என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் திடீர் மழை - சங்ககிரியில் அதிகபட்சமாக 46.4 மி.மீ. பதிவு
    X

    சேலத்தில் திடீர் மழை - சங்ககிரியில் அதிகபட்சமாக 46.4 மி.மீ. பதிவு

    • சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றும் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    குறிப்பாக சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    இதே போல ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழையாக கொட்டியது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மக்கள் கருதிய நிலையில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 46.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 0.7, ஏற்காடு 8.6, ஆனைமடுவு 1, ஆத்தூர் 7, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 1, மேட்டூர் 14 மி.மீ., டேனீஸ்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 91.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×