என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam"

    • மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 6 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் "சாகர் கவாச்" என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப் பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் கடந்த 18-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதனால் நாகை மீனவர்கள் இன்று 7-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும், விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை கரையோர பகுதிகளில் மீனவர்கள் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் 7 நாட்களாக கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.50 லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • வேதாரண்யத்தில் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது.
    • மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இந்த ஆண்டு 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் உணவுக்கு தேவையான உப்பும், 6 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பும் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி பணிகள் ஜனவரியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் அடிக்கடி பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல் ஜனவரி மாதம் தொடங்கிய உற்பத்தி பணிகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது.

    கடந்த 8 மாதங்களில் உணவு தேவைக்கான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 4 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக அடிக்கடி பெய்த மழையால் உணவு தேவைக்கான உப்பு 50 ஆயிரம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

     

    அகஸ்தியன்பள்ளியில் இருப்பு உள்ள உப்பு பனை மட்டை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை சேமித்து, உப்பு மழையில் கரைந்து விடாமல் இருக்க பனைமட்டை மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தான் உப்பு எடுக்க இயலும். இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறைவு பெற்றது. குறைந்த அளவே உணவுக்கு தேவையான உப்பு இருப்பு இருந்தாலும் தற்போது ஒரு டன் உப்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனையாகிறது. உப்பு உற்பத்தியும் குறைந்து, உப்புக்கான விலையும் அதிகரிக்காதது மிகவும் கவலை அளிக்கிறது என்றனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் துளசாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சாக்கை, துளசாபுரம், மகாராஜபுரம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இங்குள்ள மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து துளசாபுரம் சட்ரஸ் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக போதிய அளவு குடிநீர் வராததால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

    குறைவான அளவே குழாய்களில் குடிநீர் வருவதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது.

    அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் இங்குள்ள குழாய்களில் இருந்துதான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

    இதனால் அவர்களால் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

    அவர்கள் வீட்டிற்கும், நீர்த்தேக்க தொட்டி இருக்கும் இடத்திற்கும் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவர்கள் அவதியடைகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.

    எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கேரியும், வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திடீரென துளசாபுரம் சட்ரஸ் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
    • உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பானது தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு திடீரென பெய்த மழையால் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    உற்பத்தியான உப்பை விற்பனை செய்தது போக, மீதமுள்ள உப்பை பாதுகாப்பாக தார்பாய் கொண்டு தொழிலாளர்கள் மூடி வைத்துள்ளனர்.

    இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் கூறுகையில்:-ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை வரையிலான 6 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அவ்வப்போது பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டு உற்பத்தி இலக்கான 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தியை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    இந்த திடீர் மழையால் உப்பு பாத்திகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு இன்றும் 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    • உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

    இங்கு அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கு உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் போதுமான உப்பு இருப்பு வைக்க முடியவில்லை.

    தற்போது உற்பத்தி செய்யப்படும் உப்பை தினமும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

    தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வெயிலின் தாக்கத்தால் தீவிரமாக உப்பு உற்பத்தி நடந்தாலும் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

    உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.

    இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    • ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
    • பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாகை சாலையில் கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கல்வி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வழகறிஞர் நாமசிவாயம், சமூக ஆர்வலர் வசந்தி செல்வகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி, இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர்,தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர் ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஆங்காங்கே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.
    • 2 மீனவர்களையும் மீட்டு கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஆறுகாட்டுத்துறை மீனவகிராமத்துக்கு கிழக்கே வங்ககடலில் சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு பைபர் படகு நிற்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இலங்கைக்கு சொந்தமான பைபர் படகில் 2 மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் மீட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் , மைக்கேல் பெர்னாண்டோ என்பதும் கடலில் மீன் பிடித்த போது திடீரென படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×