என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் மலர் கண்காட்சி நிறைவு: குன்னூரில் பழக்கண்காட்சி இன்று ரத்து
- மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
- நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
குன்னூர்:
சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை தந்தாலும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக நீலகிரியில் குவியும் சுற்றுலாபயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கடந்த 11 நாட்களாக நடந்து வந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு நடத்தப்பட்டு மலர்கண்காட்சி நிறைவடைந்தது.
பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இன்று மாலை வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் இன்று கடைசி நாள் நடைபெற இருந்த பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை நடைபெற இருந்த பரிசளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மற்றொரு நாளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






