என் மலர்
நீங்கள் தேடியது "Fishermen"
- புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் படகு மாயமானது.
- விமானம், ரோந்து படகு மூலம் தேடுதல் வேட்டையில் காவல்படை ஈடுபட்டது.
ஸ்டீரிங் கியர் பழுது காரணமாக 11 நாட்களாக அரபிக் கடலில் சிக்கித் தவித்த 31 மீனர்களை பத்திரமாக மீட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கோவாவைச் சேர்ந்த படகு, புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடுமையான கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் கடலோர காவல்படை விமானம் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று, விமானம் படகு தவித்துக் கொண்டிருந்த இடத்தை கண்டுபிடித்தது.
பின்னர் வீரர்கள் படகை சென்றடைந்து, முக்கியமான உதவிகளை அளித்து, மற்றொரு படகு உதவியுடன் மீன்படி துறைமுகத்திற்கு பழுதான படகை மீனவர்களுடன் கொண்டு வந்தனர்.
- கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப் பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் கடந்த 18-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனால் நாகை மீனவர்கள் இன்று 7-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை கரையோர பகுதிகளில் மீனவர்கள் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் 7 நாட்களாக கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.50 லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
- 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
- படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகர ணங்களை பறித்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 8 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகானந்தம் (38), அருண் (27) ஆகிய 6 மீனவர்களும், நாகை நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ் (19) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நம்பியார் நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சுற்றி வளைத்தனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், எஞ்ஜீன், செல்போன், ஜி.பி.எஸ். கருவி, லைட் பேட்டரி, வாக்கி-டாக்கி, 500 கிலோ மீன் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பு உபகரணங்களை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவசங்கர் என்பவர் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும். எனவே தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. வழக்கமாக வார இறுதி நாட்களில் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரத்தில் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் நேற்று முதல் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. பனைமர உயரத்திற்கு அலைகள் எழுப்புகின்றன. இந்த பகுதியில் வீசும் சூறாவளி காற்று காரணமாக கடற்கரை மணல்கள் சாலைகளை மூடியுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.
- 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம்.
சென்னை :
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
இலங்கைக் கடற்படையினரால் நேற்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம்.
தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதால் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
- வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 4 படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். திடீரென அவர்கள் 3 படகையும் வழிமறித்து மீனவர்களை சரமாரியாக தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடன் வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு திரும்பி நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த கடற்காற்று வீசிவருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடலில் வழக்கத்தை விட காற்று அதிகளவில் வீசுகிறது. இதனால் 2 நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதையொட்டி மீனவர்களின் பாதுகாப்பை கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இன்று அதிகாலை கடலுக்கு செல்ல வந்த மீனவர்கள் தடை உத்தரவை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதன்காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஏர்வாடி, தொண்டி, தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இறங்குதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டி ருந்தன.
இதேபோல் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என கடலோர போலீசார் எச்சரித்தனர்.
மீன்பிடி தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலையிழந்தனர். மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
- அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளால் அருகில் குடியிருக்கும் மீனவர் பகுதியில் அதிகளவு கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அரசு சார்பில் 2023-ல், ரூ.25 கோடி செலவில் கடலில் தூண்டில் வளைவு அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. இன்று வரை பணிகள் ஏதும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் 150 மீனவர் குடும்பத்தினர் இன்று மீன்பிடிப்பை தவிர்த்தனர். பின்னர் தங்களின் உயிர் பாதுகாப்பிற்கு, அரசு விரைவில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கையை வைத்து, நெம்மேலி குப்பம் மீனவர் பஞ்சாயத்து சார்பில் 300-க்கும் மேற்பட்டோர், ஊருக்குள் நுழையும் சாலையில் அமர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம்.
- அதிமுக ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் மாற்றுக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் விவசாய சங்க அமைப்பினர், தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆய்வு செய்து அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். குறுவை, சம்பா சாகுபடி தொகுப்பு கொடுத்தோம்.
உழவன் செயலியை அறிமுகப்படுத்தினோம். அதில் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கினோம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம். அதுபோல் மீன்பிடித் தடைக்கால நிவாரணமும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தி வழங்கப்படும்.
தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் செய்து தரப்படும்.
கஜா புயலால் தென்னை விவசாயம் பட்டுக்கோட்டை, போராவூரணி பகுதியில் பாதிக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை பாதுகாத்தோம். கஜா புயலின் போது சேதமான படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கினோம்.
எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உங்கள் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
- சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து விசைப்படகு கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதி யில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். ஆனால் இன்று மீனவர்களுக்கு ஓய்வு நாள் என்பதால் நாளை (திங்கட் கிழமை) அவர்கள் மீன் பிடிக்கச் செல்ல உள்ளனர்.
இதைதொடர்ந்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி உள்ளனர். விசைப்படகு களில் உள்ள கிடங்குகளில் ஐஸ் கட்டி நிரப்பும் பணி, டீசல் நிரப்பும் பணி, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளை தயார்படுத்தி வைக்கும் பணிகளில் மீனவர்கள் இன்று தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று மாலை சின்னமுட்டம் துறைமுகத்தில் விசேஷ ஜெபம் மற்றும் திருப்பலி நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து விசைப்படகு கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.
இந்த விசைப்படகுகள் நாளை இரவு 9 மணிமுதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்றே களைகட்ட தொடங்கி விட்டது. மீன் ஏலம் எடுப்பதற்காக வெளியூர் மீன் வியாபாரிகளும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
- தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
- புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி:
வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.
இந்த தடைக்காலத்தில் படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தடைக்காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இன்றுடன் (சனிக்கிழமை) தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர்.
இந்த யாகத்தில், முதலமைச்சர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் 17-ந் தேதி வரை, வட தமிழக சுடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






