search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் கோடை விழா தொடங்கியது- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
    X

    வால்பாறையில் கோடை விழா தொடங்கியது- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

    • விழாவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • கோடைவிழா நடக்கும் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை காணவும், இங்குள்ள தேயிலை தோட்டத்தின் இயற்கை அழகினை ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கோவை வால்பாறையில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.

    விழாவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இன்று தொடங்கிய கோடை விழாவானது வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கோடைவிழா நடக்கும் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெர்பரா, ரோஜா, டென்ரோபியம், புளு டெய்சி, ஏஸ்பரகஸ் பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட், வண்ணத்துப்பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளையும் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது.

    மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடை விழா சின்னமாக விளங்கும் இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகிய உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    விழாவில் பரதநாட்டியம், யோகா, கிராமிய நடனம், நையாண்டி மேளம், செண்டை மேளம், கரகாட்டம், காவடியாட்டம், காவலர்களின் நாய்கள் சாகச நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட படுகர் நடனம், கல்வி துறை சார்பில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி, வால்பாறை வியாபாரிகள் சார்பில் மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்க உள்ள கண்காட்சியில் நடைபெற உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நகராட்சி படகு இல்லத்தில் படகு சவாரியும் நடக்க உள்ளது. விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    Next Story
    ×