என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
    • 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ராமேசுவரம்:

    காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மத்திய மாநில உளவுத்துறை, பாதுகாப்பு துறை உயர் மட்ட அதிகாரி குழு ஆலயம் விடுதியில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தமிழ் சங்கமம் நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை மாலை 3:30 மணி அளவில் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்து, ஒரு மணி நேரம் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக சென்று மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு செல்கிறார். துணை குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக வரும் போது மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குடியரசு துணை தலைவர் நிகழ்ச்சி மேடையை வந்தடைந்த உடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.

    அதேபோல் மீண்டும் அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் துணை குடியரசு தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

    • சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
    • 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மண்டபம் மீனவர்கள் 3 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள், நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்ககோரி அனைத்து மீனவ சங்கங்கள் சார்பாக மண்டபம் கோவில் வாடியில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி இன்று மண்டபம் கோவில்வாடி கடலோர பகுதியில் உள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 1300 மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் காரணமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த மூன்று மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதையடுத்து கைது செய்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

    அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மீனவர்கள் மூன்று பேரையும், படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை இவர்கள் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றத்திற்காக வருகிற 5-ந்தேதிவரை 12 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்கக்கோரி நேற்று தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 100-க் கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    இதில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை வலியுறுத்தும் வகையில் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடிஇறங்கு தளத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதம் முழுவதும் கடலுக்கு செல்ல முடியவில்லை. 25 நாட்களுக்கு மேலாக தடை இருந்ததால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தற்போது கடல் இயல்பு நிலைக்கு மாறி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு சென்று வருகிறோம். கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. நேற்று கைதான 12 மீனவர்களுடன் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள மற்ற மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
    • டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.

    வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.

    ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
    • விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை 3 மணிமுதல் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள், அன்றாட பணிகளுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம் நகரம், பட்டிணம் காத்தான், பேராவூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், கீழக்கரை மேம்பால பகுதி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது.

    இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.

    ராமேசுவரத்தில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையம், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தின் அதிகபட்ச மழையாக தங்கச்சிமடத்தில் 33 மி.மீ மழையும், பாம்பனில் 29 மில்லி மீட்டரும், ராமேசுவரத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 22 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளது.

    விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தடி குடைகளை பிடித்தபடி சென்றனர். இன்று காலை முதல் பெய்யும் சாரல் மழையால் நகரில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவி உள்ளது.

    அருப்புக்கோட்டை, சிவகாசி, பாலையம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. மணிக்கு சுமார் 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை கடல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதே போல், ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களிலிருந்து நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    இதே போல், பாம்பன் பகுதியிலும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

    • படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் வந்த காரும், கீழக்கரையில் இருந்து ஏர்வாடி நோக்கி வந்த காரும் கீழக்கரை காவல் நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தில் படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
    • கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை சூறாவளி காற்றால் பொதுமக்கள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டிருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, சாயல்குடி, மண்டபம், தங்கச்சிமடம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. 10 மணி வரை நீடித்த மழையால் முக்கிய சாலைகள், அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் தேங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

    மேலும் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதன் காரணமாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×