என் மலர்
நீங்கள் தேடியது "பாம்பன்"
- ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
- ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
மண்டபம்:
வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுபடகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி இன்று ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம் துறைமுக பகுதியில் திடீர் மீன்பிடி தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை ராமேசுரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
- ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும். எனவே தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. வழக்கமாக வார இறுதி நாட்களில் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரத்தில் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் நேற்று முதல் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. பனைமர உயரத்திற்கு அலைகள் எழுப்புகின்றன. இந்த பகுதியில் வீசும் சூறாவளி காற்று காரணமாக கடற்கரை மணல்கள் சாலைகளை மூடியுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
- பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர்.
இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் வந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் பழைய பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சென்று, புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும்" என்றார்.
- அதி வேகத்தில் ரெயில்களை இயக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டப்படுகிறது.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு
பாம்பன்:
ராமேஸ்வரம் தீவு பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 105 ஆண்டுகள் பழமையான ரெயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து, புதிய ரெயில் பாலம் அமைக்க, ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 11.8.2019 அன்று பூமி பூஜையுடன் பால கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது 84% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 333 அடித்தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான 101 இடைவெளிகளை நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து 99 அணுகு பால கண்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கார்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அதி வேகத்தில் ரெயில்களை இயக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரெயில்வே கடல் பாலமாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.
இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
- படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
- கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடலில் நீரோட்டம் காரணமாக கடல் நீர் உள்வாங்காமல் இருக்கும் என மீனவர்கள் கூறினர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேசுவரம், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட வடக்கு கடல் பகுதிகளும் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம் தெரிவித்து வந்தனர். அதேபோல் தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமலும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள தோப்புக்காடு, சின்னப்பாலம், முந்தல்முனை, தரவை தோப்பு உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 500 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரைதட்டி நிற்கிறது.
அந்த படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனவே சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கடல் உள்வாங்கி இருப்பதால் அப்பகுதியில் கடற்கரை ஓரம் வசிக்கக்கூடிய நண்டு, சங்கு, சிற்பி, நட்சத்திர மீன் உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகிறது. அதனை நாய்கள், காகங்கள் இரையாக சாப்பிட்டன.
பாம்பன் தெற்கு கடற்கரை பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்கி வருவதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே குந்துகால்-குருசடை தீவு இடையே உள்ள கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடலில் நீரோட்டம் காரணமாக கடல் நீர் உள்வாங்காமல் இருக்கும் என மீனவர்கள் கூறினர்.
கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட வடக்கு கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் வழக்கத்திற்கு மாறாக 500 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளதால் மீனவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.






