என் மலர்
நீங்கள் தேடியது "Summer rain"
- காற்றுடன் கோடை மழை ஒரு மணி நேரம் பெய்தது.
- மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
பேராவூரணி:
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. கடந்த வாரம் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதி மற்றும் கொன்றைக்காடு, ஒட்டங்காடு, படப்ப னார்வயல், மணக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பேராவூரணியில் பதிவான மழை விபரம்:பேராவூரணி 10 மி.மீ, ஈச்சன்விடுதி 26 மி.மீ, ஆயிங்குடி 34.2 மி.மீ, நாகுடி 26 மி.மீ.
- கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
- 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்ப நாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப் பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமார பாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங் களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன் பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.
கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணையின் நீர்மட்டம் 50.52 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 175.60 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அணைக்கு வந்த தண்ணீர், 2 மாதங்களுக்கு மேலாக ஆற்றில் உபரிநீராக திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நீர்பிடிப்பு பகுதியிலும், ஆயக்கட்டு பாசன பகுதியிலும் மழை இல்லாததால், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக சுழற்சி முறையில் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 27.52 அடியாக சரிந்து போனது.
இந்த நிலையில், கடந்த 2 மாதமாக அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதி யான கல்வராயன் மலை பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, நேற்று மாலை நிலவரப்படி 31.69 அடியாக உயர்ந்தது.
தற்போது அணையில் 69.87 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் அணை பாசன கிராமங்களில் எதிர்பார்த்த அளவிற்கு கோடை மழை கைகொடுக்காததால், பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக் கின்றனர்.
- தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கோடை வெயிலின் வெப்பத்தால் அவதிபட்டு வந்த மக்களுக்கு 2 நாட்கள் பெய்த மழை இதமாக இருந்தது. 3 மாதங்கள் சுட்டெரித்த வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது. ஒரு சில நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
அதன்படி இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரையொட்டிய மாவட்டங்களில் மழை தூறல் இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை சிறுசிறு தூறலாக பெய்தது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் இன்று காணப்பட்டது.
- பலத்த காற்று மழை காரணமாக பழவேற்காடு கடலில் குறைந்த அளவு படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.
- தாழ்வான இடங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
திருவள்ளூர்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று இரவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2-வது நாளாக நேற்று இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
திருவள்ளுரில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் இரவிலும் நீடித்தது. அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
திருத்தணி, தாமரப்பாக்கம், திருவாலங்காடு, ஆவடி, பூண்டி, பூந்தமல்லி செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 63 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில மற்ற இடங்களில் பெய்த மழை அளவ(மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-12
பள்ளிப்பட்டு-18
ஆர்.கே.பேட்டை-30
சோழவரம்-32
பொன்னேரி-17
செங்குன்றம்-35
ஜமீன்கொரட்டூர்-28
திருவாலங்காடு-53
பூந்தமல்லி-62
பூண்டி-28
தாமரைப்பாக்கம்-38
திருவள்ளூர்-54
ஊத்துக்கோட்டை-22
ஆவடி-53
பொன்னேரி அடுத்த உப்பளம், பழவேற்காடு மீஞ்சூர் அடுத்த அரியன் வாயல் நந்தியம்பாக்கம் கல்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. இதையடுத்து மின்தடை ஏற்பட்டது.
தடப்பெரும்பாக்கத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் தெரு நாய் ஒன்று பலியானது. பலத்த காற்று மழை காரணமாக பழவேற்காடு கடலில் குறைந்த அளவு படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன. பொன்னேரி 9-வது வார்டு, பர்மா நகர், ரெயில் நிலையம் அருகில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளது. ஆணையர் கோபிநாத் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு கன மழை கொட்டியது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 82 மி.மீட்டர் மழை பதிவானது. காஞ்சிபுரத்தில் 42.7மி.மீட்டர், உத்திரமேரூர்-40.8 மி.மீட்டர், வாலாஜாபாத்-48.4, ஸ்ரீபெரும்புதூர்-78.4, செம்பரம்பாக்கம்-64.2.மி.மீட்டர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதியில் 2-வது நாளான நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 79 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில்-55 மி.மீட்டர், செய்யூர்-25.3 மி.மீட்டர், தாம்பரம்-21.5 மி.மீட்டர், மாமல்லபுரம்-27 மி.மீட்டர், கேளம்பாக்கம்-44.2 மி.மீட்டர், திருக்கழுக்குன்றம்-45.4 மி.மீட்டர், திருப்போரூர்-37 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது.
- வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- ரெயில் சேவை பாதித்துள்ளதால் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வியாசர்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாள பாதையில் மழை நீர் தேங்கியது.
வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரூ செல்லும் ரெயில் ஆவடியில் இருந்து இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது.
ரெயில் சேவை பாதித்துள்ளதால் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்த பிறகே சென்ட்ரலில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது.
- 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை:
சென்னையில் நேற்றிரவு 10 மணி முதல் முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. சென்னை கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் விடாமல் மழை பெய்ததால் ரோடுகளில் மழை நீர் தேங்கியது.
அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மிக அதிகமாக 14 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது. இடைவிடாமல் மழை பெய்ததால் ஓடுபாதை தெரியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக துபாய், அபுதாபி, தோகா, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர், மஸ்கட், கொழும்பு, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. இதே போல் சென்னையில் இருந்து துபாய், லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
காலை 7 மணிக்கு பிறகு தான் மழை பெய்வது குறைந்தது. அதன் பிறகுதான் டெல்லி, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டது. சென்னையில் விடிய விடிய திடீரென மழை பெய்ததால் விமான பயணிகள் பலர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வராமல் பலமணி நேரம் காத்திருந்து அதன் பிறகே வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
- பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது.
சென்னை:
சென்னையில் பல நாட்கள் வெயிலில் நடமாட முடியாமல் தவித்த மக்களை ஒரேநாள் மழை தவிக்க வைத்துவிட்டது. பல இடங்களில் ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளம் வெளியே தெரியாத அளவுக்கு மூழ்கி உள்ளது. மின்சார ரெயில் தண்டவாளம் லேசாக தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ரெயில்கள் தூரத்தில் வரும்போதே கையில் வைத்திருக்கும் அவசரகால விளக்கை காட்டி ரெயில்களை மெதுவாக செல்ல வைக்கிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் நடந்து செல்லும் பயணிகளும் செல்ல முடியவில்லை.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த வழியாக தரைதளத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த சாலை இப்படித்தான் வெள்ளத்தால் துண்டிக்கிறது. இந்த பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு எதையும் காணவில்லை.
மழைக்காலத்தில் மட்டும் மோட்டார் வைத்து ஓரளவு தண்ணீரை வெளியேற்றி சமாளிப்பார்கள். அதன்பிறகு அடுத்த மழை காலத்தில் தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.
- ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
- சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஏற்காடு மலை பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது.
சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
- சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது.
- ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
சென்னை:
கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் கடுமையாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது. மக்கள் பகல் வேளையில் மட்டுமின்றி இரவிலும் சிரமப்பட்டனர். வெயிலின் உஷ்ணம் இரவில் கடும் புழுக்கத்தை தந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது.
பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதிபட்டு வந்த நிலையில் ரம்மியமான சூழல் இதமாக இருந்தது. 2 மாதத்திற்கு பிறகு மப்பும் மந்தாரமுமான சூழலுடன் மழையும் பெய்ததால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. லேசான காற்றுடன் பெய்த மழை நள்ளிரவில் அதிகரித்து நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றுடன் பெய்ததால் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
தொடர்ந்து விடிய விடிய மழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. ஒரு சில நேரங்களில் லேசான தூறலாகவும், சில சமயங்களில் கனமழையாகவும் பெய்தது. வானம் இருண்டு காணப்பட்டது. பயங்கர இடி சத்தத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
கிரின்வேஸ் சாலை சந்திப்பு, நீலாங்கரை பகுதியில் பெய்த மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியது. பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.
புதிதாக போடப்பட்ட தார் சாலையில் பல இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றன.
ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் தற்போது தேங்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தேங்கி நின்றன. சாலைகளில் மட்டுமின்றி தெருக்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வெள்ளம் போல் காட்சி அளித்தது.
நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் 207 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தன. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது மண்டலம் வாரியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
44 இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. 163 இடங்களில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதே போல 23 இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மரங்கள் வெட்டி அகற்றும் பணியும் முழு வீச்சில் நடந்தது. போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மயிலாப்பூர் முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு, தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றினர்.
மாநகராட்சி ஊழியர்கள் மரம் வெட்டும் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டன. பகலிலேயே வாகன ஓட்டிகள் விளக்குகளை பயன்படுத்தி சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கொட்டும் மழையில் நனைந்து சென்றனர்.
கனமழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. அரசு பஸ்களில் குறைந்த அளவில் மக்கள் பயணம் செய்தனர். ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் ஓடின.
சென்னையை போலவே புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. தாம்பரம், மதுரவாயல், புழல், வண்ட லூர், பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
கோடை வெயிலின் தாக்கத்தால் 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலாக இருந்தது. வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது போல் மக்கள் மனமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
- கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.
- பெரும்பாலான இடங்களில் இயல்பாக பதிவாகும் அளவைவிட 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை வெயில் குறைந்திருந்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக உக்கிரமாக இருந்த கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம், திருப்பத்தூர், பாளையங்கோட்டை ஆகிய 3 இடங்களில் மட்டும் 100 டிகிரியை தாண்டி இருந்தது. நேற்றும் பல இடங்களில் மழை பெய்ததாலும், மேகக்கூட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலும் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அந்தவகையில் நேற்று பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 97.7 டிகிரி தான் பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் அதைவிட குறைவாகவே வெயில் பதிவானது. பெரும்பாலான இடங்களில் இயல்பாக பதிவாகும் அளவைவிட 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை வெயில் குறைந்திருந்தது.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால், கோடை வெயிலின் கோரத் தாண்டவத்துக்கு சற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் 22-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், போளூர் 4 செ.மீ., சின்கோனா, சின்னக்கல்லாறு தலா 2 செ.மீ., சோலையாறு, நெடுங்கல், கெலவரப்பள்ளி அணை, ஆம்பூர், தண்டராம்பட்டு, மஞ்சளாறு, வால்பாறை தலா 1 செ.மீ. மழை பெய்திருக்கிறது.