என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் துளசாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சாக்கை, துளசாபுரம், மகாராஜபுரம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இங்குள்ள மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து துளசாபுரம் சட்ரஸ் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக போதிய அளவு குடிநீர் வராததால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

    குறைவான அளவே குழாய்களில் குடிநீர் வருவதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது.

    அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் இங்குள்ள குழாய்களில் இருந்துதான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

    இதனால் அவர்களால் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

    அவர்கள் வீட்டிற்கும், நீர்த்தேக்க தொட்டி இருக்கும் இடத்திற்கும் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவர்கள் அவதியடைகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.

    எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கேரியும், வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திடீரென துளசாபுரம் சட்ரஸ் அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×