என் மலர்
நீங்கள் தேடியது "Summer Season"
- இந்தாண்டு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது.
- இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளியூர்-வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனாலும் கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசனை கொண்டாட ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.
மேலும் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காணவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1.84 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.
இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்தனர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
கோடை சீசனை கொண்டாட அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் கோடைக்காலத்தில் நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்தாண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் கடந்தாண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் ஊட்டி வருவதற்கு இ-பாஸ் எடுத்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்தாண்டு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்தனர். இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இ-பாஸ் நடையாலும், கடந்த 26-ந்தேதி முதல் மழை பெய்த நிலையிலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கொண்டே வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்து உள்ளனர்.
- ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
- கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஊட்டி:
கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதன்காரணமாக அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பார்வையாளர்களின் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. அங்கு அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்தபடி இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர்.
சுற்றுலாப்பயணிகள் திரண்டு வந்திருந்ததால் ஊட்டி சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யவும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது.
இதற்கிடையே கோடை சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை ஜூன் 30-ந்தேதி வரை இருப்பதால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களும், வார விடுமுறை நாட்களில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, மே 1-ந்தேதியில் இருந்து ஒருவழிப்பாதை கடைப்பிடிக்கப்படுவதால் ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் குஞ்சப்பனை வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் ஊட்டிக்கு வர வேண்டும்.
ஆனால் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிப்பாதை நடைமுறையை கடைப்பிடிக்க முடியாததால், ஒருசில வாகனங்கள் இருவழிப் பாதையில் சென்று வருகின்றன.
இதன் காரணமாக ஊட்டியில் முக்கிய சந்திப்புகளான, 'சேரிங்கிராஸ், மதுவான் சந்திப்பு, குன்னூர் சந்திப்பு, பிங்கர் போஸ்ட் சாலை என்று நகரில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனம் மட்டுமின்றி உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை இரவு வரை தொடர்ந்ததால் அவசரபணிகளுக்கு செல்லமுடியாமல், அனைத்து தரப்பினரும் அவதி அடைந்தனர்.
கோடை சீசனின்போது குறைந்தபட்சம் 250 போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவர். ஆனால் தற்போது 50 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
- வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும்.
- தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும்.
சென்னை:
சென்னையில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. சென்னை மேடவாக்கத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ. மழை பெய்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது:-
சென்னையில் நேற்று பெய்தது சாதாரண வெப்பச்சலன இடி மழைதான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உருவான இடிமழை மேகங்கள் அப்படியே காற்றின் போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தது.
இந்த மழை மேகங்கள் கிட்டத்தட்ட 1,000 கி.மீ. தூரம் பயணித்து சென்னைக்கு நேற்று முற்பகல் 11 மணியளவில் நகர்ந்து வந்த போது கடற்காற்றும் உள்ளே புகுந்ததால் வலுவடைந்தது. இதனால் சென்னையில் நேற்று இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது.
சென்னையில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கோடை மழை என்பதால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் இன்று முதல் மழை குறைய தொடங்கும். வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் வெயில் உச்சம் தொடும்.
வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும். மே 5-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்புதான் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியது. தமிழகத்தில் இன்று முதல் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க கூடும்.
வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல் , ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்பட 22 மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை நிலவக்கூடும்.
தமிழகத்தின் உட்புற சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வருகிற 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பஅலை வீசக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கலாம்.
வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளி பகுதிகளில் விவசாயப் பணிகள், கட்டுமான பணிகள் போன்ற பொதுவெளி பணிகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்மிக பாதயாத்திரை செல்பவர்கள், மலைப்பகுதி ஏறுபவர்கள் முற்பகல் 11 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகபடியாக நீர் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
- சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி தற்போது அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலிருந்து உள்ளூர் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது பயணிகளின் வருகையை குறித்து கொடைக்கானலில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர புதிதாக ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 20ம் தேதிக்கு பின்னர் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்காக அரசு சிறப்பு சைட்சீயிங் பஸ் இயக்கப்பட உள்ளது. குறைவான கட்டணத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியும். பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் அவர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் வழிகாட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.
- மே மாதம் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா, பாகல்கோட்டை, ராய்ச்சூர், கதக், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.
கோடை காலத்தில் வடகர்நாடக மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் பணி நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர், கொப்பல், பல்லாரி, விஜயநகர், விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. வெயில் நேரத்தில் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதையடுத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி அலுவலக பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 9 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டும் பணியாற்றினால் போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும்.
- உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை.
நெல்லை:
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் முடியும் வரையிலும் கோடை கால மாகவே கருதப்படுகிறது. இந்த காலகட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நீராகாரங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த காலகட்டங்களில் ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் மண்பானைகளுக்கு மவுசு அதிகரித்து விடும்.
பொதுவாக மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். நவ நாகரிகத்தை நாடிச் சென்ற தமிழ் மக்கள் சிலர் காலப்போக்கில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் என்றேகூறலாம்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையல் செய்வதில் தொடங்கி பொங்கல் வைப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தும் மண்பாண்ட பொருட்களையே பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிப்போய் விட்டது. ஆனாலும் கோடை காலத்தில் மட்டும் மண்பானைகளின் பயன்பாடு அதிகரித்து விடுகிறது.
இதற்காக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, சேரன்மகாதேவி அருகே உள்ள காருக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான தொழிலாளர்கள் காலம் காலமாக மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு தயாரிக்கும் இந்த மண்பாண்டங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது.
இன்றளவும் காருக்குறிச்சி யில் தயாரிக்கப்பட்டு வரும் அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி பானைகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
காருக்குறிச்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண் பானை, மண் குடங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.600 வரை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

மூடி வைக்கப்படும் குவளைகள் 5 லிட்டர் அளவு கொண்டவை ரூ.100 வரையிலும், 8 லிட்டர் பானைகள் ரூ.120-க்கும், 10 லிட்டர் அளவு கொண்ட பானைகள் ரூ.185 ஆகவும் விற்பனையாகிறது. இந்த கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் ஆண்டாண்டு காலமாக மண்பானை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இயற்கை முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இந்த மண்பானைகளை தயாரித்து வருகிறோம்.

முதல் நாளில் கரம்பை மண்ணை நன்றாக காய வைத்து தூசி தட்டி வைத்துக்கொள்வோம். பின்னர் அதனை ஊற வைத்து தூசி தட்டிய பிறகு கரம்பை மண்ணை தனியாக போட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்க வேண்டும்.
சுமார் 4 மணி நேரம் வரை அதில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2-ம் நாள் கரம்பை மண்ணை எந்திரத்தில் போட்டு அரைத்து அதனை தனியாக வைத்துக்கொள்ள வே்ணடும்.
பின்னர் பானைகளை வடிவமைத்து காய வைப்பார்கள். பின்னர் பானைகளை நெருப்பு மூலம் சுட்டு எடுத்து அடுக்கி வைப்பார்கள்.
வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பும்போது அட்டைப்பெட்டிகளில் வைக்கோலை சுற்றிவைத்து அடுக்கி லாரிகளில் ஏற்றி செல்வோம். பின்னர் அதனை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியை விட மண்பானை, மண்குடம் மூலமாக குடிக்கும் தண்ணீர் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதால் காருக்குறிச்சியில் தயாரிக்கப்படும் இயற்கை யான மண்பாண்டங்கள், தண்ணீர் குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.
இந்த மண்பானைகள் 5 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப குழாய் பொருத்தி கேட்டால் அந்த பானைகளில் நல்லி பொருத்தி கொடுக்கிறார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமான அளவில் மண்பானைகளை உபயோகப்படுத்த தொடங்கி உள்ளதால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது.
- அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வந்தது. இந்த கோடை வெயிலால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு மதிய வேளைகளில் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. கன்னடியன்கால்வாய் பகுதியில் 7.20 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே இந்த மழை பெய்தாலும் மாலை வேளையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட பா. ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பட்டியல்அணி மாநில துணைத்தலைவர் பொன்ராஜ், தச்சை மண்டல தலைவர் பிரேம்குமார், ஊடகப்பிரிவு முத்து, வர்த்தக அணி குரு மகாராஜன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
- கடையம் யூனியன் அலுவலகம் எதிரே தி.மு.க. சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார்.
கடையம்:
கடையம் யூனியன் அலுவலகம் எதிரே தி.மு.க. சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் அங்கப்புரத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் புதுப்பிக்க, முதல் தெருவில் 6 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை, கீழத்தெருவில் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வாறுகால் அமைக்க திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
சேர்வைகாரன்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி ஜெய்லானி முன்னிலை வகித்தார். விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார்.
விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யாராம்குமார், ஒன்றிய முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் எல்.எம். முருகன், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஏ. செல்வராஜ், பொன்னுத்துரை, கே. செல்வராஜ், கல்யாணிபுரம் கிளைச் செயலாளர் முருகன் மற்றும் கலைச் செல்வன், நடராஜன், மணி, நவீன் கிருஷ்ணன், மணிகண்டன், மாரிச்செல்வன், ஸ்டீபன், மேசியாசிங், ஆலங்குளம் அன்பழகன், நெல்லையப்பபுரம் மணி, கண்ணன், தேன்ராஜ், உதயா, முப்புடாதி, ரேவதி, நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கதிரேசன் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு கரிமூட்டதொழில் பலன் தருகிறது.
- இந்த தொழிலில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் உள்பட பல்வேறு பகுதிகளில் விறகுகட்டை மற்றும் கரிமூட்ட தொழில் நடக்கிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கமுதி மற்றும் அபிராமத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள் வரத்துக் கால்வாய்கள், தனிநபர் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி எடுத்து அந்த கட்டைகளை திருப்பூர் போன்ற சாயபட்டறைக்கு அனுப்புகின்றனர். மேலும் இந்த கட்டைகளை பயன்படுத்தி கரிமூட்ட தொழிலும் செய்து வருகின்றனர்.
சீமை கருவேல மரங்களை வெட்டி எடுத்து பெரிய கட்டை விறகுகளை திருப்பூர், கோவை, பல்லடம் போன்ற சாயப்பட்டறை களுக்கு லாரிகள் மூலம் ஏற்றி விற்பனை செய்யப் படுகிறது. எஞ்சிய சிறிய குச்சிகளை வெட்டி அடுக்கி அவற்றை கரிமூட்டம் போட்டுவுடன் வெளி மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து அபி ராமத்தை சேர்ந்த விறகு வெட்டுபவர் கூறுகையில், தற்போது கோடைகாலம் என்பதால் மாற்று தொழிலாக விறகுவெட்டும் தொழிலும், கரிமூட்டம் தொழிலும் செய்து வருகிறோம். கோடை காலத்தில் மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் விறகு வெட்டும் தொழிலை செய்து வருகிறோம்.
இந்த தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் ஒரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.
- ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.
- கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி:
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும். இந்த சீசன் சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் சமவெளி பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவு வாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.
அவர்கள் கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் ரோஜா பூங்காவில் கண்காட்சி தொடங்கியது. இதில் பல வண்ண ரோஜா மலர்களால் ஈபிள் டவர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்து, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதை 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகு, அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.
இது தவிர பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
- தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கத்துறை சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2006-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கி உலக ரோஜா சங்க சம்மேளனம் சிறப்பித்துள்ளது.
தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ்கிறது.
இந்த ஆண்டு கோடை பருவகாலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இதையொட்டி ரோஜா செடிகளின் கவாத்து பணியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






