search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் நாளை தொடங்கும் கோடை விழா
    X

    வால்பாறையில் நாளை தொடங்கும் கோடை விழா

    • தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    • அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    வால்பாறை,

    வால்பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (26-ந்தேதி) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியும் இடம் பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா? மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது அந்த காலமா? இந்த காலமா? பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை அன்று பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

    விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    Next Story
    ×