என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- ஓம் பயம் போக்குபவரே போற்றி ஓம் குதிரை வாகனரே போற்றி
- ஓம் யோகினி தேவதையே போற்றி ஓம் கல்லாபினி தேவியே போற்றி
ஓம் அன்பு வடிவே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இனியதைச் செய்வாய் போற்றி
ஓம் பயம் போக்குபவரே போற்றி
ஓம் குதிரை வாகனரே போற்றி
ஓம் பொன்கோட்டை வசிப்போய் போற்றி
ஓம் மீன்கொடி மன்னவா போற்றி
ஓம் பெரும் செல்வ மகனே போற்றி
ஓம் மகர ஆலயத் தெய்வமே போற்றி
ஓம் பாக்யேஸ்வரி பதியே போற்றி
ஓம் ஆனந்தவல்லி மாக்பரே போற்றி
ஓம் உல்லாசினி யே போற்றி
ஓம் நிராகுலியே போற்றி
ஓம் யோகினி தேவதையே போற்றி
ஓம் கல்லாபினி தேவியே போற்றி
ஓம் இதேஸ்வரி தேவியே போற்றி
ஓம் விநோதினி சக்தியே போற்றி
ஓம் சட்குல தேவியரே போற்றி
ஓம் அட்ட பைரவரே போற்றி
ஓம் அசிதாங்க பைரவரே போற்றி
ஓம் குரு பைரவரே போற்றி
ஓம் சண்ட பைரவரே போற்றி
ஓம் குரோத பைரவரே போற்றி
ஓம் உன் மத்த பைரவரே போற்றி
ஓம் கபால பைரவரே போற்றி
ஓம் பீஷண பைரவரே போற்றி
ஓம் சம்மார பைரவரே போற்றி
ஓம் அதிஷ்டம் தரும் பைரவரே போற்றி
ஓம் சௌபாக்ய பைரவரே போற்றி
ஓம் ஐஸ்வர்யம் தரும் பைரவரே போற்றி
ஓம் பொன்மணி தனம் அருள்வாய் போற்றி
ஓம் யோகங்களைக் கொடுக்கும் யோக
பைரவ தேவனே போற்றி! போற்றி!
- மந்திரத்தை ஜபிக்கும் போது நம் கர்ம வினைகள் பாதியாக குறையும்.
- சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது.
ஆடி அமாவாசை தினத்தன்று சிவாலயத்தில் இருக்கும் கால பைரவர் அல்லது சொர்ண பைரவர் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.பின்வரும் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.
முதலில் ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம்(உங்கள் இஷ்டதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று குறைந்தது ஒரு மணிநேரம் வரையிலும், அதிகபட்சம் 5 அல்லது 12 மணி நேரம் வரையிலும் ஜபிக்கவும்.
ஒரு மணி நேரம் வரை ஜபித்ததும், அருகில் இருக்கும் உணவகத்துக்கு சென்று குறைந்தது 3 அதிகபட்சம் 27 காலை உணவுப்பொட்டலங்களை வாங்கி கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யவும். காலை அன்னதானத்தை காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள்ளும்,இரவு 7 மணி முதல் 9 மணிக்குள்ளும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் அன்னதானம் செய்யவும்.
இந்த அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும். மீதி நேரங்களில் கால பைரவர் அல்லது ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அமர்ந்து கொண்டு, ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்துக்கொண்டே இருக்கவும். இது நம் கர்ம வினைகளை பாதியாக குறைக்கும்.
ஆடி அமாவாசை
பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
விரதம் சரி... அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்?
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.
இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.
தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில்.
தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பை புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
ஆடியில் பிறந்த காவிரி, தாமிரபரணி
மனிதன் இருக்கும் வரை தான் அவன் பாவ ஜென்மம். இறந்து போனால் அவன் புண்ணிய ஆத்மா. அவனுக்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும் உண்டு. எனவே இறந்து போன நம்மை சார்ந்த அனைவருமே, வயது வித்தியாசமின்றி நம்மை பாதுகாக்க வருகிறார்கள்.
தமிழகத்தில் காவிரிக்கரைப் பகுதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவது மிகுந்த நன்மையை தரும். ஏனெனில், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது. அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார்.
அவர் தனது கமண்டலத்தில் கங்கையைக் கொண்டு வந்தார். அப்போது விநாயகர் காகம் உருவமெடுத்து கமண்டலத்தை தட்டி விட, காவிரி உருவானது. விழுந்த கமண்டலத்தை அகத்தியர் படாரென பாய்ந்து எடுத்து
மீதி தண்ணீருடன் பொதிகை வந்தார். அந்த தண்ணீரை பொதிகையின் உச்சியில் ஊற்ற அது தாமிரபரணியாக உருவெடுத்தது. எனவே காவிரி, தாமிரபரணி ஆகிய இரண்டு மாபெரும் நதிகளும் ஆடியில், பிறந்ததாக கூறப்படுவதுண்டு.
நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது. கிராம கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களை செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
- இந்த புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்கு செய்ய வேண்டும்.
- தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள நாகநாதரை வழிபட பிள்ளைப் பேறு கிட்டும்.
சேது தீர்த்தம்
வங்கக் கடலும், இந்து மகா கடலும் சேருமிடத்தில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை, ''கோடி தீர்த்தம்'' என்று கூறுவார்கள். இந்த இடத்திற்கு தனுஷ்கோடி என்று பெயர். ராமர், தன் வில்லின் நுனியால் இந்த அணையை உடைத்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
ராமேஸ்வரம் கோவில் வழிபாட்டுக்கு முன்னும், பின்னும் இங்கு முழுக வேண்டும் என்பது ஐதீகம். இங்கு பிதுர் கடன் செய்வதும், அஸ்தி கரைப்பதும் சிறப்பாகும். இந்த சேதுவில் ரத்தினாகரத்தில் (இந்துமா கடல்) முதலில் நீராட வேண்டும். இதனை ''மலநீக்கு முழுக்கு'' என்பார்கள்.
இந்த புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்கு செய்ய வேண்டும் என்பார்கள். ஆடி அமாவாசை, தை அமாவாசை, அர்த்தோதயம், மகோதயம் முதலிய புண்ணிய காலங்களில் இங்கு நீராடுவது சிறப்பாகும். இந்த சிறப்பு நாட்களில் ராமநாத சுவாமி பஞ்சமூர்த்திகளோடு வந்து தீர்த்தம் கொடுப்பார்.
ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், அனுமார் தீர்த்தம்
இவைகளும் இங்குள்ள முக்கிய தீர்த்தங்கள் ஆகும். இந்த தீர்த்தத்தில் குளித்தும், தலையில் தண்ணீர் தெளித்தும் வழிபடுகிறார்கள். இந்த குளத்தில் காசு போட்டும், பொரி போட்டும் வழிபடுகின்றார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கது. ''ராம தீர்த்தம்'' ஆகும். இத்தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள நாகநாதரை வழிபட பிள்ளைப் பேறு கிட்டும். குறிப்பாக ராகு, கேது ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தில் இருந்து நாகதோசம் ஏற்பட்டிருந்தால், (பெண்களுக்கு ஒன்பதாம் இடத்தில் இருத்தல்) இந்த தீர்த்தத்தில் நீராடி, நாகப்பிரதிஷ்டை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். துரோணரின் சாவுக்குக் காரணமாக இருந்த தர்மர், அந்த பாவம் தீர மூழ்கிய குளம்தான் இந்த ''ராம தீர்த்தம்'' ஆகும்.
அக்கினி தீர்த்தம்
ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர், சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன போது, சீதை தீக்குள் இறங்கியதும், சீதையின் கற்புக்கனல் தாங்காது, அக்கினி ஓடிவந்து
இந்தகடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.
இதனாலேயே இந்த தீர்த்தம் ''அக்கினி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது. அக்கினி தீர்த்தம் என்ற பெயருக்கேற்ப இந்த தீர்த்தத்தில் நீராடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறது.
இந்த அக்கினி தீர்த்தக் கடல் ஆழமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால், இந்த அக்கினி தீர்த்தத்தில் குளிக்க எந்தவித நியமமும் கிடையாது. யாரும், எந்நேரமும் அக்கினி தீர்த்தத்தில் குளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் நாட்டில் வேறு எங்கும் கடல் ''அக்கினி தீர்த்தத்தில்'' இருப்பது போல் அமைதியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் ஆதி சங்கரர் வந்து நின்ற இடம் இருக்கிறது. இந்த அக்கினி தீர்த்தக் கடலில் குளிப்பது, கடலில் குளிப்பது போல் அல்லாமல் பெரிய ஏரியில் குளிப்பது போல் அமைதியாகக் குளிக்க முடியும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒரு புண்ணியம் ஆகும்.
இந்த தீர்த்தங்கள் யாவும் இயற்கையில் காந்த சக்தி மிகுந்தவையாகவே உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தக் கூடியதாகும். உடம்பின் அணுசக்தியை வலுப்படுத்தக் கூடியதும் ஆகும்.
இந்த தீர்த்தங்களின் மின்னோட்ட மகிமையைத் தங்களது ஞானத்தாலும், யோகத்தாலும் அறிந்த நமது முன்னோர்கள் இந்த தீர்த்தங்களை ஏற்படுத்தி, அதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள். இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் நீராடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகிறது.
உடல் பிணி தீருகிறது. பாவங்கள் தொலைகிறது. அனைத்து நலன்களும் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்களில் நீராடித்தான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பிறந்தனவாம்.
இதனால்தான் ''ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல'' என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். இப்பழமொழி, ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது எவ்வளவு சிறப்பு என்பதை எடுத்துரைக்கிறது.
அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து தீர்த்தமாடியதாக ''ஆனந்த ராமாயணம்'' கூறுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் நீராடுவது அவசியம் ஆகும். இங்கு, தங்குவதில் இருந்து உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.
ஆலயத்தின் உள்ளே உள்ள இருபத்தி இரண்டு தீர்த்தக் கிணறுகளிலும் குறிப்பிட்ட காசு கொடுக்க, அங்குள்ள பையன்கள் நமக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவார்கள். ஒவ்வொரு இந்துவும், ''காசி ராமேஸ்வரம்'' பயணம் மேற்கொள்வது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
இதனை மேற்கொள்ளும் முறையானது, முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி, ராமநாதரை வழிபட்ட பின்பு, இங்கிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு, பின்பு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வணங்கி, ''காசி ராமேஸ்வர'' பயணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் ராமேஸ்வரம் தீர்த்தமாட செல்லும் முறையானது முதலில் ராமநாதபுரத்தை ஒட்டி உள்ள ''உப்பூர் விநாயகர்'' கோவில் தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி தொடங்க வேண்டும். இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு முன், ராமர் இங்கேதான் நீராடிவிட்டு, சங்கல்பம் செய்து கொண்டு சென்றார்.
இதன்பின் தேவிபட்டினத்தில் கடலுக்குள் உள்ள நவ பாஷாண நவக்கிரகங்களை வழிபட்டு, அங்குள்ள கடலிலும், சக்கர தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்பு, திருப்புல்லாணி வந்து இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு, தனுஷ்கோடி வந்து சேது தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் வெளியே உள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் எதிரே உள்ள கடல் ஆகிய ''அக்கினி தீர்த்தத்தில்'' நீராட வேண்டும்.
பின்பு ஆலயம் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, பின்பு மீண்டும் திருப்புல்லாணி வந்து தீர்த்தமாடி, அன்னதானம் செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று அங்கு அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னன் சிலையை தரிசிக்க வேண்டும். இதுவே ராமேஸ்வரம் தீர்த்தமாடலின் விதிமுறையாகும்.
ராமேஸ்வரம் திருக்கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையில் திறந்திருக்கும். இதில் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கோவில்நடை சாத்தி இருக்கும். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை அன்று நாள் முழுவதும் பூஜையும், அர்ச்சனையும், தரிசனமும் பக்தர்களுக்கு உண்டு.
தினமும் காலை ஐந்து மணிக்கு நடைபெறும் ''திருவனந்தல் பூஜை''யில் முக்கிய அபிஷேகங்கள் உண்டு. இதில், ''மரகதலிங்கத்தை'' மூலவருக்கு முன்பாக வைத்து, அபிஷேகம் செய்வார்கள். இதை தரிசிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.
இத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, கட்டணத்திற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். இதேபோல், கங்கை தீர்த்தம் கொண்டு வருபவர்கள் கட்டணம் செலுத்தியே இறைவன் அபிஷேகத்திற்குக் கொடுக்க வேண்டும்.
இந்த தீர்த்த சொம்பு பித்தளை, வெங்கலப் பாத்திரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் இந்த ராமேஸ்வர தலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது, புத்திர பாக்கியத்துக்கான பரிகாரம், பிதுர்கள் தோஷம் போக்குதல் முதலியன சிறப்பான முறையில் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க, இந்தியாவின் தலை சிறந்த தீர்த்தமாகிய ''ராமேஸ்வரம்'' பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆலய நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ளாலம்.
இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ஒவ்வொரு இந்துவும் நீராட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
- முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
- அகல் விளக்கேற்றி தூப தீபம் காட்டி முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் வருமாறு:-
காலையில் எழுந்து, அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம்.
அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.
அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.
விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- கோவில் எதிரே உள்ள கடல், ஆதிசேது என்று அழைக்கப்படுகிறது.
- பூமியில் இருப்போருக்கு சந்திரனை பார்க்கமுடியாது.
திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்ய தலம் மிகவும் புனிதமானது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மனித உருக்கொண்டு, பூலோகத்தில் உள்ள புஷ்பவனக் காட்டுக்கு வந்தன. இவை, அங்கு மலர் பறித்து, இத்தலத்து சிவனைப் போற்றி வழிபாடு செய்தன.
கலியுகம் பிறந்தவுடன், ``இனி, நல்லதுக்கு காலம் இல்லை. அதனால், பூலோகத்தில் இருப்பது நல்லதல்ல...' என்று இறைவனிடம் கூறிவிட்டு, இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டு சென்றுவிட்டன.
பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் பக்கத்தில் உள்ள திட்டி வாயில் வழியாக வந்து, இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர், இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி, கதவை திறந்தனர்.
வேதங்கள் இங்கு தங்கிருந்து இறைவனை வணங்கியதால், இவ்வூர், ``வேதாரண்யம்'' என்று பெயர் பெற்றது. திருமறைக்காடு என்று தமிழில் சொல்வர். கடற்கரை ஓரத்தில் கோவில் இருக்கிறது.
சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சிவத்தலம்தோறும் சென்று, சிவனைப் போற்றி, பதிகம் பாடி வந்தனர். அவர்கள் ஒரே சமயத்தில் வேதாரண்யம் வந்தடைந்தனர். மக்கள் பக்கத்து வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வழிபட்டதை கண்ட அவர்கள் வருத்தம் அடைந்தனர்.
திருநாவுக்கரசர் பத்து பாடல்கள் (பதிகம்) பாடியவுடன், கதவு திறந்தது. பின்னர் கதவை மூடுவதற்கு ஒரே ஒரு பாடலை சம்பந்தர் பாட, கதவு மூடிக் கொண்டது.
இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினார், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம். இந்த கோவில் எதிரே உள்ள கடல், ஆதிசேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில், ஒருமுறை நீராடுவது ராமேஸ்வரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மாத மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிக விசேஷமானது. அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வோர் மட்டுமின்றி, மற்றவர்களும் புனித நீராடலாம்.
இங்கே சுவாமியும், அம்பாள் வேதநாயகியும் மணமக்களாக எருந்தருளியுள்ளனர். கருவறையில் லிங்க வடிவத்தின் பின்புறம் இந்த திருமணக் காட்சியை காணலாம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, நோயற்ற வாழ்வு பெற இவர்களை வணங்குவர். நாகப்பட்டினத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இவ்வூர் உள்ளது.
வளர்பிறைத் திதிகள்
அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0 பாகையில் காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனை பார்க்கமுடியாது.
அதற்குப்பின் சந்திரன் தினமும் சூரியனின் பார்வையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருக்கும். 15 -ம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது ராசி சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.
- தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜை.
- தர்ப்பண பூஜை முறைக்கு வெவ்வேறு விதமான சிறப்பு பெயரும் உண்டு.
தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது.
மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாக பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினை கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.
நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடி எல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாக பெற்று ஆசி அளிப்பார்கள்.
தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்த காரணத்துக்காக தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதை பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு.
அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளை சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவ துண்டு. ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.
நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக வித விதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனுதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.
தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக் கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.
ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.
பவானி கூடுதுறை
ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இதர 11 மாதங்களை விட இந்த மாதத்தில் அம்மனை வழிபட்டால் விசேஷ பலன் உண்டு என்று கருதப்படுகிறது. இதனால் ஆடிமாதங்களில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன.
இங்கு அம்மனை தரிசிக்க பெண் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். பவானி சங்கமேஸ்வரர்-வேதநாயகி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆடி வெள்ளிக்கு வரும் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து செல்வார்கள்.
ஆடி 18 அன்று பவானி கூடுதுறைக்கு புதுமண தம்பதிகள் வருகை தந்து தங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க அம்மனின் அருளாசி பெற்று செல்வார்கள். ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து செல்வார்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. பவானி சங்கமேஸ்வரர்& வேதநாயகி அம்மன்கோவில் தொலைப்பேசி:- 0456&230192.
- அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும்.
- தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு.
அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாகும். அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதிர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம்.
சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்னும், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.
தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.
- அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர்.
- புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை.
சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.
அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாக பேசப்படுவதற்கு காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும். உடல் நலம்பெறும்.
அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம்.
மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.
அரசங்குச்சிகளை கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடம் இருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது.
இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு "இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை' என்று பொருளாகும்.
கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கி சுற்றக் கூடாது, தொடக்கூடாது.
ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தை தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்தில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும்.
எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.
அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும், திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும், செவ்வாய்- தோஷங்கள் விலகும், புதன்- வியாபாரம் பெருகும், வியாழன்- கல்வி வளரும், வெள்ளி- சகல சௌபாக்கியங்களும் கிட்டும், சனி- சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.
மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.
சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.
"மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி
அக்கிரத சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம
இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்கவேண்டும்.
இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம், ஆடைகள் வாங்கி வழங்கலாம், மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம்.
குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பை கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு.
அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.
- அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது.
- தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது.
தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது. காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம் எனவே பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.
முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அன்று இருட்டாக இருந்தாலும் கூட அது நல்லநாளாகவே கருதப்படுகிறது.
- தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
- தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.
`கற்பகநாதர் குளம்' விநாயக தீர்த்தத்திற்கு `கடிக்குளம்' என்ற பெயரும் உண்டு. எனவே, இத்தலத்திற்கு `கடிக்குளம்' என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும். கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், `கற்பகநாதர் குளம்'என்றும், `கற்பகனார் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து இறைவன் பெயர், `கற்பக நாதர், கற்பகேஸ்வரர்' என்றும், அம்பாள் பெயர், `சௌந்தரநாயகி, பால சௌந்தரி'என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது. இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய `விநாயக தீர்த்தம்' (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.
ஒருவர் தமது முன்னோரிமன் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப்பூவாக மலர்ந்ததாம். அப்போது தான் தெரிந்தது.
இந்த தலமும், தீர்த்தமும் முக்தி கரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.
புனித நீராடல், தானம், தர்ப்பணம்
ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது.
சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. புனித நீராடல்
2. தானம்
3. தர்ப்பணம்
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.
இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்ததையும் ஒன்றுபடுத்தியதன் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.
தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.
- நீராடிவிட்டு நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
- கங்கை தீர்த்தமாகிய, `கங்காகூபம்' (நளகூபம்) உள்ளது.
திருநள்ளாறு ஆலயத்திற்கு சனி பகவான் தோஷ பரிகாரத்திற்காக செல்பவர்கள் முதலில் பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம் அட்ட திக்கு பாலகர் தீர்த்தங்கள், அகஸ்தியர் தீர்த்தம், அம்ஸ தீர்த்தம் முதலியவற்றில் நீராடிவிட்டு நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
நள தீர்த்தம் கோவிலுக்குச் சற்று தள்ளி உள்ளது. நளதீர்த்தத்தின் கரையில் விநாயகர் ஆலயம் உள்ளது. நளதீர்த்ததில் நீராடிவிட்டு, இந்த விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அங்கு நளனுக்காக சிசபெருமான் ஏற்படுத்திய கங்கைத் தீர்த்தமாகிய, `கங்காகூபம்' (நளகூபம்) உள்ளது.
இதில் நீராடி, புதுத்துணி உடுத்தி, விநாயகரை வழிபட்டு, பின், இறைவன், அம்பாள் சனிபகவான் ஆகியோரை வழிபட்டு, ஆலயத்தில் உள்ள காகத்திற்கு சோறு அளித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆலயத்தில் தங்கி, சனிக்கிழமை காலையில் இந்த தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
- மாசிமக பெருவிழாவும், ஆடிப்பூர திருக்கல்யாணமும் மிக சிறப்பு
- முருகர் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூஜித்த தலம்.
`திருமுதுகுன்றம்' என அழைக்கப்படும், விருத்தாசலம் `பழமலை நாதர் திருக்கோவிலில்' உள்ளது `மணிமுத்தாறு தீர்த்தம்'.
இத்தலத்து இறைவன் பெயர் `விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்' என்பதாகும். அம்பாள் பெயர், `விருத்தாம்பிகை, பெரிய நாயகி பாலாம்பிகை' என்பதாகும்.
இத்தலத்து மரம், `வன்னி' ஆகும். இத்தலத்து விநாயகர் `ஆழத்துப்பிள்ளையார்' என அழைக்கப்படுகிறார். இது ஒரு தேவார தித்தலம். இத்தலத்தை, அருணகிரி நாதர், குரு நமசிவாயர் சிவப்பிரகாசர், வள்ளலார் முதலிய மகான்கள் புகழ்ந்து பாடியுள்ளார்.
இத்தலத்தில் மாசிமக பெருவிழாவும், ஆடிப்பூர திருக்கல்யாணமும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட திருத்தலம் இது. முருகர் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூசித்த தலம் இது. சுந்தரர் இத்தலத்து இறைவனை வேண்டி பொன்னை பெற்று, இங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார்.
இத்தலத்திற்கு `விருத்தகாசி' என்ற பெயரும் உண்டு. இத்தலம் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் இறப்பவர்களின் உயிரை இறைவன் தன் தொடை மீது கிடத்தி மந்திர உபதேசம் செய்வார். அப்போது அம்மாள் தனது முந்தானையால் விசிறி இளைப்பாற்றுவார்.
அத்தகைய சிறப்புடைய இத்திருத்தலத்தின் தீர்த்தமாகிய மணிமுத்தாற்றில், இந்த ஆலயத்தின் வடக்குக் கோபுரவாயிலுக்கு நேரே உள்ள `வடபால் மணிமுத்தாற்றில்' நீராட வேண்டும். இவ்விடமே `புண்ணிய மடு' என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நீராடி, பிள்ளையார், இறைவன், அம்பாளை வழிபட முக்தி நிலை கிட்ட சிறந்தொரு பரிகாரமாகும்.
திருப்பூவனம் வைகை தீர்த்தம்
வைகைக் கரையில் அமைந்துள்ள இத்திருகோவிலுக்கு, வைகை ஆறே தீர்த்தமாக உள்ளது. இத்தலத்து இறைவன் பெயர், `புஷ்பவனேஸ்வரர், பூவன நாதர்' என்பனவாகும். அம்பாள் பயர், `சௌந்தர நாயகி, மின்னனையாள்' என்பதாகும்.
தல மரம், பாலமரம் ஆகும். தேவார பாடல் பெற்ற திருத்தலம், இது. இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.
இங்கு பங்குனியில் பெரும் விழா நடைபெறுகிறது. காசிக்குச் சமமான தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தம், நிறைவான தரிசனம் இது.
பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து, இரசவாதம் செய்து, அவளுக்கு பொன்னைக் கொடுக்க, அதனை வைத்து அவள் இங்கு சிவலிங்கம் அமைத்து, வழிபட அதுவும் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு ஆசையுடன் அந்த சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம். இவ்வாறு அவள் கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.
இக்கோவிலில் `பொன்னனையாள்', `சித்தர்கள்' ஆகியோர் உருவங்கள் உள்ளன. திருவாசகத்திலும், கருவூர்த் தேவரின் திவிசைப்பாவிலும் இத்தலம் போற்றப்படுகிறது.
பிரம்மன் வழிபட்ட தலம், இது. இத்தலத்தில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருக்கும் வைகை மணல், சிவலிங்கமாக தோன்றியதால், மூவரும் மறுகரையில் இருந்தே இக்கரையை மிதிக்க அஞ்சி வணங்க, அதற்கு இறைவன் அவர்கள் நேநேர கண்டு வணங்குவதற்கு ஏதுவாக, நந்தியை விலகச் செய்தருளினார். அதனால் இத்தலத்தில் இன்றும் இந்த நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.
வைகையின் மறுகரையில் இருந்து அவர்கள் தொழுத இடம், `மூவர் மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம்' என அழைக்கப்படுகிறது.
இத்தலத்து தீர்த்தமான வைகை ஆறு வடக்கு நோக்கி, `உத்தரவாகினி'யாக இங்கு ஓடுகிறது. எனவே, இந்த தீர்த்தம் விசேஷமாகக் கூறப்படுகிறது.
இறந்தோரின் எலும்புகளை இந்த இடத்தில் புதைப்பதால், அவர்கள் நற்கதியை அடைவார்கள். அத்தகைய சிறப்புமிக்கது இந்த வைகை தீர்த்தம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்