என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha"

    • பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர்,கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநா யகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்க ளில் சதுர்த்தியை முன்னி ட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மாப்பிள்ளை விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
    • பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம் தெருவில் உள்ளது மாப்பிள்ளை விநாயகர் கோவில். இங்கு 36-வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

    கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூைஜகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • புதுச்சேரி என்றதும் அடுத்த வினாடி நம் மனக்கண்ணில் தோன்றுபவர் மணக்குள விநாயகர்.
    • 600 ஆண்டு கால குறிப்புகளை மணக்குள விநாயகர் பற்றிய வரலாறு கொண்டுள்ளது.

    தமிழ்நாட்டில் விநாயகர் கோவில் என்றதும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் எப்படி நினைவுக்கு வருகிறார்களே.... அது போல புதுச்சேரி என்றதும் அடுத்த வினாடி நம் மனக்கண்ணில் தோன்றுபவர் மணக்குள விநாயகர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் நகரின் நாயகனாக இவர் அருள்பாலித்து வருகிறார்.

    இவர் இத்தலத்துக்கு எப்படி வந்தார்? இவரை பிரதிஷ்டை செய்தது யார்? என்பன போன்ற எந்த விவரங்களும் யாருக்கும் தெரியாது. பழமையான விநாயகர் தலங்களை ஆய்வு செய்தால், அந்த தலங்கள் புராண நிகழ்வுகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருப்பதை அறியலாம். சில தலங்களில் விநாயகரின் பெயரே அவர் அந்த தலத்தில் எழுந்தருளியதற்கான காரணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    நாடெங்கும் இப்படி விநாயகர் அவதார சிறப்பையும், அவரது வீர, தீர செயல்களை உணர்த்தும் பழமை சிறப்பையும் கொண்டுள்ள தலங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் இத்தகைய புராண பின்புலம் எதுவும் புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு இல்லை.

    என்றாலும் மணக்குள விநாயகர் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் விநாயகராக இருப்பதற்கு அவரது அருளாற்றலே காரணமாகும்.

    கடந்த 600 ஆண்டுகளில் மணக்குள விநாயகர் எப்படி இருந்தார் என்பதற்கு ஆதாரமான குறிப்புகள் ஏராளம் உள்ளன. அதற்கு முந்தைய கால கட்ட வரலாற்றில் இந்த விநாயகரை பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.

    எனவே இந்த விநாயகர் இத்தலத்துக்கு வந்த மூலக்கதை யாருக்குமே தெரியாது. ஆதிகாலத்தில் இந்த விநாயகரை மணல் குளம் கரையில் உள்ள அரச மரத்தடியில் மகரிஷி ஒருவர் பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்றும், அப்போது இந்த விநாயகருக்கு வேறு பெயர் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    புதுச்சேரியில் வசித்து வந்த தொள்ளைக்காது சித்தர்தான்,இந்த விநாயகரை ஸ்தாபித்து இருப்பார் என்று சிலர் எழுதியுள்ளனர். எதையும் உறுதிபடுத்த இயலவில்லை. எனவே கடந்த 600 ஆண்டு கால குறிப்புகளை கொண்டே மணக்குள விநாயகர் பற்றிய வரலாறு பலராலும் எழுதப்பட்டுள்ளது. அந்த வரலாறுகளை சற்று ஆய்வு செய்தால் மணக்குள விநாயகரின் மகிமை நம்மை சிலிர்க்க வைக்கிறது.

    புதுச்சேரியில் மிகச் சரியாக 349 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1666-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. அதற்கும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1400-களில் புதுச்சேரியில் இந்த விநாயகர் பெரும்பாலான மக்களால் விரும்பி வழிப்படும் ஒருவராக இருந்தார்.

    அந்த கால கட்டத்தில் தற்போது ஆலயம் உள்ள இடம் மிகப்பெரிய குளமாக இருந்தது. அந்த குளம் நல்ல மணல் உள்ள குளம். எனவே புதுச்சேரி மக்கள் அந்த குளத்தை மணல் குளம் என்று அழைத்து வந்தனர்.

    அந்த குளக்கரையில்தான் நம்ம விநாயகர் வீற்றிருந்தார். அக்காலத்தில் புதுச்சேரி பணக்காரர்கள் மிகுந்த அழகான ஊராக இருந்தது.

    மணல் குளம் பகுதியில் கைக்கோளர் என்ற செங்குந்த முதலியார்களும், சேட செட்டியார் என்ற தேவாங்கச் செட்டியார்களும் அதிக அளவில் வசித்து வந்தனர். நெசவுத் தொழிலே அவர்களது முக்கிய தொழிலாக இருந்தது. இதனால் விநாயகர் இருந்த தெரு நெசவாளர் தெரு என்றழைக்கப்பட்டது.

    அவர்கள் தினமும் காலையில் மணல் குளத்தில் நீராடி, அரச மரத்தடியில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, அதன் பிறகு நெசவுத் தொழிலை தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். விநாயகர் சிலை இருந்த அரச மரத்தடியில் ஒரு நாகச் சிலையும் இருந்தது. அதையும் மணல்குளம் பகுதி மக்கள் வழிபட தவறுவது இல்லை.

    விநாயகருக்கு மணல்குளம் தண்ணீரை எடுத்து வந்துதான் அபிஷேகம் செய்தனர். இதனால் அந்த விநாயகருக்கு இருந்த மூலப்பெயர் மறைந்து `மணல்குளத்து விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.

    பிறகு அது மணற்குளத்து விநாயகர் என்று மாறியது. கால ஓட்டத்தில் அந்த பெயரும் மருவி `மணக்குள விநாயகர்' என்ற பெயர் உருவெடுத்து அதுவே நிலைத்து விட்டது.

    நாளடைவில் மணல் குளம் தூர்ந்து போனது. மெல்ல, மெல்ல குளம் மறைந்து நந்தவனமாக மாறியது. இதனால் நெசவாளர்கள் மணக்குள விநாயகருக்கு கருவறை, அர்த்த மண்டபம் கட்டி சிறிய கோவிலாக மாற்றி வழிபட்டு வந்தனர்.

    பிரெஞ்சுக்காரர்கள் வருகைக்குப் பிறகு அந்த நந்தவனப் பகுதி கட்டிடங்களாக மாறியது.

    அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப புதுச்சேரி மாறினாலும், நம்ம மணக்குள விநாயகர் மட்டும் மாறவே இல்லை. எத்தனையோ சோதனைகள் செய்யப்பட்டாலும் தான் அமர்ந்த இடத்தில் பிடிவாதமாக அவர் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.

    கடலில் வீசப்பட்டாலும் கரை திரும்பிய அற்புதம்

    சென்னையில் கால் ஊன்றிய ஆங்கிலேயர்கள் தற்போது கோட்டை (தலைமை செயலகம்) உள்ள பகுதியை வெள்ளையர் பூமி என்றும் வடசென்னையை கருப்பர் பூமி என்றும் பிரித்து ஆட்சி செய்தனர். அது போலவே புதுச்சேரியில் கால் ஊன்றிய பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி நடுவே ஓடிய உப்பனாற்றுக் கால்வாய்க்கு கிழக்கே உள்ள பகுதியை வெள்ளை நகரம் என்றும், உப்பனாற்றுக் கால்வாய்க்கு மேற்கே இருந்த பகுதியை கறுப்பர் நகரம் என்றும் பிரித்து இருந்தனர்.

    கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் இருந்த தமிழர்கள், தெலுங்கர்கள், இஸ்லாமியர்களை அடித்து விரட்டி விட்டு தங்களுக்கென பெரிய, பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டனர். பிறகு 1988-ல் அவர்கள் கோட்டை ஒன்றை உருவாக்கினார்கள்.

    அந்த கோட்டைக்குட்பட்ட ஒரு பகுதியாக மணக்குள விநாயகர் ஆலயமும் இருந்தது. தினமும் காலையில் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வந்து விநாயகரை வணங்கிச் சென்றது பிரெஞ்சுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    குறிப்பாக திருவிழா நாட்களில் மேள, தாளம் முழங்க விநாயகர் வழிபாடு நடந்ததை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தங்களிடம் அடிமையாக இருப்பவர்கள், தங்கள் பகுதிக்குள் வந்து கொண்டாட்டம் செய்வதா என்று ஆவேசமானார்கள்.

    எல்லாவற்றுக்கும் இந்த விநாயகர்தானே காரணம்..... அவரை இல்லாமல் செய்து விட்டால், தமிழர்கள் யாரும் கொட்டு அடித்தப்படி இப்பகுதிக்கு வர மாட்டார்கள் அல்லவா என்று யோசித்தனர். அப்போது கவர்னரின் உதவியாளராக ஓர்லையான் என்பவர் இருந்தார்.

    இவர் தமிழர்களுக்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்து வந்தார். விநாயகர் இருந்த நெசவாளர் தெரு பெயரை மாற்றி தன் பெயரை சூட்டி ஓர்லையான் தெரு என்று வைத்தவர். அப்படிப்பட்ட இவர் ஆட்களை வைத்து விநாயகர் சிலையை பெயர்த்து எறிந்து கடலில் தூக்கி வீசினார்.

    மறுநாள் காலை ஓர்லையானுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் கரை திரும்பி, அதே இடத்தில் `ஜம்' மென்று உட்கார்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

    பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. மீண்டும் ஒரு தடவை மணக்குள விநாயகரை பெயர்த்து எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்தனர். இந்த முறையும் நம்ம விநாயகர் கரை திரும்பி விட்டார்.

    உடனே பிரெஞ்சுக்காரர்கள் இதில் ஏதோ சதி நடப்பதாக நினைத்தனர். மூன்றாவது தடவை பிரெஞ்சு உயர் அதிகாரி ஒருவர் முன்னிலையில் விநாயகர் சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு, யாருக்கும் தெரியாமல் மிக, மிக ரகசியமாக பிரெஞ்சுக்காரர்கள் மூலம், சிலை நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நடுக்கடலில் மணக்குள விநாயகரை வீசி விட்டு அப்பாடா..... என்று கரை திரும்பினார்கள். இனி பூஜை, கொண்டாட்டம் வழிபாடு எதுவும் இருக்காது என்று மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

    விடிந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். தமிழர்கள் ஆவேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எண்ணி காவல் படைகளை தயாராக வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

    வழக்கம் போல மணக்குள விநாயகர் தன் இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்கு தினமும் காலையில் நடக்கும் அர்ச்சனை, ஆராதனை விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. முன்பை விட அதிகப்படியான பக்தர்கள் வந்து, விநாயகரை வழிபட்டு சென்று கொணடிருந்தனர்.

    பிரெஞ்சுக்காரர்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. எப்படி மணக்குள விநாயகர் கரை திரும்பினார் என்று யோசித்து, யோசித்து தவித்துப் போனார்கள்.

    உண்மையில் மணக்குள விநாயகர் எப்படி கரை திரும்பினார்?

    கடலில் வீசப்பட்ட பிறகு விநாயகர் சிலை மிதந்தபடி வந்து கரை ஒதுங்கியதாகவும், அதை பக்தர்கள் எடுத்து வந்து அதே இடத்தில் வைத்து வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.

    மற்றொரு சாரார், மணக்குள விநாயகர் கடலில் வீசப்பட்டதும் தன் ஆத்மார்த்த பக்தர் ஒருவர் கனவில் தோன்றி கடலோரத்தில் குறிப்பிட்ட இடத்தை கூறி, அங்கு தான் இருப்பதாகவும், தன்னை தனது மணல்குளம் கோவிலுக்கு எடுத்துச் செல்லும்படி கூறியதாகவும் அதன்படி அந்த பக்தர் மணக்குள விநாயகரை மீட்டு பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள்.

    எப்படியோ.... மணக்குள விநாயகர் தான் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை பிரெஞ்சுக்காரர்களுக்கு புத்தியில் நன்கு உறைக்கும்படி கரை மீண்டு வந்து உணர்த்தி விட்டார். அதன்பிறகு மணக்குள விநாயகர் மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு பயம் வந்து விட்டது. பணிவு வந்து விட்டது.

    மணக்குள விநாயகர் அதே இடத்தில் இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்கள். என்றாலும் இடையிடையே மணக்குள விநாயகருக்கு தொந்தரவு கொடுக்கத்தான் செய்தனர்.

    • கணபதிக்கும், அனுமனுக்கும் சூரிய பகவான் தான் குரு.
    • அகத்தி இலை-துயரம் தீரும். தாழை இலை- கோபம் நீங்கும்.

    கணபதிக்கும், அனுமனுக்கும் சூரிய பகவான் தான் குரு. இருவரும் வேதங்களை சூரியதேவனிடம் கற்றவர்கள். கணபதி காலையில் சூரிய உதயகாலத்தில் சூரியனை வணங்கி, குருபூஜை செய்யும் சமயம் என்பதால்,கணபதி ஹோமம் நடத்துபவர்கள் அதிகாலை பிரம்மமுகூர்த்தமான நாலரை மணிக்கே ஆரம்பித்து ஆறுமணிக்குள், அதாவது சூரியன் உதிக்கும் முன் முடிப்பது என்பது சம்பிரதாயம். எனவே தான், புதுமனை புகுவிழா நடத்துபவர்கள் சூரிய உதயத் திற்கு முன்னரே கணபதி ஹோமம் செய்து பூஜை நடத்தி முடிக்கின்றனர்.

    விநாயகர் திருமணம்

    விநாயகர் புத்தியும் சித்தியும் என்று இரு மனைவியரை மணந்து வாழ்ந்தார் என்று புராணக்கதை உண்டு. புத்தி என்பது ஞானமும், அறிவும் குறிக்கும்.சித்தி-என்பது திறமை,முன்னேற்றம் மற்றும் வெற்றி ஆகியவற்றை குறிக்கும் என்பது சமயப்பெரியோர்கள் கூற்று.

    மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்திபுத்தி விநாயகருக்கு திருமணம் செய்து வைப்பதை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்கிறாய்கள். விநாயகருக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது இந்த தலத்தில் மட்டுமே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் இலைகள்

    விநாயகருக்கு என்னென்ன இலைகளைக்கொண்டு அர்ச்சனை செய்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று வேத நூல்கள் தெரிவிக்கின்றன.

    மருதஇலை-மகப்பேறு.

    அரசு இலை-எதிராளி அடங்குவான் வீண்பழி வாராது.

    அகத்தி இலை-துயரம் தீரும்.

    தாழை இலை- கோபம் நீங்கும்.

    கண்டங்கத்தரி- நற்புகழ் வாய்க்கும்.

    வில்வஇலை- இன்ப வாழ்வு மலரும்.

    வன்னிஇலை- முகம் ஓளிவீசும்.

    வெள்ளெருக்குஇலை- சௌபாக்கியம்.

    • கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
    • விநாயகருக்கு உரிய திசை கிழக்கு

    பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே, பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் போது கொழுக்கட்டை படைக்க வேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டைகள் படைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    கணபதிக்கு உகந்த நைவேத்தியம்

    கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத்துண்டு தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.

    பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேக வைத்தது. இட்லி, தோசை. பாயாசம், அவல்,பொரியில் நாட்டுச்சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.

    எப்படி வணங்க வேண்டும்?

    முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் மூன்று முறை குட்டி, காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.

    தூங்க வேண்டிய திசை

    விநாயகருக்கு உரிய திசை கிழக்கு சொந்த வீட்டில் வசிப்பவர்கள் கிழக்கே தலை வைத்து படுக்க வேண்டும். இடது புறம் உடல் கீழே படும்படியோ, மல்லாந்தோ படுக்கலாம்.

    மாமனார் வீட்டிற்குச் சென்றால் தெற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும். முகம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அப்போது வடக்குத் திசையில் உள்ள குபேரனின் பார்வை மருமகனுக்குக் கிடைக்கும். மாமனார் வீட்டிலும் செல்வம் பெருகும்.

    வடக்கே தலை வைத்துப்படுத்தால் ஊரில் இருப்பவர்கள் நம்மை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படும். இதனால்தான் இறந்து போனவர்களின் தலையை வடபுறமும் காலைத் தென்புறமும் வைத்து இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த தகவல்களை சொல்லியிருப்பவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள்.

    விக்னமில்லாத சுகவாழ்வுக்கு இரவில் படுக்கப்போகும் முன் விநாயகரை மனதால் வணங்கியபடி கிழக்கே தலை வைத்துப் படுப்பதே மிக நல்லது.

    • அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர்.
    • கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதி.

    பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் கடம் (குடம்) ஒன்றில் கொண்டு வந்ததையும், அதில் இருந்து சிவபெருமான் லிங்கமாக தோன்றி அருள் புரிந்ததையும் கடந்த பக்கத்தில் பார்த்து இருப்பீர்கள்.

    ஈசனை கண்ட மகிழ்ச்சி தேவர்களுக்கு ஏற்பட்டாலும், அமரத்துவம் தரும் அமிர்தம் தங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று வருந்தினார்கள். அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு ஏற்பட்டது.

    எனவே அமரத்துவம் தரும் அமிர்தம் தருமாறு அமிர்தகடேசுவரரை நோக்கி தேவர்கள் அனைவரும் வழிபட்டனர்.

    பக்தன் கேட்பதைத்தான் இல்லை என்று சொல்லாமல் ஈசன் கொடுப்பாரே? அமிர்தகடேசுவரர் மறுவினாடியே தேவர்கள் முன்பு தோன்றி காட்சி கொடுத்தார்.

    அவரிடம், `எங்களுக்கு அமிர்தம் வேண்டும்' என்று தேவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அமிர்தகடேசுவரர் அருகில் உள்ள குளத்தில் அமிர்தத்தை வைத்துள்ளேன். போய் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி விட்டு மறைந்து விட்டார்.

    மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் உடனே அருகில் இருந்த குளத்துக்கு ஓடினார்கள். அந்த குளத்தில் சல்லடைப்போட்டு தேடிப் பார்த்தனர். ஆனால் அமிர்தம் கிடைக்க வில்லை.

    தேவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் நினைவு வந்தது. உடனே அவர்கள் விஷ்ணுவிடம் ஓடிச் சென்று விபரத்தைக் கூறினார்கள்.

    ஈசன் தருவதாக கூறிய அமிர்தம் எங்கே போயிற்று என்று தன் ஞானதிருஷ்டியால் விஷ்ணு பார்த்தார். அப்போது விநாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து ஒளித்து வைத்திருப்பது தெரிந்தது.

    உலகில் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபட வேண்டும் என்பது மரபு. அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்கிறோம்.

    அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், பிறகு அதை உண்ண தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகரை முதலில் நினைக்கவும் வழிபடவும் தேவர்கள் மறந்து விட்டனர். இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகர் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது தெரிந்தது.

    விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார். முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.

    தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து வழிபட்டு மன்னிப்புக் கேட்டனர். மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார். தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர்.

    அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் இந்த விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். நாளடைவில் அது கள்ள விநாயகர் என்று மாறி விட்டது.

    இந்த கள்ள விநாயகர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.

    அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது.

    இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

    உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.

    முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார்.

    சமஸ்கிருதத்தில் இவரை `சோர கணபதி' என்று அழைக்கிறார்கள். அபிராம பட்டர் அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள விநாயகரை புகழ்ந்து பாடி விட்டே அந்தாதி பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு,
    • ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்!

    இறைவனை பூக்கள் கொண்டு பூஜை செய்தவற்கும் இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    வாசனையற்ற மலர்களை கொண்டு இறைவனை பூஜை செய்யவே கூடாது. (சில மலர்கள் விதிவிலக்கு). தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு புத்திரர்கள் இருந்தும் அவர்களால் எந்த வித சந்தோஷமும் இல்லாதவாறு அமைந்துவிடும்.

    தொன்மையான ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கு பூஜைக்கு ஏற்ற வாசனைமிக்க மலர்களை உபயமாக தரவேண்டும். தொடர்ந்து இது போன்று செய்துவந்தால் புத்திரர்கள் நல்ல புத்தி பெறுவார்கள்.

    சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, பொங்கல் மற்றும் தீபாவளி திருநாள் ஆகிய விஷேட நாட்களில் திருக்கோவில்களுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தரும் கைங்கரியத்தை அனைவரும் இயன்றவரை செய்துவர வேண்டும்.

    நாம் தனிப்பட்ட முறையிலும் நம் தளம் சார்பாகவும், சிவராத்திரி உள்ளிட்ட விஷேட நாட்களில் இந்த கைங்கரியத்தை செய்ய தவறுவதேயில்லை.

    சென்ற நவராத்திரி சமயத்தின் போது கூட நம் தளம் சார்பாக குமணன்சாவடி அருகே உள்ள கண்ணபிரான் திருக்கோவிலுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு மலருக்கும் ஒரு குணமும் சக்தியும் உண்டு.

    உதாரணத்துக்கு ஒரு வில்வ தளம் லட்சம் பொன்மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் விலகும்.

    ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்! (மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வம் பறிக்கக்கூடாது).

    வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது உபயோகப்படுத்தி விட்டு தண்ணீர் விட்டு அலம்பி மீண்டும் உபயோகப்படுத்தலாம். (இந்த சிறப்பு தங்கத்திற்கு மட்டுமே உண்டு).

    ஆனால் ஒரு தெய்வத்திற்கு அர்ச்சித்த பூக்களையோ அல்லது இதர பொருட்களையோ மற்ற தெய்வத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

    சீரும் சிறப்புமாக தற்போது வாழ்ந்து வருபவர்களை காண நேர்ந்தால் "சென்ற ஜென்மத்தில் இறைவனுக்கு நல்ல மலர்களை கொண்டு பூஜை செய்திருப்பார்கள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வீட்டின் முன்பகுதியில் நிச்சயம் தோட்டம் அமைப்பர். அதில் பூஜைக்குரிய மலர்களின் செடிகள் வளர்க்கப்படும்.

    அதில் பூக்கும் மலர்களை கொண்டு தான் இறைவனுக்கு பூஜை செய்வார்கள். மிகுதியாக உள்ளவற்றை அருகே உள்ள ஏதாவது ஆலயத்திற்கு தருவார்கள்.

    ஆனால் இப்போது வீட்டின் முன்னே இடமிருந்தால் கடையை கட்டி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். இந்த ஜென்மாவில் கூட நாம் முழுமையாக அனுபவிக்க முடியாத செல்வத்தை சேர்ப்பதில் குறியாய் இருப்பவர்கள், பல ஜென்மங்களில் நமக்கு நற்பேறுகளை அளிக்கவல்ல இந்த மலர்க் கைங்கரியத்தை செய்ய தலைப்படுவது கிடையாது.

    வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், வீட்டில் தோட்டம் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சௌபாக்கியங்களில் இதுவும் ஒன்று. அத்தனை சுலபத்தில் எல்லோருக்கும் கிட்டாது.

    • புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு
    • இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது

    புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு

    இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது.

    இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்கு தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல், இறைவன்.

    ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.

    இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.

    இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு.

    அபிஷேகத்திற்கு தூய்மையான கிணற்று நீர் ஆகியவை சிறந்தவை.

    இறைவனுக்கு உகந்த மலர்களை வைத்து அவனை உள்ளன்போடு பூசிக்க வேண்டும். இறைவனின் திருமுடியில் மலர் இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது.

    நாம் அன்றாடம் வழிபடும் விநாயகப் பெருமான், சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான், காமாட்சி அம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை உபயோகிக்கலாம்.

    இவை பொதுவானவை. காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறவனை வழிபட வேண்டும்.

    தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது. நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.

    மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன. அறுகு, தும்பை, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, செண்பகம் ஆகியவை அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். 

    • வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள்.
    • தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம்.

    பூக்களுள் சிறந்த பூ

    பூங்களுள் சிறந்தது தாமரைப்பூவே.

    வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு.

    மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான்.

    தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை.

    திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ.

    பவுர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும்.

    முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

    பூக்களின் குணங்கள்

    வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும்.

    சிவப்பு வர்ணப்பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத் தரும்.

    பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும் மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.

    கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது.

    எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?

    தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவிட்டது.

    இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.

    தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம்.

    இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணு கிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.

    பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது.

    பூஜைக்கு ஆகாத பூக்கள்

    அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது. கொண்டுவரப்பட்டது. தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது. அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.

    பறித்த பிறகு மலர்ந்து பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள் ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.

    தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது.

    பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.

    தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்

    அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை, செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை.

    அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.

    விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

    துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.

    வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

    சமபகமாட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

    முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

    கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூஜை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும்.

    குருக்கத்தி, ஆனந்ததிதா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.

    விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

    • அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
    • நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள்.

    காணிப்பாக்கம் விநாயகர் மகிமை

    காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது.

    அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது, ஒருவர் பார்வையற்றவர், முன்றாமவரால் கேட்க இயலாது.

    அவர்கள் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்றவரும் பார்வையற்றவரும் ஏற்றக்காலில் ஏறி நின்று மிதிக்க, ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.

    வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அதைப்பார்த்த அவர் பயந்து "ஐயோ" என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர். செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார்.

    கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர்.

    உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி பெறுகிய இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.

    மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து, வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம்.

    அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.

    "ஸ்ரீகாணிப்பாக்கம்" வரசித்த விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த "சத்தியப்பிரமாணம்" இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார்.

    இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம்.

    சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை.

    இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

    விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.

    நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப்பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்!

    விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.

    • வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம்.
    • அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வருவது விநாயகர் சதுர்த்தி விநாயகரின் அவதார தினம். சிவனார் அபிஷேகப்பிரியர், திருமால் அலங்காரபிரியர், பிள்ளையாரோ நைவேத்தியப்பிரியர்.

    அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருள்களை ஏழை எளியோருக்கு தானம் செய்தால் நல்லது.

    விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும்.

    களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாக சேர்த்து பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.

    வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ளபடி, அவருக்கு உபச்சரங்களான,

    ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாதபூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளை செய்தல் வேண்டும்.

    வீட்டில் இது போல் நம்மால் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும்.

    பூஜையில் வைத்த பிள்ளையார் பிம்பத்தை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.

    ஒளவையார் விநாயகருக்கு பாலும், தேனும் பாகும், பருப்பும் கொடுத்தார்.

    அருணகிரிநாதர் விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கனியும், அப்பம், அவல், பொரி, அமுது, இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்ற பலபொருள்களைத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

    ×