சியை முன்னிட்டு பல ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் பூங்காவில் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா முழுவதும் பல ஆயிரம் மலர் செடிகளில் பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    இந்த கண்காட்சியில் தமிழ் கலாசாரத்தை பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் சிலம்பாட்டம் வடிவமைப்பு, மரகதபுறா, மிளகாய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு பச்சைக்கிளி, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    இதுதவிர தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளைபொருட்கள் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. குழந்தைகளை கவரும் வகையில் பல வண்ண உருவங்களும் செய்யப்பட்டிருந்தன.

    மேலும் நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு இன்று காலை முதலே கோத்தகிரி நேரு பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    அவர்கள் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை, மரகதபுறா, பச்சைக்கிளி உள்ளிட்ட உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் அங்கு பூத்து குலுங்கிய மலர்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இதேபோல், பள்ளி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    நடப்பு ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதையொட்டி, ஏற்காட்டு சுற்றுலா தலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுகிறது.

    எனவே இந்த இதமான சூழலை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் இங்குள்ள பூங்காக்களிலும் வண்ணமயமான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் வகைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றனர்.

    • மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும்.

    ஊட்டி:

    மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இருந்தாலும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலை சமாளிப்பதற்காகவும், குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகவும் வழக்கத்தை விட பல மடங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

    அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான கோடை விழா மே மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி மே 19-ந் தேதி தொடங்குகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும். மே 23-ந் தேதி வரை 5 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.

    மலர் கண்காட்சியை போல் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடத்தப்பட உள்ளது. கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7-ந் தேதிகளில் 12-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 12, 13, 14-ந் தேதிகளில் 10-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 27, 28-ந் தேதிகளில் 63-வது பழக்கண்காட்சி நடக்கிறது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். மலர் கண்காட்சியில் பங்கேற்க கவர்னர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
    • கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்நிலையில், குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதநாட்டிய குழுவினருடன் இணைந்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பரதநாட்டியம் ஆடி அசத்தினாா். பின்னா் மற்றொரு பாடலுக்கு தனது மகள் சம்ருதி வர்ணமாலிகாவுடன் பரத நாட்டியம் ஆடியது பாா்வையாளா்களை கவா்ந்தது.

    கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷின் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். அங்கு எனது தாய் தலைமை ஆசிரியராக பணியாற்றினாா். அப்போது மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பாா். அதிலிருந்து நானும் பரதம் கற்றுக்கொண்டேன். அப்போது, கவிதை, பேச்சு, நடனப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பின்னா் சிலம்பம் கற்றுக் கொண்டேன். கோடை விழாவில் எனது மகளுடன் சோ்ந்து பரதநாட்டியம் ஆடியது பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

    இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
    • கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடப்பு ஆண்டிற்கான கோடைவிழாவின் தொடக்கவிழா நாளை (26ம் தேதி) அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெறவுள்ளது.

    கோடை விழாவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றவுள்ளார். தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்கண்காட்சியினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலைநிகழ்ச்சிகளையும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.

    சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சமயமூர்த்தி, சுற்றுலா இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர்/தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சந்தீப்நந்துாரி, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மேலாண்மை இயக்குநர்(டான்ஹோடா) பிருந்தாதேவி ஆகியோர் சிறப்புறையாற்றவுள்ளனர்.

    விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை 3 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, பட்டிமன்றம், ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 28ம் தேதி அன்று பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 30ம் தேதி அன்று படகு போட்டி நிகழ்ச்சியும், 31ம் தேதி அன்று கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மேலும் கலைப்பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளனர். கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    • அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    வால்பாறை,

    வால்பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (26-ந்தேதி) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியும் இடம் பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா? மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது அந்த காலமா? இந்த காலமா? பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை அன்று பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

    விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • விழாவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • கோடைவிழா நடக்கும் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை காணவும், இங்குள்ள தேயிலை தோட்டத்தின் இயற்கை அழகினை ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கோவை வால்பாறையில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.

    விழாவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இன்று தொடங்கிய கோடை விழாவானது வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கோடைவிழா நடக்கும் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெர்பரா, ரோஜா, டென்ரோபியம், புளு டெய்சி, ஏஸ்பரகஸ் பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட், வண்ணத்துப்பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளையும் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது.

    மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடை விழா சின்னமாக விளங்கும் இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகிய உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    விழாவில் பரதநாட்டியம், யோகா, கிராமிய நடனம், நையாண்டி மேளம், செண்டை மேளம், கரகாட்டம், காவடியாட்டம், காவலர்களின் நாய்கள் சாகச நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட படுகர் நடனம், கல்வி துறை சார்பில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி, வால்பாறை வியாபாரிகள் சார்பில் மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்க உள்ள கண்காட்சியில் நடைபெற உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நகராட்சி படகு இல்லத்தில் படகு சவாரியும் நடக்க உள்ளது. விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    • ஆண்டுதோறும் நீலகிரியில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • பழக்கண்காட்சிக்காக தயாரான 2 அரை லட்சம் மலர் நாற்றுகள் தற்போது பூங்காவில் பூத்து குலுங்குகின்றன.

    குன்னூர்:

    சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இதனையொட்டி ஆண்டுதோறும் நீலகிரியில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி, மலர் கண்காட்சி மற்றும் பல கண்காட்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா, வாசனை திரவியம் மற்றும் மலர் கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கோடை விழாவின் நிறைவாக இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    பழக்கண்காட்சிக்காக தயாரான 2 அரை லட்சம் மலர் நாற்றுகள் தற்போது பூங்காவில் பூத்து குலுங்குகின்றன. மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    பழக்கண்காட்சியில் சிறப்பம்சமாக 1.2 டன் அன்னாசி பழங்களை கொண்டு பிரம்மாண்ட அன்னாசிபழம் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர திராட்சை பழங்களை கொண்டு மலபார் அணில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    பல வகையான பழங்களை கொண்டு பழக்கூடை, ஆரஞ்சு பழங்களை கொண்டு பிரமிடு, மாதுளை பழங்களை கொண்டு மண்புழு உருவம், ஊட்டி 200-யை குறிக்கும் வகையில் பல்வேறு வகையான பழங்களை கொண்டு ஊட்டி 200 உருவமும் வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் பழங்களை கொண்டு பொம்மை மற்றும் விலங்கு, பறவைகளின் உருவங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    இவை அனைத்து சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள் பழ கண்காட்சியை பார்வையிட்டு, பழங்களால் ஆன உருவங்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கண்காட்சியில் கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தோட்டக்கலைத்துறையினர் சார்பில் 25 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அமைந்துள்ள அரங்குகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக குன்னூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.
    • 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது. இதை யொட்டி பிரமாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. நிறைவு விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் புகைப்படப்போட்டி, இளை ஞர்கள் மற்றும் பெண்க ளுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டி கள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகை யில், 46-வது ஏற்காடு கோடை விழாவை சுமார் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர். ஏற்காட்டை சுற்றி பார்க்க சூழலியல் சுற்றுலா பேருந்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நாள்தோறும் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை புறப்பட்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலை, ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களையும் பார்வையிட்டு திரும்பும் வகையில் இந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஏற்காடு ஏரியில் வண்ண விளக்குகளுடன் கூடிய நீர் ஊற்று அடுத்த ஆண்டு கோடைவிழாவில் இடம் பெறும் என்றார். நிகழ்ச்சி யில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் (பொ) மாறன், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புராஜன், குணசேகரன் உட்பட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×