என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் தேங்கிய மழைநீரை 2-வது நாளாக அகற்றிய ஊழியர்கள்
    X

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் தேங்கிய மழைநீரை 2-வது நாளாக அகற்றிய ஊழியர்கள்

    • அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
    • முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1 மாதத்திற்கும் மேலாக கோடை மழையானது அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஓரளவுக்கு பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், பிற்பகலில் பரவலாக மழை பெய்வதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை சிறிது நேரம் பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காக்காச்சியில் 10 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்தடை பாதிக்கப்பட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளியில் சுடலைமாடசுவாமி கோவில் அருகே உள்ள மரம் சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்தது. காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மெல்ல அதிகரித்தது.

    அதிகபட்சமாக கருப்பாநதியில் 40 மில்லிமீட்டரும், கடனா நதி நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

    தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்ததால் இன்று 2-வது நாளாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சிவன் தெரிவித்தபோது, 1 மணி நேரம் பெய்த கனமழைக்கு சங்கரன்கோவிலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் வாறுகால்களின் அளவு சுருங்கி விட்டது.

    கோவிலை சுற்றி உள்ள சாலைகளின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவில் இருக்கும் இடம் தாழ்வான இடம் ஆகி விட்டது. ஒவ்வொரு முறை புதிய சாலை போடும்போது சாலையை தோண்டி போடாமல் உயரமாக்கிக் கொண்டே செல்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதை அரசும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து வடிகால் வசதியை சரி செய்ததால் கோவிலுக்குள் மழை நீர் தேங்காத நிலை உருவாகும் என்றார்.

    Next Story
    ×